தீமை கலந்து விட்டால் தீமை விளைகிறது… அதனுடன் மகரிஷிகள் உணர்வைக் கலந்தால் நன்மையாகிறது
குருநாதர் என்னிடம் சொன்னது…
1.நீ முந்தி செய்த வினைகள் அது வளரும் பருவம் வரும் பொழுது
2.உனக்குள் விதியாக வந்துவிடும்.
அந்த விதி வரும் பொழுது நீ எதை எண்ண வேண்டும்…?
என்னை அறியாது இருள் நீங்க வேண்டும்… அந்த மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும். நான் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும். அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கி அதைப் பெற வேண்டும்.
நான் என்னுடைய சிறு வயதில் அறியாமல் செய்தது அனைத்தும் விளைந்து… கால் பாதங்கள் எரிவதும் உடலும் எரிகின்றது. ஒவ்வொரு நிமிடமும் அதை மாற்றுவதற்கு மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்தேன்.
நீ சிறு வயதில் எத்தனையோ பாவங்களைச் சேர்த்தாய் என்றார் குருநாதர். அதை எல்லாம் இப்பொழுது நான் சொன்னால் நீங்களும் பயந்து விடுவீர்கள்…
ஒடக்கானைப் (ஓணான்) பிடிப்பேன். மூக்குப் பொடியை எடுத்து அதனுடைய கண்ணிலே தூவி விடுவேன். அது தலையை ஆட்டும். பார் பேய் ஆடுகிறது என்று காட்டுவேன்.
இதையெல்லாம் நான் செய்தவன் தான். அப்பொழுது எனக்குக் கண் எரிச்சல் எல்லாம் வரும். குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சுட்டிக் காட்டுகின்றார்.
சிறு வயதில் நீ தெரியாமல் செய்தாய். ஆனாலும் உன் உயிர் என்ன செய்கிறது…?
1.உடலில் உனக்குள் அணுக்களாக விளைய வைத்திருக்கின்றது
2.அது விளைந்து வரப்படும் பொழுது ஒவ்வொன்றாக அந்த அனுபவம் வரும்.
இப்போது அதை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.நல்ல குணங்களுடன் சேர்ந்து இது எப்படி எரிச்சலாக வந்ததோ இந்த எரிச்சல் வரும் பொழுது
2.நீ அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிலே எண்ண வேண்டும்.
அந்த நிலையைத்தான் நீ பெற வேண்டும் என்றார் குருநாதர்.
நான் (ஞானகுரு) தவறு ஒன்றும் செய்யவில்லை. உங்களுக்கு நன்மை தான் செய்து கொண்டிருக்கின்றேன். சந்தர்ப்பத்தில் நான் கவிழ்ந்து விழுந்து விட்டேன். விழுகும் போது சாக்கடையில் கையைக் கொண்டு போய் ஊன்றுகின்றேன்
எனக்கு வலு இருக்கின்றது. ஆனால் எலும்பு ஒடிகிறதே…! நான் தவறு செய்தேனா…? இல்லை.
அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் நீ பட்ட நிலைகள் இது வரும்.
2.விதிப்படி இது நடக்கும்… ஆனால் மதி கொண்டு இதை மாற்ற வேண்டும்.
மனிதனான பின் மதி என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வினைத் தனக்குள் எடுக்க வேண்டும். இந்த மதி கொண்டு தான் அந்த விதியை வெல்ல முடியும்.
கீழே விழுந்து விட்டேன்…! எம்மா… எப்பா…! என்று சொன்னால்… நான் சொல்லும் வேதனையை நீங்கள் கேட்டால் உங்களிடமும் இது விளையும். உங்களிடம் விளைந்த பின் இரண்டு பங்கு என்னிடம் கொடுப்பீர்கள் இதைத்தான் என்னால் வளர்க்க முடியும். இதைப் போன்ற தீய வினைகளிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.
1.என்று… நாம் எதைச் செய்திருந்தாலும்
2.விதிப்படி அந்தந்த உணர்வுகள் வளர்ச்சி அடையப் படும்பொழுது அது வரும்.
அது தான் சித்திரை…! சிறு திரைகள்…! நம்மை அறியாது நாம் செய்த பிழைகள் திரை மறைத்து அந்த உணர்வின் அணுவின் தன்மையாக விளையும். அதன் வித்தின் தன்மை நிச்சயம் விளையத் தான் செய்யும்.
வேதனைப்படுபவர்களைப் பற்றி அடிக்கடி நாம் கேட்டுக் கொண்டிருந்தால் இந்த விஷத்தின் தன்மை அது வளரத் தான் செய்யும்… அந்த விஷம் கூடத்தான் செய்யும் என்று குருநாதர் காட்டுகின்றார்.
இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்.
1.என்னைப் போன்ற இந்தத் தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது…! என்று எண்ணுதல் வேண்டும்.
2.தலை வலிக்கிறது என்றால் இந்த வலி மற்றவருக்கு வரக்கூடாது.
3.அவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை… விதியை… மதி கொண்டு வெல்லுதல் வேண்டும்.
“வெறுமனே எண்ணாதபடி” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றி அடிக்கடி அதை இணைத்துச் சொல்ல வேண்டும். காரணம் அருள் ஞானிகள் இதைப் போன்ற நிலைகளை வென்றவர்கள். அதை எடுத்துத் தான் மாற்ற வேண்டும்.
ஆகவே உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது… உங்கள் அறியாத வரும் இருள்களிலிருந்து மீள்வதற்கு இதை வளர்த்துக் கொண்டால் மதி கொண்டு விதியை வெல்கின்றீர்கள். இன்னொரு பிறவிக்குச் செல்லாதபடி ஒளிச் சரீரம் பெறுகின்றீர்கள்.
நான் எத்தனையோ பேருக்கு ஆசிர்வாதம் கொடுக்கின்றேன்… எனக்கு ஏன் இப்படிக் கையில் அடிபட்டது…? என்று எண்ணினால் என்ன ஆகும்…!
விதிப்படி நான் அதை வளர்க்கின்றேன் மீண்டும் இன்னும் எத்தனையோ தொல்லைகள் வரும். அது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்
1.தொல்லைகள் எப்பொழுது மனிதனுக்கு வருகின்றதோ அது விதி.
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் மதி…!
அத்தகைய மதி கொண்டால் பிறவியில்லா நிலை அடையலாம்.