ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2024

நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…?

நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…?

 

நான் யார்…? இன்னவர் மகனா…? இன்னவர் கணவனா…? இன்னவர் மனைவியா…? இன்னாரின் அப்பாவா… அம்மாவா…?
1.நீ இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்தி முடிக்கும் வரை தான் சொந்தம் பந்தம் எல்லாம்…
2.இறந்த பின் மறுபடியும் பிறப்பு.
3.பிறந்த பின்… இந்த வாழ்க்கையில் (மீண்டும்) ஒரு சொந்த பந்தம் குடும்பம்… வாழ்க்கை… பெயர்… எல்லாம்……

குழந்தைப் பருவத்தில் ஓர் ஆடை அணிகின்றோம். பிறகு வயதுக்குத் தக்க ஆடைகளை அணிகின்றோம். ஆக… ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு பெயர் வாழ்க்கை… சொந்த பந்தங்கள்…!

1.பிறப்பு எடுக்கும் முன்னும்… இந்தப் பிறப்பிலிருந்து வேறு பிறப்புக்குப் போகும் போதும் உன் நிலை என்ன…?
2.எத்தனையோ வாழ்க்கையும்… பிறப்பும்… அப்போது நான் யார்…?
3.பிறப்பு என்பது தொடர்ந்து வரும் போது… நான் என்பது யார்…?

எந்தப் பிறப்பும் எடுத்து முடியும் வரை எந்தவித ஆசைகளும் நிறைவேறாமல் தான் போகின்றோம். அடுத்து ஓர் பிறவியில்… மறுபடியும் அனுப்பும் போதும் ஆசைகள் நிறைவேறாமல் தான் போகிறோம்.

1.”என்று” ஆசைகள் பற்று பாசம் இல்லாமல் உலக வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறோமா…
2.முழு நிறைவோடு போகிறோமோ… அதன் பிறகு பிறவி இல்லை.

தற்போது நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…? எங்கும் எதிலும் இத்தகைய விளக்கம் இருக்காது…!

ஆகவே வாழ்க்கையில் சலிப்புடன் இல்லாமல் “நிறைவோடு வாழ்…!”

வேலைக்காரனை முதலாளி ஒரு வேலை கொடுத்து அனுப்பும் பொழுது… சரியாக வேலை செய்து முடித்து அவன் வரவில்லை என்றால்… மறுபடியும் அனுப்பிச் சரியாக செய்து வரச் சொல்லி அனுப்புவது போல்… பிறவி எடுத்ததிலும் நிறைவோடு இல்லாமல் ஆத்மா பிரிந்தால் “மறுபடியும் பிறவி எடுத்துத் தான் ஆக வேண்டும்…”

விதியை யாராலும் வெல்ல முடியாது என்கிறார்கள். விதி என்பது என்ன…? விதி என்பது வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் தான்…!

ஆண்டவனை நினைத்தால் விதியை வெல்லலாம். பாசம் பிடித்த இடத்தில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து விடுகின்றோம். அதே இடத்தில் ஆண்டவனை நினைத்து ஜாக்கிரதையாக நடக்கும் பொழுது விழாமல் நடக்கின்றோம்.

விழுந்து விட்டால் விதி என்றும் விழாமல் நடந்தால் ஆண்டவன் செயல் என்றும் சொல்கிறோம். அது மாதிரித் தான் நம் வாழ்க்கையிலும் வழுக்கலும் இருக்கலாம் சம தரையும் இருக்கலாம்

1.கஷ்டம் வரும்போது… அந்தக் கஷ்டத்தை நாம் எப்படி வெல்லுகிறோமோ
2.கஷ்டம் வரும் போது கடவுளை நிந்திக்காமலும் மனம் தளராமலும் வெல்லுகிறவன் தான் வாழ்க்கையின் பலனைப் பெறுகின்றான்

கஷ்டம் வரும்போது எல்லாம் தாண்டி வந்துவிட்டு… இப்போது சிறிய இடையூறுக்கு ஏனப்பா உனக்கு இவ்வளவு கலக்கம்…!