ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2024

நம் குழந்தைகளைப் பற்றி அதிகமாக எண்ணுகிறோம்… தாய் தந்தை முன்னோரை அவ்வாறு எண்ணுகிறோமா…?

நம் குழந்தைகளைப் பற்றி அதிகமாக எண்ணுகிறோம்… தாய் தந்தை முன்னோரை அவ்வாறு எண்ணுகிறோமா…?

 

இன்று நாம் காணுகின்றோம்… கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகிறார்கள்…? எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று…!

ஆகவே நம் தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமை எது…?

1.என் தாய் தந்தையர் என்னைக் காத்திட என்னை வளர்த்திட
2.எத்தனை வேதனைகள் அனுபவித்தார்களோ அவை அனைத்தும் நீங்கிட வேண்டும்
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையை பெற வேண்டும்.
4.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைந்து விட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் என் அன்னை தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும்
6.”என்னை வளர்த்த தாய் தந்தையர் மகிழ்ந்திட” நாங்கள் பார்க்க வேண்டும்
7.அந்தப் பேரானந்தப் ப்ரு நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று இதை நாம் வினையாகச் சேர்க்க வேண்டும்.

இப்படித்தான் தாய் தந்தையரை வணங்கும்படி சொன்னார்கள் ஞானிகள்… நாம் அப்படி நினைக்கின்றோமா…?

என் தாய் என்னை எப்பொழுது பார்த்தாலும் சும்மா திட்டிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்பவர்கள் நிறைய இருக்கின்றார்கள்
1.தாயை கடவுளாக மதிக்க சொல்கின்றீர்களே…
2.அவர்களுக்காக என்னை வேண்டச் சொல்கின்றீர்களா…? என்பார்கள்…!

ஆனால் ஞானிகள் காட்டியது என்ன…?

தாய் கருவிலே சிசு இருக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்
2.இருள் நீக்கிப் பொருள் காணும் திறன் என் சிசு பெற வேண்டும்
3.இந்த உலகையே காத்திடும் உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று
4.உயர்ந்த ஞானத்தை அந்த கருவிலே வளரும் குழந்தைக்கு வினையாகச் சேர்க்க வேண்டும்

உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று கருவுற்ற அந்தத் தாய் எண்ணும் பொழுது இந்த உணர்வு கருவிலேயே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

ஆனால் இன்று நடப்பது என்ன…?

ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதையோ சிலர் வேதனைப்படுவதையோ “ஐயோ… இப்படி நடக்கிறதே…” என்று கர்ப்பமுற்றிருக்கும் நுகர்ந்து விட்டால் குழந்தைக்கு இது தான் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

பத்திரிகையில் பார்த்தால்… உலகம் கெட்டு விட்டது கொலை செய்தான்… கொள்ளை அடித்தான்… திருடினான்… என்று அதிகமாகச் செய்திகளைப் போட்டிருக்கின்றார்கள்.

ஐய்யய்யோ… இப்படியெல்லாம் உலகில் நடக்கிறதே…! இந்த உணர்வை தாய் நுகர்ந்தால் கருவிலே பதிந்து விடுகின்றது. காணாததற்கு டிவி எல்லாம் இன்று போட்டு வைத்திருக்கின்றோம்.

அசுரத்தனமான எத்தனையோ உணர்வுகளை அங்கே காட்டுகின்றார்கள் இரக்கமற்றுக் கொல்வதையும் ஒருவருக்கொருவர் தாக்குவதையும் காட்டுகிறார்கள்… இத்தகைய படங்களை ரசித்துப் பார்ப்பார்கள்.

இது எல்லாம் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகப் பதிவாகி விடுகின்றது.
1.இத்தகைய உணர்வு கொண்ட குழந்தைகள் பிறந்த பின் மற்றவர்களை “டமார்… டமார்” என்று தாக்கும் நிலைக்குத் தான் வரும்.
2.குழந்தைப் பருவத்தில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட இந்த உணர்வுகள் இயக்கி விடுகின்றது.
3.டி,வி.யில் படத்தைப் பார்த்தது அங்கே காட்டும் தந்திரங்கள் அனைத்தும் இந்தக் குழந்தை செய்யத் தொடங்கிவிடுகிறது.

இந்த நிலைதான் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் ஒரு குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாங்கள் வேண்டும்
2.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் எல்லாம் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
6.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்
7.என்னை பார்ப்போருக்கெல்லாம் அந்த மகிழ்ச்சியின் தன்மை பெற வேண்டும் என்று
8.இந்த உணர்வுகளை வினையாகச் சேர்க்கச் சொன்னார்கள்… அதையே கணங்களுக்கு அதிபதியாக்கச் சொன்னார்கள்.

இதுதான் மகரிஷிகள் காட்டிய அருள் வழி…!

அன்னை தந்தையை மனிதனாக உருவாக்கிக் கொடுத்தது யார்...? நம்முடைய மூதாதையர்கள்…! அவர்களைக் குலதெய்வங்களாக கருதும்படி சொன்னார்கள் ஞானிகள்.

அந்தக் குல வழியில் தான் நம் தாய் தந்தையர் மனிதனாகப் பிறந்தார்கள் அவர்கள் வழி தான் நம்மையும் அவர்கள் மனிதனாக உருவாக்கினார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன…?

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களின் உயிரான்மக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அவ்வாறு உந்தி தள்ளிய பின்
1.உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் அங்கே கரைய வேண்டும்.
2.ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றும் அழியா ஒளியின் சரீரம் பெற்று என்றுமே ஒளியாக வாழ்ந்திட வேண்டும் என்று
3.எந்தக் குல வழியில் நாம் மனிதனாக உருப்பெற்றோமோ…
4.அகன்று சென்ற உயிரான்மாமக்களை மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் குடும்பத்தைச் சார்ந்தோர் விண்ணிலே செலுத்தினால்
5.பிறவி இல்லா நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளி சரீரமாக நிலைத்து அந்த பேரானந்த பெருநிலை அடைகிறார்கள்.

அவர்கள் அங்கே முன் சென்றால் அதன் வலுக் கொண்டு நாம் பின் செல்ல முடியும். இதன் வழி தான் நல்ல வினைகளை நமக்குள் உருவாக்க வேண்டும் என்று விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டுகின்றது.

ஆகவே மெய் உணர்வுடன் ஒன்றி இருளைப் போக்கி பொருள் காணும் உணர்வுடன் ஒன்றி இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளைப் போக்குவோம். மனித வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் திறன் பெறுவோம்.
1.பேரானந்த பேரின்ப வாழ்வாக
2.இந்த வாழ்க்கையிலேயே நாம் வாழ்ந்து காட்டுவோம் என்று அதைச் செயல்படுத்துவோம்.