ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2013

தற்கொலை செய்பவர்களின் நிலை கடைசியில் என்ன ஆகும்?

1. தற்கொலை செய்பவர்களின் நிலை
மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே சலிப்பு, சஞ்சலம், சங்கடம், வெறுப்பு, வேதனை, குரோதம், கோபம், இவையனைத்தும் மனிதனுடைய உணர்வுக்குள் தாங்க முடியாது வந்துவிட்டால்,
தற்கொலை என்று தனக்குத்தானே தண்டனை கொடுத்து,
இந்த உடலை அழித்திடும் நிலையிலிருந்து விடுபடவேண்டும்.

இந்த உடலை அழித்தாலும், அழித்திடும் உணர்வுகள் அவருக்குள் சேர்ந்து, அந்த உயிருடன் சேர்ந்து, அந்த உடலுக்குள் உயிரை அழிக்கும் பொழுது எத்தகைய வேதனைப்பட்டனரோ, அதே வேதனை அடுத்த உடலுக்குள் சென்று அதனையே உருவாக்கி, அதனின் வேதனையை தனக்குள் சுவாசித்துச் செயல்படுத்தும்.

உதாரணமாக, ஒரு கொடிய விஷத்தை மருந்தாகச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் சேர்த்துக் கொண்ட அந்த வினை, மனிதனுடைய எண்ண அலைகள் மறையும் பொழுது,
விஷம் சாப்பிட்டு உடலைவிட்டுப் பிரிந்த உயிரான்மாவில்
உணர்வுகள் அனைத்தும் நஞ்சு கலந்தபின், உடலை இயக்காது
உயிர் நஞ்சு கொண்ட உணர்வை அழைத்துச் செல்கின்றது.

அப்படிச் சென்ற அந்த ஆன்மா இந்த நஞ்சை உட்கொண்டபின் எப்படி வேதனைப்பட்டதோ, துடித்ததோ, பிரண்டதோ, அதே உணர்வின் அலைகள் அங்கே வரப்பட்டு, உயிருடன் வேதனைப்பட்டுக் கொண்டயிருக்கும்.

ஆனால் விஷத்தை உட்கொள்ளும் பொழுது, யார் மீது எண்ணத்தைச் செலுத்தினரோ, பாசத்தால் தன் பிள்ளை மீதோ, அல்லது நண்பர்கள் மீதோ,
நண்பர் என்ன நினைப்பார் என்று
கடைசி நேரத்தில் “அவர்களிடம் சொல்லாமல் செய்கின்றோமே” என்ற நினைவு வரும். நஞ்சினை உட்கொண்டால் இந்த எண்ண அலைகள் அதிகமாகக் கூடும்.
2. தற்கொலை செய்த ஆன்மா, அடுத்த உடலில் சென்றால் அதையும் வீழ்த்தும்
 எந்த நண்பன் மேல் இந்த எண்ணங்கள் வருகின்றதோ, அந்த உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு உயிரான்மா வெளியில் வரும். அப்பொழுது யாருடைய உணர்வு இதனுடன் கலந்ததோ இது அவருடைய ஈர்ப்புக்குள் சென்றுவிடும்.

இப்படி இறந்துவிட்டார்களே என்று எண்ணினால் போதும், இந்த உயிரான்மா அங்கே அந்த உடலுக்குள் சென்று, இனம் புரியாத நிலைகளில் அடிக்கடி மயங்கி விழும்.

வாயில் நுரை தள்ளி இறந்திருந்ததென்றால் அதைப் போன்று நுரை வரும். விஷத்தைக் குடிக்கும் பொழுது, எப்படி “வெடுக் வெடுக்” என்று சுண்டியதோ அதைப் போன்ற நிலைகள் எல்லாம் வரும்.

ஆனால், சிறிது நேரமே இருக்கும். அடுத்த கணம் எழுந்துவிடும். ஏனென்றால்,
உடலுக்குள் வந்த அந்த உயிரான்மா
அதற்கு உணவு தேவைப்படும் பொழுதெல்லாம்
இந்த உணர்வைத் தூண்டி
அதே நஞ்சினை உட்கொண்டுதான் வளரும்.

அதே சமயத்தில், உயிர் அந்த உடலுக்குள் நின்று அதுபட்ட வேதனையை இது உருவாக்கி, அந்த உடலில் இருந்து தன் உடலுக்கு உணவாக உட்கொள்ளும்.

எந்த உடலுக்குள் போனதோ, அந்த உணர்வின் தன்மை சிறுகச் சிறுக வர, அந்த உடலுக்குள்ளும் அந்த நஞ்சு கலந்து, அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த உடலையும் வீழ்த்திவிடும்.
3. கடைசியில் பாம்பின் ஈர்ப்புக்குத்தான் செல்ல முடியும்
அந்த உடலை வீழ்த்தி வந்தபின், அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி அடுத்து, இது மனித உடலுக்குள் போகவே போகாது. ஆகவே, இந்த வேதனை என்ற நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு வந்தபின், நஞ்சை உணவாக உட்கொள்ளும் தேளோ, பாம்போ அதன் ஈர்ப்புக்குச் செல்லும்.

தேள் கடுமையான நஞ்சு கொண்டது. அதே மாதிரி கட்டுவீரியனோ ஒரு மனிதனைக் கடித்துவிட்டால், ஒவ்வொரு கட்டுக்கும் மயக்கம் வரும். இதைப் போல, இந்த நஞ்சு கொண்டவர்கள் எந்த நஞ்சின் தன்மையை உணவாக உட்கொண்டு மடிந்தனரோ,
இந்த உணர்வின் நினைவலைகளுக்கு
தன் வாழ்க்கையின் நிலைகள் எண்ணும் பொழுதெல்லாம்
இந்த மயக்க நிலை உணர்வுகளைத் தூண்டும்,
மயக்கமாகும்.

உணர்வுகள் உயிரான்மாவில் வேதனைப்பட்டே தீரவேண்டும். இந்த உடலை மாற்றவே முடியாது. எந்த உடலுக்குள் சென்றாலும், இந்த வேதனை கொண்ட உயிராத்மா வினைக்கு நாயகனாக வினையின் செயலாக உயிருடன் ஒன்றி வேதனைப்பட்டுக்கொண்டே இருக்கும்.
நாம் இந்த மனித உடலில் தெளிந்து, அறிந்து அழுக்கினை நீக்காவிட்டால், அந்த உணர்வின் தன்மை உயிரான ஈசனுக்குக் கோபத்தைத் தூண்டுவது போல நம் உடலான சிவனுக்கும் வேதனைப்படச் செய்யும். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.