ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2024

வேதனைப்படவும் கூடாது… வேதனைப்படுவோரைக் கண்டு ரசிக்கவும் கூடாது

வேதனைப்படவும் கூடாது… வேதனைப்படுவோரைக் கண்டு ரசிக்கவும் கூடாது

 

அரசியலில் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் கூடிக் குலாவி மகிழ்வார்கள். ஆனால் கட்சி மாறிவிட்டால் “இவன் துரோகி…! நாட்டுக்கே ஆகாது…” என்று அவன் எவ்வளவு நண்பனாக இருந்து எவ்வளவு உதவி செய்திருந்தாலும் அரக்கத்தனமாகத் தாக்கி… வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

மனிதனுடைய பண்புகள் எந்த அளவிற்கு இருக்கின்றது…? என்று பாருங்கள்.

அரசியலில் மதம் இனம் குலம் என்று மனிதருக்கு மனிதர் உதவி செய்து கொண்டிருந்தாலும்,,, சந்தர்ப்பத்தில் பேதங்கள் வந்துவிட்டால் செய்த நன்மைகளையும் மறக்கச் செய்து தவறுகள் செய்யும் உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது.

காரணம் மனிதனின் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அதன் உணர்வுப்படி உயிர் இயக்குகின்றது. பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனாகப் பிறந்தோம்.

ஆனால்
1.மனிதனான பின் அசுர உணர்வுகள் தனக்குள் நுழைந்து விட்டால்
2.மீண்டும் நரகலோகத்திற்குச் செல்லும் அணுக்களாகத் தனக்குள் மாற்றுகின்றது என்று பொருள்.

இன்று இரக்கமற்று ஒருவரைப் பேசலாம் தொல்லைகளைக் கொடுக்கலாம் அது மட்டுமல்ல அவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கவும் செய்யலாம்.

ஆனால் எதனை இப்படி நாம் உருவாக்கினோமோ இந்த உணர்வுகள்
1.அதை நுகர நுகர நுகர விஷத்தன்மை கொண்ட அணுக்களாக நமக்குள் விளையும்
2.பின் நோயாக விளையும் பொழுது அந்த உணர்வுகள் விஷத்தன்மை கொண்ட மனிதனல்லாத உருவை உருவாக்கும் நிலைகளுக்குச் சென்று விடும்.

அதிகமாக வேதனைப்படுவோரைப் பார்த்து “அவனுக்கு இப்படித்தான் வேண்டும்…” என்ற நிலைகளை நாம் எண்ணி ஏங்கி அந்த வேதனையை ரசித்தோம் என்றால் அடுத்து பாம்பினமாகத் தான் நாம் பிறப்போம்.

அந்த அணுக்களின் மாற்றங்களும்… அதன் உணர்வின் இயக்கங்கள் எப்படி மாறுபடுகின்றது…? இந்த உடல் எப்படி நலிகின்றது…? மனிதனின் உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

1.அவன் செய்ததற்குத் தண்டனை கிடைக்கின்றது…
2/அவன் அனுபவிக்கின்றான்... என்ற எண்ணமே நமக்கு வரக்கூடாது.

அப்போது நாம் எதை எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனுக்குள் நல்ல உணர்வு தோன்ற வேண்டும்… அறியாத நிலையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்குப் பதிலாக… அதிகமாக நம்மைத் தாக்கிப் பேசுகிறான்…! ஆகையினால் அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்து விட்டால்… நம்மால் தாங்க முடியவில்லை என்றால் நமக்குள் கோபமும் கொதித்தெழும் தன்மையும் அவனை அழித்திட வேண்டும் என்ற உணர்வே தூண்டும்.

அந்த உணர்வு தூண்டப்படும் பொழுது
1.தவறு செய்தது அவர்கள்
2.நுகர்ந்தறிந்தது நாம்
3.உயிர் அறியச் செய்கின்றது… அந்த அணுவாக மாற்றி விடுகின்றது
4.அவன் எந்தத் தவறைச் செய்தானோ அதிலிருந்து உருவான அணு நம் உடலில் ஒட்டி வினையாக அது இயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆனால்… நாம் தவறு செய்யவில்லை.

“அவன் கெட வேண்டும்” என்று நாம் தொல்லைகள் கொடுத்தோம் என்றால் அதே உணர்வை நுகரப்படும் பொழுது அதே உணர்வின் அணுக்களாக உடலுக்குள் உருவாகி… அவன் செயல் நம் உடலில் உருவான உணர்வின் தன்மை கொண்டு அந்த அணுக்கள் தன் இரைக்காக உணவுக்காக ஏங்கும் பொழுது… அந்த உணர்வின் செயலாக உடலை இயக்கி விடுகின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே ஒருவர் கடுமையாக நம்மை ஏசுகிறார் என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இதை எடுத்து அந்தத் தீமை விளையாதபடி அந்த மகரிஷியின் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அப்பொழுது
1.அவர் சொல்லும் உணர்வையும் இதையும் இணைத்து நாம் நுகரப்படும் பொழுது
2.அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கும்.
3.அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் கூடும்.
4.இதனை எடுத்து அவன் அறியாத இருளில் இருந்து நீங்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்கு மேலும் அவர் உணர்வு “நம் மீது தாக்கி… நாம் தாங்க முடியாத நிலை இருந்தால்…” அவன் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனுக்குள் அதுவே விளைந்து அவன் உணரட்டும்…! என்று
1.எனக்கு வேண்டாம்…
2.நீயே அனுபவித்து உன்னுடைய உணர்வுகளை அறிந்து… அதன் வழியாக நீ அதை அனுபவித்துப் பார் என்று மட்டும் சொல்லி விடுங்கள்.

அதாவது… எவர் ஒருவர் நீங்கள் கெட வேண்டும் என்ற உணர்வை எண்ணி அதிகமாகத் தூஷிக்கின்றனரோ… அந்தக் காலங்களில் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டாம்

அதுவே அவருக்குள் விளைந்து அவரே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்…! என்ற நிலையைச் சொன்னால் போதும். அது நம்மைப் பாதிக்காது.