ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2013

நம் உடலும் ஒரு நிலம் தான்

1. நம் உடலும் ஒரு நிலம் தான்
இன்று நாம் வயலில் ஒரு பக்கம் மிளகாயை விதைக்கின்றோம், ஒரு பக்கம் சோளத்தை விதைக்கின்றோம், ஒரு பக்கம் எள்ளை விதைக்கின்றோம், ஒரு பக்கம் நிலக்கடலையை விதைக்கின்றோம் என்றாலும் ஒரே நிலம்தான்.

நாம் சிறுகச் சிறுகப் பிரித்துப் போட்டாலும், நாம் எந்த இடத்தில் எந்த வித்தினைப் போட்டோமோ, அந்த வித்து, தனக்குள் இருக்கும் உணர்வின் சத்தின் துணை கொண்டு, பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் தன் இனமான சத்தைக் கவர்ந்து, மிளகாய்ச் செடியாக, எள்ளுச் செடியாக, கடலைச் செடியாக, சோளமாக விளைகின்றது. இந்த நிலம் எப்படியோ, அதைப் போன்று நம் உடலும் ஒரு நிலமே.

நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ, அந்த குணங்கள் அனைத்தும் ஊழ்வினையாகப் பதிவாகி, அது ஒரு வித்தாக மாறிவிடுகின்றது. அந்த வித்தின் சத்தான நிலைகள் (அந்த உணர்வுகள்) நமக்குள் கிளர்ந்து கொண்டேயிருக்கும்.
2. பரமாத்மா ஆன்மா, ஜீவாத்மா, உயிராத்மா
அந்த உணர்வின் சக்தி,
நமது உடலிலிருந்து இழுக்கப்படும் பொழுது,
காற்றிலே இருக்கும் தன் இனமான சத்தை
நமதுஆன்மாவாக” மாற்றிவிடும்.
எந்த உணர்வு அதிகமோ, அது முன்னிலையில் இருக்கும்.

உதாரணமாக, நாம் ஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் காரம், புளிப்பு, உப்பு, துவர்ப்பு, இனிப்பு, எல்லாவற்றையும் சேர்க்கின்றோம். இதில் எது அதிகமாகின்றதோ, அதன் மணமும் ருசியும்தான், முன்னிலையில் இருக்கும்.

இதைப் போலத்தான், நமது உடலுக்குள் நாம் எந்த எண்ணத்தைப் பதிவு செய்தாலும், பதிந்த அந்த உணர்வுகள் காற்றிலிருந்து தன் இனமான சத்தைக் கவர்ந்து, தன் ஆன்மாவாக மாற்றும்.

நமது பூமி ஒரு பரம். நம் பூமிக்குள் படர்ந்து கிடக்கும் நாம் இடும் மூச்சலைகள், தாவர இனத்திலிருந்து வெளிப்படும் சத்துக்கள், பாறைகளில் இருந்து வெளிப்படும் சத்துக்கள், விண்ணிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் அனைத்தும்,
இந்தப் பரமான எல்லையில் “பரமாத்மாவாக”,
பல உணர்வுகள் இங்கே பரமாத்வாகப் படர்ந்து கொண்டிருக்கின்றது.

நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ, அதை நம் உயிர் ஜீவனாக்கி, அந்த உணர்வின் சத்து வித்தாக, நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்துவிடுகின்றது.

பதிந்த உணர்வின் எண்ணங்கள், அது மீண்டும் உணர்வுகளைத் தூண்டி, இந்தப் பரமாத்மாவிலிருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றும்.
நமது ஆன்மாவாக மாற்றிவிட்டால்,
அதை நம் உயிர் ஜீவன் பெறச் செய்து,
நமது உடலுக்குள் “ஜீவான்மாவாக” மாற்றுகின்றது.

நம் உடலில் ஜீவாமாக்களாக விளைந்தது, அதில் வடித்துக் கொண்ட சத்து உயிரோடு இணையும் பொழுது அது ”உயிராத்மாவாக” மாறுகின்றது. ஆக, உயிராத்மாவில் விளைந்த சத்துக்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கும்.

நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, இந்தப் பரமாத்மாவில் படர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தியை நம் ஆன்மாவாக மாற்றி, நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களையும் பெறச்செய்வோம்.

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றுவோம்.
இந்த மனித உடலுக்குப் பின்,
அழியா ஒளிச் சரீரம் பெறுவோம், எமது அருளாசிகள்.