ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2024

தீமையை நீக்கும் ஆறாவது அறிவே நமக்குப் பாதுகாப்புக் கவசம்

தீமையை நீக்கும் ஆறாவது அறிவே நமக்குப் பாதுகாப்புக் கவசம்

 

இயற்கையின் செயலாக்கத்தைத் தன்னில் தான் கண்டுணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக “அகஸ்தியன்… துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக” ஒளியின் சுடராக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

அதனின்று வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்தவர்கள் அனைவரும் அதன் வழிகளில்
1.இந்த வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நிலைகளை வென்று
2.இருள் சூழா நிலை கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு
3.இன்றும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவின் தன்மையை ஏழாவது நிலைகள் பெற்று
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள் சப்தரிஷிகள்.

அவர்கள் கண்டறிந்த உணர்வின் சக்திகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை எடுத்துக் கொண்டால்… பிற மண்டலங்களில் இருந்து வருவதை நட்சத்திரங்கள் கவர்ந்தாலும் மற்ற கோள்கள் தனக்குள் கவர்ந்தாலும்… விஷம் கொண்ட கோள்கள் எத்தனை எத்தனையோ… விஷங்களை உருவாக்கும் கோள்கள் எத்தனையோ…!

இவை அனைத்தும் உமிழ்த்தி வரும் நிலைகளைச் சூரியன் வடிகட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக வாழ்கின்றது.

அதிலே உயிரணுவாகத் தோன்றியவன் பிற தீமையிலிருந்து விடுபட்டு… விடுபட்டு… விடுபட்டு… மனிதனாக உருவாக்கப்பட்டு மனிதனில் ஆறாவது அறிவாக வளர்ச்சி அடைந்து வந்தது.

1.அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை நீக்கி நீக்கி…
2.தீமையற்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்து இந்த உடலை விட்டுச் சென்ற பின்
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்ட துருவ மகரிஷியின் நிலைகளை நாமும் அடைய முடியும்.

இது எல்லாம் ஞானிகள் நமக்குக் காட்டியது. அதை அனைவரும் நாம் பெறுதல் வேண்டும்.

உங்களுக்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்கள் அனைத்தும் தெய்வங்களே. மனிதனாக உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் பெரும் சக்தி கொண்ட தெய்வங்களாக உங்களுக்குள் இருக்கின்றது.

உங்களை எவ்வாறு காக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ அது உங்களுக்குள் கடவுளாக நின்று உயிர் உருவாக்கி உள்ளது… மனித உடலை…!

1.மனிதனின் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாக இணைத்துத் தீமைகள் அகற்றிடும் ஆறாவது அறிவாக “முருகு…!”
2.மாற்றியமைக்கும் சக்தியாக இருக்கிறது… என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது சாஸ்திரங்களில்.

அதன் வழி நாம் தெளிவாகச் செய்ய வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் எவ்வாறு பெற முடியும்…? என்ற தத்துவத்தைக் காட்டியுள்ளார்கள் நம் ஞானியர்கள்.

ஆதியிலே முதல் மனிதன் அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்தான்… தன் உடலில் அதைச் சிருஷ்டித்தான்… வளர்த்தான்… துருவ மகரிஷி ஆனான்… வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமியில் பரப்பிக் கொண்டுள்ளது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவரொருவர் தங்கள் உடலுக்குள் அதிகமாக நுகருகின்றனரோ
2.அவன் வழியிலே அங்கு அழைத்துச் செல்கின்றது… ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக.

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினை பிரித்து விட்டு ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது. இதைப் போன்று தான் உயிரின் தன்மை சூரியனாக உள்ளது.

1.அல்ட்ரா வயலட் என்ற நஞ்சு சூரியனுக்குப் பாதுகாப்பாக நஞ்சினை நீக்கிடும் நிலைகள் பெற்று
2.உணர்வினை ஒளியாக மாற்றிடும் நிலைகளை அது (சூரியன்) எப்படிப் பெறுகின்றதோ
3.அது போல் நாம் எத்தகைய தீமைகளைக் கண்டறிந்தாலும் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் பெற்று
4.தீமைகளை அகற்றித் தூய்மை பெறும் சக்தி பெற்றது தான் மனிதனுடைய ஆறாவது அறிவு.

அதாவது… தீமைகளை பிரிக்கும் எண்ணங்களை நாம் நுகர்ந்து தீமைகளை அகற்றிடும் செயலாக வருகின்றது நம் ஆறாவது அறிவு – கார்த்திகேயா.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிர் மனிதனாக உருவாக்கி விட்டால் முழு முதல் கடவுள். ஓம் என்ற பிரணவத்திற்கு உரியவன் என்றும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

ஆகவே அருள் உணர்வின் துணை கொண்டு நம் ஆன்மாவில் படும் தீமைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே விநாயகர் தத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்தார்கள் ஞானிகள்.