ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2024

அன்பு பண்பு பரிவு கொண்டு வாழ்ந்தாலும்… அந்த நல்ல குணங்களைக் காக்கும் சக்தியை நாம் அடிக்கடி எடுக்க வேண்டும்

அன்பு பண்பு பரிவு கொண்டு வாழ்ந்தாலும்… அந்த நல்ல குணங்களைக் காக்கும் சக்தியை நாம் அடிக்கடி எடுக்க வேண்டும்

 

மனிதனாக பின் அன்பும் பண்பும் கொண்டு பாசத்துடன் நாம் வாழ்ந்தாலும் பிறர்படும் துயரத்தையும் அந்தத் துயரச் செயல்களைச் செயல்படுத்துவோரைப் பார்ப்பதும் பிறரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவரையும் நாம் காண நேருகின்றது.

அவர்களை உற்றுப் பார்க்கும் பொழுது “பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றான்” என்ற இந்த உணர்வினை நாம் அறிந்தாலும்… அதை நுகர்ந்து எந்த நல்ல குணத்துடன் நாம் இணைந்து அவர்கள் செய்யும் தவறை உணர்கின்றோமோ… அவர் செய்யும் தவறான உணர்வுகள் இதற்குள் பட்டபின் என்ன நடக்கின்றது…?

சந்தர்ப்பத்தில் நாம் கீழே விழுந்து விட்டால் மேலே எழுந்திருக்க முடியாது ஒருவன் மேலே நம்மை அமுக்கிக் கொண்டிருப்பான் என்றால் எப்படி இருக்கும்…?

இதைப் போன்று நமக்குள் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களில் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று அன்புடன் பண்புடன் பரிவுடன் பார்த்தோம் என்றால்… இந்த இரண்டு குணங்களுடன் நுகரப்படும் பொழுது…
1.அவன் தீமை செய்து கொண்டிருக்கின்றான் என்ற நிலை வந்தாலும்
2.நம் நல்ல அணுக்களில் இது பட்டபின் அவைகள் பலவீனம் அடைகின்றது.
3.ஒருவனைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி உட்கார்ந்தால் எப்படித் துன்பமாக இருக்குமோ
4.அதைப்போல மனிதனை உருவாக்கிய இந்த அணுக்கள் அது வேதனையுடன் துடிக்கத் தொடங்கிவிடும்.
5.நாம் வேதனையுடன் துடிக்கப்படும் பொழுது எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணினால் கீழே தள்ளும் நிலை தான் வரும்.

மனித வாழ்க்கையில் பண்பும் பரிவும் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்கு செய்கின்றான் என்றால் தீங்கு செய்பவனையும் பார்க்கின்றோம்… தீங்கினால் பாதிக்கப்பட்டுப் பதறி அழுபவனையும் பார்க்கின்றோம்.

இரண்டையும் கலந்து இந்த உணர்வுகள் வெளிப்படுவதை நாம் நுகர்ந்தறியும் பொழுது நம் நல்ல குணங்களுடன் இணைந்து விடுகின்றது.

அப்பொழுது நம் நல்ல குணங்கள் அடுத்து ஒரு தரம் செய்தாலும்…
1.நம்மை அறியாமலேயே “என்ன உலகம்…? எந்த நன்மையைச் செய்தாலும் இப்படி ஒரு உலகம் இருக்கின்றதே…!” என்று
2.அந்த உணர்வுகள் நல்லதைப் பேசாது தவறு செய்யும் உணர்வுகளையே நம்மைப் பேச வைத்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு இனிமையான பாடலை டேப்பில் பதிவு செய்து கொண்டிருக்கும் போது அதில் எதிர்மறையாக ஒலி பதிவாகிவிட்டால் நல்ல பாடலையும் அது இடைமறித்து அந்த இனிமையை மடக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் நுகரும் சந்தர்ப்பத்தில்… நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… தீமை செய்பவனையும் அதிலே சிக்குண்டவரையும் இந்த இரண்டு உணர்வையும் நுகரப்படும் பொழுது… அவன் பதறுவதை இந்த வலுக் கொண்ட உணர்வாக உயிர் மாற்றிவிடுகின்றது.

அதே சமயத்தில் நல்ல குணங்களுடன் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த நல்லவனுக்காக நம் எண்ணங்கள் பட்டாலும் அவன் பேசும் வேதனை உணர்வுகளை நல்ல அணுக்களில் பதிந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…! உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை… நல்ல உணர்வுகளை உருவாக்கும் அந்த அணுக்களைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.

அவ்வாறு அது செயலிழக்காமல் இருக்க வேண்டுமென்றால்
1.உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் என்ற நிலை கொண்டு
3.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி.. நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.