ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 12, 2013

விநாயக சதுர்த்தி அன்று விரதம் எது?

விநாயக சதுர்த்தி அன்று விரதம் எது?
நமது வாழ்க்கையில் தீயதை நுகராமல், அப்படி வந்தது என்றாலும்,
அதனை அகற்றிடும் நிலையாக எண்ணத்தினைச் செலுத்தி
நமக்குள் தீய வினைகள் அகன்று,
அன்றைய நாள் யாரையும் தவறாக எண்ணாது
நமக்குத் தீமை செய்தவர்களை
தீது செய்தார்கள் என்று எண்ணாது,
குழந்தைகள் மேல் அன்பால்
படிக்கவில்லையே என்ற ஏக்கத்தைச் செலுத்தாது,
நம் குடும்பம் நலிந்து கொண்டே இருக்கின்றதே என்று
எண்ணாது இருப்பதுதான் விநாயக சதுர்த்தி விரதம்.

யார் யார் மீது நாம் பகைமை கொண்டோமோ, அந்தப் பகைமையின் நிலைகள் அனைத்தையும் நீக்க வேண்டும். இதுதான் விநாயக சதுர்த்தி. அந்தப் பகைமையை எவ்வாறு நீக்க வேண்டும்?

மெய்ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க உணர்வினை தனக்குள் எண்ணத்தால் பருகி, அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்து, அதைப் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வு கொண்டு, அந்த மெய்ஞானிகளின் உபதேசங்களைக் கேட்டறியும் பொழுது, அந்த உணர்வுகள் வித்துக்களாக உருவாக்கப்படுகின்றன.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தீயவினைகளை அகற்றி, நல்வினையைச் சேர்த்திடும் மெய்ஞானியின் உணர்வை அவருக்குள் வித்தாக விளைய வைத்து வளர்த்த அந்த உணர்வின் சத்தை, இப்பொழுது உபதேச வாயிலாக வித்துக்களாக வெளிப்படுத்துகின்றோம்.

அவர் சொன்ன வித்தினைக் கூர்ந்து கவனித்து அந்த உணர்வைப் பெறவேண்டும். அதை எண்ணி தூண்டச் செய்து, உங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அதன் மேல் நினைவைச் செலுத்தி,
அந்த வித்தின் தன்மையை விளையவைக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் வித்து கிடைக்க வேண்டும் என்ற உணர்வினை, உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது உங்களுக்குள் வளர வளர, தீமையை நீக்கும் உபாயங்களும், ஆற்றல்களும்  நீங்கள் பெறுவீர்கள். இந்த வாழ்க்கையில் ஏகாந்தநிலை பெறலாம். எமது அருளாசிகள்.