தன்னை மறந்து செய்யும் தியானம் சரிதானா…! அது சமாதி நிலையா…?
கேள்வி:-
பல வருடங்களுக்கு முன் தியானம் செய்வதைப் பற்றிச் சில புத்தகங்களைப் படித்தேன். ஆனால் அதிலே கொடுக்கப்பட்ட தியான முறை எனக்குச் சரியாக விளங்கவில்லை.
ஒரு குருவைச் சந்தித்துப் பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. வேறு ஒரு மார்க்கத்தின் வழி என்று ஒருவர் தியானம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தார்.
அதன்படி சில காலம் தியானம் செய்து வந்தேன். 20 30 நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தால் அப்படியே என்னை மறந்து இருப்பேன். கடிகாரம் ஓடுவது எனக்குத் தெரியாது.
பிறகு திடீரென்று கவனமும் குறைந்து மூச்சு விடுவதை நிறுத்தி விட்டேனே…! என்று தோன்றும். “இதுதான் சமாதி நிலை” என்று எண்ணி இருக்கின்றேன்.
ஆனால் இது எனக்குத் திருப்தியாக இல்லை. நான் செல்லும் பாதை சரியானதுதானா…? இல்லாவிட்டால் குருநாதர் என்னைச் சரியான பாதையில் நடத்திச் செல்ல வேண்டுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
அதே போன்று பலர் எழுதியுள்ள ஆன்மீக சம்பந்தமான புத்தகங்களைப் படிக்கலாமா…? கூடாதா…? என்பதையும் விளக்கவும். எதைப் படிக்கலாம்…? எதைப் படிக்கக் கூடாது…?
ஈஸ்வரபட்டர் பதில்:-
உன் நிலை பதப்படுத்திய… பயிர் செய்வதற்குகந்த ஒரு நிலத்தை போன்றது. அந்தப் பலனைப் பெறும் வழியைத் தான் இனி அறிந்து கொள்ள வேண்டும்.
சத்தியத்தின் சக்தி தான் நாம் அனைவருமே. அச்சக்தியின் ஸ்வரூப நிலை பெற்றது தான் எல்லாமே. அவரவர்கள் எண்ணத்தில் இருந்து தான் அவரவர்களின் வழியும் செல்கின்றது.
1.ஏனெனில் உயிரணுக்களாக என்று நாம் தோன்றினோமோ அந்த நாளிலிருந்து
2.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் நம் எண்ணம் சுற்றுகின்றது.
ஒவ்வொரு உயிரணுவிற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. ஒன்றைப் போன்ற இன வர்க்கங்களுக்கும் அதற்கென்று சில குண நிலைகள் உண்டு.
அதைப்போல ஒவ்வொரு உயிருக்கும் அதன் ஜீவ சக்தி உண்டு.
1.ஒன்றைப்போல் ஒத்த நிலையில் எதுவும் இருந்திடாது.
2.ஒவ்வொரு ஜீவ உயிரும் ஒவ்வொரு உடல் பிம்பம் எடுத்து மாறுபடும் நிலையில்
3.அந்த உயிரணு என்னும் ஆத்மாவுடன் ஜீவசக்தியும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது.
எப்படி சப்த அலைகளும் சுற்றிக்கொண்டே உள்ளனவோ அதைப் போன்ற ஜீவ சக்திகளும் சுற்றிக்கொண்டே உள்ளன.
இந்தப் 15 வருடத்தில் வந்ததல்ல உன் தியான நிலை. உன்னுடைய உயிரணு உதித்த நாள் கொண்டே உன்னுடனே வருவது தான் உன் நிலையும் இன்று.
வந்த நிலையை வழிநடத்தி
1.சமாதி நிலையிலிருந்து மீண்டு
2.இனி தியானத்தில் அமரும்போது நீங்கள் இந்த உலகில் அமர்ந்துள்ளது போல் எண்ணி
3.உங்களுடைய எண்ணத்தை மகரிஷிகள் ஞானிகள் பால் செலுத்தி அவர்கள் சக்தியை ஈர்த்து
3.உங்களுடைய உயிராத்மா உள்ள இடத்தில் அமர்ந்துள்ள நிலையைப் போல் எண்ணி
4.உங்கள் எண்ணம் அனைத்தையும் ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அதே நிலையில் தியானித்து
5.மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் சக்தியை உங்கள் உயிராத்மாவிற்கு ஊட்டமாக ஏற்று
6.அந்நிலையில் பல உண்மைகளை உங்கள் தியானத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் அறிந்த உண்மைகளை இந்த உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் வெளிப்படுத்தலாம்.
நாம் எடுத்த பிறவிப் பயனை இந்த உலக மக்களுக்கு நல்வழியில் உணர்த்தும் வகையில் ஒவ்வொருவரும் அவர்கள் வழியை நல்வழியாக்கி அவர்களை சார்ந்தோரையும் அந்த நிலைப்படுத்தி இன்று கறையுடனே வாழ்ந்திடும் இந்த கலியின் மக்களைக் கரையேற்றுங்கள்.
அந்த நிலைக்காகத் தான் யான் பல நிலையில் பலரின் வழியினில் உணர்த்துகின்றேன்.
பல நூல்களைப் படிக்கலாமா…? என்ற வினாவிற்கு ஏன் மனதைச் சஞ்சல படுத்துகிறீர்கள்…!
1.அனைத்து நூலையுமே படித்திடலாம்
2.அந்த நிலையின் உண்மையை நாம் சொல்லும் தியானத்தில் அறிந்து கொள்ளலாம்.
3.அவரவர்கள் எண்ணத்தை வெளியிட்டுள்ளார்கள்… “அதை அறிந்து நாம் ஏற்பதுவே உத்தமம் ஆகும்…”