ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 16, 2024

எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்...!” என்பதன் பொருள்

எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்...!” என்பதன் பொருள்

 

அமில குணமான பிம்ப சிவனுக்கு... அதன் வளர்ச்சிக்கு... ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்... எல்லாமில் எல்லாமுமே...!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்...
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன...? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்... வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி...!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்... இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா...!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது...?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை... அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி...” எதுவுமே இல்லை...!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு... ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு... அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழி பெற்றது...? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்... மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து - பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்...!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை...” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.