ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2024

ஈஸ்வரன் அருள் கிட்ட வேண்டுமா…?

ஈஸ்வரன் அருள் கிட்ட வேண்டுமா…?

 

உன்னை நீ நம்பு... ஈஸ்வரனின் அருள் இங்கே வட்டமிட்டுக் கொண்டே உள்ளது.

முதல் பாடத்தைச் சொல்லிவிட்டேன் இனி அடுத்ததெல்லாம் ஆன்மீக வழிக்குத் தான். உன் தியான நிலையில் மனதை ஒரு நிலை நிறுத்தி ஆண்டவனிடம் ஐக்கியப்படுத்து.

1.உன்னை நீ நம்பு என்பது…
2.உன்னுள் இருக்கும் என்னை நீ காண்… “புரிந்ததா…?”

நீயே நீ அல்ல என்னும் பொழுது உன்னுள் இருக்கும் என்னை நீ சீக்கிரம் காண்பாய்.

மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று கவலைப்படாதே. எதுவும் நினைத்தவுடன் தானாக நடக்கும் என்று நினைக்காதே.
1.உன்னுள் இருக்கும் “என்னையே”
2.நீ தெரிந்து கொள்ளாமல் இருக்கும் பொழுது ஏன் குழப்பம் அடைகின்றாய்…?

நீ கஷ்டத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று பார்த்தாய்…! தப்பித்து எங்கே சென்று விடலாம் என்று பார்த்தாய்…? தப்பித்து என்னிடம் தான் சேரலாம் என்று இருந்தாய்.

1.நானே உன்னுள் இருக்கும் பொழுது
2.என்னிடம் வந்து சேரலாம் என்று ஏன் இருந்தாய்…?

ஓவ்வொரு உடலிலும் இருக்கும்
1.என்னைப் பரிபக்குவமாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் யார் யாருக்கு உள்ளதோ
2.அவர்களுக்கு என் அருள் சீக்கிரமாகவே கிடைக்கும்.

காட்சி:-
ஜக்கில் சுடச்சுட காப்பி…! தட்டில் விட்டு ஆற்றிக் குடிக்கின்றார்.

மனம் கொதிக்கும் நிலையில் இருந்தாலும் “மனதை ஈஸ்வரனிடம் கொடு...! நான் உன்னுள்ளே இருக்கும் பொழுது நீ ஏன் கவலைப்படுகின்றாய்…?

எல்லாம் அவன் செயல் என்கிறாய்…! மரம் நட்டவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா…? என்பது பழமொழி.

மரம் நட்டவன் நிச்சயம் தண்ணீர் ஊற்றுவான். அதை ஏற்று உறிஞ்சுவது மரத்திடம் தான் உள்ளது. மரம் நட்டதும் தண்ணீர் ஊற்றியதும் ஆண்டவனாக இருக்கின்றான்.
1.மரம் தண்ணீரை ஏற்று எந்த அளவில் காயாகவும் பழமாகவும் பலன் கொடுக்கிறதோ
2.அது மரத்தின் வேலை தான்.

ஒரே இடத்தில் பக்கம் பக்கமாக மரம் வைத்தாலும் சில நன்றாகவும் சில சரியாகவும் காய்ப்பது இல்லை. சில பட்டுப் போகின்றன இதே நிலைதான் மனிதனுக்கும்.

விதியை மாற்ற ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து.
1.எல்லாம் அவன் செயல் என்று இருக்காதே
2.அவனே உன்னுள் இருக்கும் பொழுது “பாரத்தை” ஏன் அங்கு போடுகின்றாய்…?

உன்னையே நீ காணும் நாள் சீக்கிரத்தில் உண்டு. அந்த நிலைக்கு நீ உன் மனதைக் கொண்டுவர முயற்சி செய்.

இதையெல்லாம் தினசரி வரிசையாக எழுதிக் கொண்டு வா. நான் உத்தரவு தந்த பிறகு புத்தகமாகப் போடலாம். சரியாக எழுத வேண்டும்.

பிற்கால சந்ததியருக்கு இப்பொழுது இருக்கும் அளவுக்குக் கூட கடவுள் பக்தி இருக்காது. கோவில் என்பது அவர்களுக்கு சினிமா நாடகம் போல பொழுது போக்கு இடமாகப் போய்விடும்.

கோயில் என்பது அவரவர் அந்தஸ்தை காட்டும் இடமாகத்தான் உள்ளது… புரிந்ததா…?

வரும் சந்ததிகளின் காலத்திற்கு “கடவுளின் உண்மை சொரூபம் என்ன…?” என்பதற்கு புத்தகம் தனியாகப் போடலாம்.

“எனக்கு வேண்டியர்… உனக்கு வேண்டியவர்…” என்று யாருக்கும் காட்ட வேண்டாம். கல்லாக என்னை நினைத்து வணங்குபவர்களுக்கு இப்போது சொன்னால் புரியாது.

உனக்கே இத்தனை நாள் கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…? சாமி (ஞானகுரு) வந்து விளக்கம் சொல்லியும் குழப்ப நிலையில் தான் இருந்தாய்.

இப்பொழுது கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…?

ஒவ்வொரு மனிதனும் சந்தோஷம் என்று எதை நினைக்கின்றானோ… அதற்காக தர்மம் நியாயம் பக்தி என்று எதையும் பார்க்காமல் தன் சந்தோஷத்திற்காகச் செய்ய பார்க்கின்றான்.

சந்தோஷம் என்றால் என்ன…? என்று புரியாத மனிதர்களிடம் எப்படி விளக்குவது…?

எல்லா மனிதர்களும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

மனதை அமைதிப்படுத்தித் தன் நிலையைத் தான் உணர்ந்து மனதில் உள்ள சோர்வு சோகம் குரோதம் மனதில் உள்ள தாழ்வு இதையெல்லாம் விட்டுவிட்டு… எவன் ஒருவன் தர்மம் நியாயம் அன்பைக் கடைபிடிக்கின்றானோ “அவனுக்கு எல்லா அருளும் கிடைக்கும்…”