ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2024

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணையால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணையால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்

 

ஓர் விஞ்ஞானி தீமைகளை அறிகின்றான்… தீமைகளை அகற்றவும் செயல்படுகின்றான். ஒரு இயந்திரத்தை உருவாக்கப்படும் பொழுது அதிலே சில புரைகள் ஓடிவிட்டால் கடினப் பொருளை அதிலே சேர்க்கப்படும் பொழுது… அந்த இயக்கத்தைத் (எடையை) தாங்காது அது உடைந்து விடுகின்றது.

அது ஏன் உடைந்தது…? என்று விஞ்ஞானி உற்று நோக்கி அதற்குண்டான வலுவின் தன்மையைக் கூட்டி அதை மீண்டும் உருவாக்குகின்றான். இயந்திரத்தை இவ்வாறு தான் உருமாற்றி உருமாற்றிப் பல செயல்களை மாற்றுகின்றான்.

இந்த உடலுக்கு வேண்டிய வசதிகளைச் செய்ய முடிகின்றது. ஆனால் உணர்வால் நுகர்ந்தறிவது தீமையாகி… அது விளைந்த பின் தீமையிலிருந்து விலக விஞ்ஞான அறிவு கொண்டு உடல் உறுப்புகள் கெட்டுவிட்டால் அதை அகற்றி விடுகின்றான்.
1.செயற்கையான மாற்று உறுப்புகளையும் உடலில் இணைக்கின்றார்கள்.
2.ஆனால் நுகர்ந்த வேதனையான உணர்வுகளை இவர்களால் மாற்ற முடியாது.
3.ஆனால் மெய் ஞானிகள் இவ்வாறு நுகரப்பட்ட தீமையான உணர்வுகளை மாற்றிப் பழகியவர்கள்.

தங்கத்திற்குள் கலந்துள்ள செம்பு பித்தளை வெள்ளியை நீக்க திரவத்தை ஊற்றி அதை எவ்வாறு அப்புறப்படுத்தித் தங்கத்தைத் தெளிவாக்குகின்றார்கள். அதைப் போன்று தனக்குள் நுகர்ந்த தீமைகளை நீக்குகின்றார்கள் ஞானிகள்.

சாதாரண மக்களும் வாழ்க்கையில் வரும் தீமைகளை எளிதில் மாற்ற முடியும் என்ற நிலைகளில் சூட்சுமத்தில் நடப்பதை உருவங்களாகக் காட்டி கதைகளாகத் தீட்டி தெளிவான நிலைகளை நமக்குக் காட்டினார்கள் மெய் ஞானிகள்.

இன்று ஒன்றாவது வகுப்பிலிருந்து நாம் படித்து வந்தாலும் எந்த விஞ்ஞானி அவன் கண்டுபிடித்தானோ அதனின் வழியில் கல்வியை நாம் பதிவு செய்து கொள்கின்றோம்… அதன் வழியே நாம் செயல்படுகின்றோம்.

இஞ்சினியர் ஆக வேண்டும் என்றால் இயந்திரத்தின் உறுப்புகளை அது எவ்வாறு உருவாக்க வேண்டும்…? அதிலே உலகத்தின் கலவைகள் எவ்வாறு இணைக்க வேண்டும்…? என்று கற்றுணர்ந்த பின் அந்தப் பாடங்களைப் படித்து மீண்டும் நினைவு கொண்டு வந்து கொண்டு வரும்போது தான் விஞ்ஞான அறிவால் இயந்திரத்தை உருவாக்க முடிகின்றது.

மெய் ஞானிகளோ
1.தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது எவ்வாறு உடலாக விளைந்தது…? என்றும்
2.அதனால் விளையக்கூடிய தீமைகள் எது…? என்றும்
3.அந்தத் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும்…? என்றும் காட்டினார்கள்.
4.அதைத்தான் உங்களுக்கு இப்பொழுது உபதேச வாயிலாக யாம் கொடுக்கின்றோம்.
5.மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்து அவர்கள் சென்ற பாதையில் சென்றால் என்றும் அழியா நிலைகள் பெறலாம்.

விஞ்ஞான அறிவு கொண்டு உலோகங்களையும் மற்றவைகளையும் கண்டுபிடித்து எடுத்தாலும் அது உணவுக்குத் தான் உதவும். கண்டுபிடித்தது எதுவாக இருந்தாலும் உடலின் இச்சைக்குத் தான் அது உதவும்.

அந்த வழியில்… “நண்பன்” விஞ்ஞான அறிவு கொண்டு இருப்பான் என்றால் எதிர்பாராது விபத்தாகி அவன் இறந்தால் இவனின் ஈர்ப்புக்குள் வந்து அவன் வளர்த்த விஞ்ஞான அறிவைத் தான் இங்கே வளர்க்க முடியுமே தவிர “விண்ணுலகம் செல்ல முடியாது…”

பக்தியின் நிலையில் கொண்டு மெய் ஞானிகள் காட்டிய வழியினை மாற்றி இந்த உடலின் இச்சைக்காக அபிஷேகம் ஆராதனைகளைக் காட்டி அதன் வழி இந்தத் தெய்வம் தான் நல்லது செய்யும் என்று முழு நம்பிக்கையை ஊட்டுகின்றார்கள்.

அந்த நம்பிக்கையுடனே வாழ்ந்து வளர்ந்து பின் உடலை விட்டு இறந்தால் இதே பக்தி கொண்ட இன்னொருவர் அதே ஏக்கத்தில் ஏங்கினால் இறந்த ஆன்மா அவருக்குள் இது சென்று அங்கே அருளாடச் செய்யும். பக்தியை இரு மடங்காக ஆக்கும்… மற்ற நல்லது செய்தாலும் எண்ணத்தில் வராது.

ஆக… நாம் எதைப் பக்தி கொள்ள வேண்டும்…? என்றால் அருள் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி தீமைகள் புகாது நம் நல்ல உணர்வுகளைக் காத்திடல் வேண்டும்.

இன்றைய பக்தி வழிகள் எல்லாம் வேதனையை வளர்க்கும் நிலையாகத் தான் இருக்கின்றது. இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும்.

கற்க வேண்டும் என்றால் கல்விச்சாலைகளில் பல வருடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால்
1.இங்கே யாம் உபதேசிக்கும்போது மெய் ஞானிகள் உணர்வின் வித்தை ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.அந்த உணர்வுகளை மீண்டும் நீங்கள் எண்ணினீர்கள் என்றால் துரித நிலைகள் உங்களுக்குள் விளையும்.
3.உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.
4.எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை நீக்கி… உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி விண் செல்ல முடியும்.

இதை எல்லாம் பத்து நிமிடத்தில் சொல்லி முடித்து விட்டு உங்களை வீட்டுக்கு அனுப்பவும் செய்யலாம். அதிலே பயன் இல்லை. அருள் ஞானிகளின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்… காலத்தைப் பார்க்க கூடாது…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த இச்சையில் தான் இடைவிடாது மணிக் கணக்கில் யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.