நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும்
குருநாதர் காட்டிற்குள் எம்மை அழைத்துச் சென்று கேன்சர் போன்ற நோய்களைப் போக்கும் சில பச்சிலைகளைக் காட்டினார். அதை வைத்து நோயினை அகற்ற நீ உதவி செய்தாலும்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்து கொள்.
2.இதனை வாக்காக நீ அவருக்குக் கொடு.
3.இந்த அணுவின் தன்மை அங்கே விளையும்.
4.அவர்கள் அதை வளர்த்தார்கள் என்றால் அவரை அறியாது சேர்ந்த பாவ நிலையைப் போக்கும் நிலை வருகின்றது.
அவர்கள் எண்ணியதை அவரின் உயிர் உருவாக்குகின்றது. அணுவின் தன்மையை உடலுக்குள் பெருக்குகின்றது.
உதாரணமாக ஒருவன் கோபமாகப் பேசுவதை “நாம் கேட்டறிந்தால்” நமக்குள் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
1.ஆனால் கேன்சரை நீக்கும் உணர்வை நீ நுகர்ந்தாய்.
2.அந்த விஷ அணுக்கள் செயலற்றதாக ஆக வேண்டும் என்று “இந்த வாக்கினைக் கொடு…”
இந்தப் பதிவின் நினைவு கொண்டு யாரெல்லாம் தியானிக்கின்றார்களோ நஞ்சினை வென்ற துருவ மகரிஷிகளின் உணர்வுகளை அவர்கள் பெறுவார்கள் அந்த விஷத்தின் தன்மை அப்பொழுது தணியும்.
எதை எண்ணி ஏங்கிப் பெறுகின்றார்களோ அதை அவர்கள் உயிர்தான் இயக்குகின்றது.
“நான் செய்தேன்…” என்று (பெருமைக்காக) நீ இதைச் செய்தால் அவர் செய்யும் தீமைகளில் இருந்து விடுபட மாட்டார்.
உடல் நலம் பெற்று நல்லது வந்த பின்… மீண்டும் வேதனைப்படும் செயல்களைத்தான் அவர் (அறியாமலே) செயல்பாடுவார். வேதனையைத் தான் மீண்டும் மீண்டும் நுகர்வார்.
அதே நோய் வரத் தொடங்கும் அவரின் விளைந்த உணர்வுகள் மற்றவருடன் உறவாடும் பொழுது அவர்களிலும் அந்த உணர்வு பதிவாகும். பதிவின் நிலையே அங்கே செயலாகும்.
இதை முழுமையாக மாற்றும் நிலை இல்லை…!
முழுமையாக நீக்க வேண்டும் என்றால்
1.நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும் என்றால்
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொருவரையும் நுகரச் செய்.
3.இந்த உணர்வின் துணை கொண்டு இருளை மாய்க்கச் செய்…!
பிறவியில்லா நிலை அடையும் பருவம் பெற்றது தான் இந்த மனித உடல். ஆகவே ஓவ்வொருவர் உயிரையும் ஈசனாக மதி… உடலைக் கோவிலாக மதி… உடலைச் சிவமாக மதி.
அருள் சேவை என்ற நிலையில் அருள் ஞானத்தின் உணர்வை ஊட்டும் ஊழ் வினை என்ற ஞான வித்தாக ஊன்று…!
அந்த வித்தினை எவர் எவர் வளர்த்துக் கொள்கின்றார்களோ அவர்கள் இந்த பாவ வினையும் சாப வினைகளையும் நீக்கும் நிலை பெறுகின்றார்கள்… தீய வினைகளிலிருந்து விடுபடுகின்றார்கள்.
1.இதை மீண்டும் வளர்க்க எண்ணினால் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை வளருகின்றது
2.இப்படி வளர்த்தால் தான் அந்த நிலையை அடைய முடியும்
மாறாக… உன் கையால் பலருக்கு நீ நன்மைகளைச் செய்து கொடுத்தாலும் நல்லதான பின் “அந்த நேரத்திற்குத் தான்” எண்ணுவார்கள்.
அடுத்து பிறரை வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்வார்கள். நுகர்ந்த பின் வேதனைப்படும் சொல்லே மீண்டும் அவர்களுக்குள் வரும்.
இவருக்குள் ஊழ்வினை என்ற வித்தாக முதலில் பதிவான நிலை மீண்டும் தன் சத்தினை நுகர்ந்து அந்தத் தீய அணுக்களையே உருவாக்கும். நீ செய்த நன்மையும் பயனற்றுப் போய்விடும் என்றார் குருநாதர்.
ஆகவே நீ சக்தி பெற்ற நிலைகளில்
1.அருள் ஞான வித்தினை அங்கே ஊன்றி விடு
2.அதை வளர்க்க உபாயத்தைக் கூறு
3.அதன் வழிகளிலே அவர் நுகரட்டும்
4.அருளைப் பெறட்டும் இருளை அகற்றட்டும்.
விநாயகர் தத்துவப் பிரகாரம் மனிதன் தான் முழு முதல் கடவுள். தீமைகளை அகற்றிடும் உணர்வினை விளைவித்து தீமைகள் அகன்றிட வேண்டும் என்று “கூட்டுத் தியானங்கள் அமைத்தால்… அருள் சக்திகளைப் பரவச் செய்தால்… தீமைகளிலிருந்து விடுபடும் மக்களும் அதிகரிப்பார்கள்…!”
1.அந்த உணர்வுகள் அதிக அளவிலே விளையப்படும் போது
2.அந்த அலைகளைப் பயன்படுத்தக்கூடிய நிலை வளரும்… அதை நீ செய்…! என்று சொன்னார் குருநாதர்
அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன் (ஞானகுரு).