எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?
பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கப்படும் பொழுது “இப்படித் தவறு செய்கின்றார்களே…” என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த நேரத்தில் “அவர்கள் தவறிலிருந்து விடுபட வேண்டும்…” என்று நாம் எண்ண முடியவில்லை.
அதற்குண்டான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலையாகத்தான்
1.உடல் அழுக்கையும் துணி அழுக்கையும் தினசரி போக்குவது போன்று
2.வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நம்மை அறியாது வந்து சேரும் அழுக்கைப் போக்க
3.விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
4.நாம் கேட்டறிந்த தீமைகளைத் தூய்மைப்படுத்தும்படி… ஆன்மாவைத் தூய்மைப்படுத்தச் சொன்னார்கள் ஞானிகள்.
பல முறை இவ்வாறு செயல்படுத்த… இந்த வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் எண்ணுவதற்கு நேரமில்லை. இருப்பினும்
1.என்னைப் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர வேண்டும்.
2.அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மகிழ்ச்சி பெற வேண்டும்
5.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
6.நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரிடம் கேட்டால் ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய...”
ஓ… …ம் நமச்சிவாய ஓ… …ம் நமச்சிவாய என்று வெறும் வாயில் சொல்வதில் பொருள் இல்லை. அது வெறும் சொல்.
காரணம்… நாம் எந்த உணர்வினை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது ஓ…ம் நமச்சிவாய…! அந்த அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வினை நமக்குள் சிவமாக்க (உடலாக) வேண்டும்.
ஆக…. எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?
சாஸ்திரங்களில் ஓ…ம் என்றால் பிரணவம் என்று காட்டப்பட்டுள்ளது. “அதையே சொன்னால் ஜீவன் வந்துவிடும்” என்று தவறான வழிகளில் ஜெபித்துக் கொண்டுள்ளோம்.
அவன் சொன்ன உள் பொருளே… வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கிட “மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது…”
1.நமது உயிர் அதை ஓ… என்று அதைப் பிரணவமாக்கி
2.ம்… என்று நம் உடலாக ஆக்குகின்றது
அதாவது… மகரிஷிகளின் அருள் சக்திகளை உன் உடலாக்கு உனக்குள் அதை ஜீவ அணுவாக ஆக்கு என்று தான் காவியத்தைப் படைத்துள்ளார்கள்.
ஆனால் வெறுமனே ஓ… …ம் நமச்சிவாய என்று சொன்னால் “சிவன்” தன்னையே சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று… எதையாவது ஓடி வந்து செய்வார் என்று “இப்படிப்பட்ட நம்பிக்கையை” ஊட்டி விட்டார்கள்.
சந்தர்ப்பத்தில் ஒருவன் விபத்துக்குள்ளாகின்றான். “இப்படி ஆகிவிட்டதே” என்று பதட்டமாகி வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது ஓ…ம் நமச்சிவாய. பய உணர்வுகளை எடுக்கும் பொழுது அது உடலாக… சிவமாக ஆகிவிடுகிறது.
அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது.
உன் உயிர் நீ நுகர்ந்ததை எவ்வாறு உடலாக ஆக்குகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.
1.நடந்த விபத்தை கண்கள் உற்றுப் பார்க்கும்படி செய்தது… அந்த உணர்வினை கவரும்படி செய்தது
2.உயிர் ஓ… என்று பிரணவமாக்குகின்றது உணர்வினை உனக்குள் உணர்த்துகின்றது
3.உணர்வினை உடலாக (சிவமாக) உறையச் செய்கின்றது என்று தான் சாஸ்திரங்கள் தெளிவாக நமக்குக் காட்டியுள்ளது.
நாம் யாரும் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பத்தில் தான் அந்த விபத்து நடந்தது. வேண்டுமென்று அவன் விழுகவில்லையே…! அவன் வாழ்க்கைக்குச் சென்றான்… எதிர்பாராது வண்டி மோதுகின்றது… அடிபட்டு அவன் துடிக்கின்றான்.
அவன் உடலிலிருந்து துடித்து வெளிப்படுத்தும் உணர்லைகளைச் சூரியன் கவர்கின்றது… அலைகளாகப் பரப்புகின்றது.
நம் கண் அவனைப் பார்க்கின்றது… உணர்வினை கருவிழி (படமாக) பதிவாக்குகின்றது. அவன் வெளிப்படுத்திய அலைகளைக் கண்ணின் காந்தப்புலன் நமது ஆன்மாவாக மாற்றி… சுவாசிக்கும்படி செய்து… உயிரிலே பட்ட பின் உணர்த்துகின்றது… உடலில் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.
ஆக நாம யாரும் தவறு செய்யவில்லை… நம்முடைய புலனறிவு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது… தீமை என்று உணர்த்துகின்றது.
ஆனால் ஆறாவது அறிவின் துணை கொண்டு “அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமே…!”
தீமைகளிலிருந்து விடுபடுவற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் காட்டிய வழிப்படி…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று “உயிருடன் ஒன்றினால்” ஓ…ம் நமச்சிவாய.
2.அவன் (மகரிஷி) தீமைகளை எப்படி அகற்றினானோ “சிவாய நம ஓ…ம்” நம் தீமைகளை அகற்றச் செய்கின்றது.
நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் இது ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்.
1.அந்த அரும் பெரும் சக்திகள் நம் உடலாகின்றது
2.மற்றவரின் தீமைகளை அகற்றும் சக்தியாக நம்மிடமிருந்து வெளிப்படுகின்றது.
இதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.