ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2013

ஊழ்வினை - ஞானகுருவின் விளக்கம்

ஊழ்வினை என்பது
நாம் பூமியிலே எத்தகைய வித்தை விதைக்கின்றோமோ
அந்த வித்தின் தன்மை கொண்டு
அது இயங்கும் தன்மை பெற்றுவிடும்.

ஆக மனிதனானபின், நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தும் ஓர் வித்து. ஏனென்றால், மனிதனுக்குள் எண்ணும் எண்ணங்கள் அது ஒவ்வொரு இணைப்பிலும் சேர்க்கப்படும் பொழுது, அது முழுமையான வித்தாக மாறுகின்றது.

இந்த மனிதனுக்குள் விளைந்த உயிரின் ஆற்றல், நாம் சுவாசிக்கும் எண்ணங்களும், நம் உடலுக்குள் இருக்கும் மனமும், எதிர் நிலையாக எண்ணும் உணர்வுகளும், மூன்றும் சேர்ந்தால் ஒரு எண்ண வடிவமாக உருவாகி, வித்தாக உருவாகிவிடுகின்றது.

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பகாந்தம் மற்ற உணர்வின் சத்தைக் கவர்ந்து கொள்ளும் பொழுது, அதனின் சத்தாக அது இயங்கத் தொடங்கி அதனின் நிலையாக வளருகின்றது. இதைப் போலத்தான்,
மனிதனுக்குள் இந்த உணர்வின் நிலைகள்
நமக்குள் பல கோடி உணர்வின் சத்துக்கள் இருந்தாலும்,
எதனின் நினைவு கொண்டு பிறரின் நிலைகளை எண்ணுகின்றோமோ,
அவர் உடலிலிருந்து வரும் உணர்வு
நம் நினைவுடன் கலக்கப்படும் பொழுது,
நம் உயிரின் தன்மையில் கலக்கப்பெற்று,
அதற்குள் இயங்கும் உணர்வின் ஆற்றல் கொண்டு,
ஒரு எண்ணத்தின் நிலையாக உருவாகி,
அது வெளியிடும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவருமேயானால்
நாம் எப்படி ஒரு வித்தை விதைக்கின்றோமோ
அதைப் போல இந்த எண்ண வித்தின் தன்மை
எண்ணங்களாக வித்தாகப் பாய்கின்றது.

அதை மற்றவர்கள் கேட்டு நுகரும் பொழுது, அந்த உணர்வின் தன்மைக்குள் ஊடுருவி, ஊழ்வினையாக அந்த வித்து மற்றவர்களுக்குள்ளும் பதிவாகிவிடுகின்றது.

நமது பூமியில் ஒரு வித்து தவறி வீழ்ந்தால், அந்த வித்துக்குள் எந்த உணர்வின் சத்தோ அதைக் காற்றிலிருந்து கவர்ந்து, தன் நிலைகளில் மரமாக வளர்கின்றது.  

எந்த பூமியில் விளைய வைத்தோமோ அது காற்றுக்குள் மறைந்திருந்தாலும் தன் இனத்தின் சத்தைக் கவர்ந்து, அந்த உணர்வின் தன்மை கொண்டு செடி வளர்ந்து, தன் இனமான வித்தை வளரச் செய்கின்றது.

இதைப் போன்றுதான், நாம் எண்ணும் பொழுது மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மனிதனுடைய எண்ணங்கள் நமக்குள் வித்தான நிலைகளை அடைந்து, அந்த உணர்வின் தன்மை
ஊழ்வினையாகப் பதிவு செய்துவிட்டால்,
அதை மீண்டும் நினைக்கப்படும் பொழுது,
அந்த நினைவுகளை தன் உணர்வுகளைக் கிளர்ந்துகொண்டு,
அது தூண்டிக் கொண்டேயிருக்கும்.

இதைப் போன்றுதான், நமது வாழ்க்கையில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எலும்புக்குள் ஊழ்வினையாக, மனிதனின் எண்ணச் செயல்கள் வித்துக்களாகப் பதிந்துவிடுகின்றது.