ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2024

ஒலி - ஒளி

ஒலி - ஒளி

 

“ஒளியைப் பற்றி சொல்கின்றேன்” என்று சொன்னேன்.
1.இவ்வுலகின் தன்மையிலேயே கலந்து இருப்பதும் ஒலி தான்
2.நீ பேசுவதும் ஒலி தான்
3.உன்னுள் இருந்து வரும் மூச்சும் ஒலி தான்
4.சிறு அசைவும் ஒலி தான்
5.பெரும் மின்னலும் ஒலி தான்
6.மழைத்துளியிலும் ஒலி உள்ளது.
7.மலர் மொக்கு விரியும் பொழுதும் ஒலி உள்ளது.

உலகம் ஒலியுடனே உருளுகின்றது ஒளியுடன் மட்டும் உலகம் இல்லை… ஒலியுடனும் கலந்து இருக்கின்றது. சிறு எறும்பின் வார்த்தையிலும் ஒலி உள்ளது… நம் உலகச் சுழற்சியிலும் ஒலி உள்ளது.

ஒலி அழிவதில்லை… காலமுடன் கலக்கின்றது.
1.உடல்கள் அழிகிறது… ஆனால் நாம் விட்ட மூச்சும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கின்றது.
2.ஆத்மாவானது மறு உடல் பெறுகின்றது… ஆனால் “ஒலி” அவன் எடுக்கும் எந்த ஜென்மத்திலும் அழிவது இல்லை… மாறுவதும் இல்லை.

அழிவதும் இல்லை மாறுவதுமில்லை என்றேன் அல்லவா. அப்போது இந்த ஒலியெல்லாம் என்னவாயிற்று…? என்று நினைக்கின்றீர்கள். இவ்வுலகம் தன்னைத்தானே சுற்றுகிறது என்கின்றீர்கள்…! அது சுற்றுவதற்குச் சக்தி எதிலிருந்து வந்தது தெரியுமா…?

இந்த ஒலியின் தன்மை எல்லாம் ஒன்று சேர்ந்து… காற்றுடனே கலந்து உலகைச் சுற்றிவிடும் நீ விட்ட நல் மூச்சும்.

நல் மூச்சு…! என்பதன் பொருள்… நல்லவர் உள்ள நாட்டில் எல்லாம் மழை பெய்கிறது என்று சொல்லும் பழக்கத்தில் இல்லையா…!

நல்லுணர்வு உள்ள வீட்டில் இலட்சுமி களை உள்ளது என்கிறோம். தன் உணர்வை மறந்து விட்ட நிலையில் உள்ள வீட்டில் எல்லாம் நாதியற்ற நிலைதானப்பா. அந்த வீட்டைப் பார்த்தவுடன் மூதேவி குடி இருக்கின்றாள் என்பதும் இது தான்.

இலட்சுமியும் பிறக்கவில்லை… மூதேவியும் பிறக்கவில்லை… ஒலியில் தான் எல்லாம் உள்ளதப்பா…!

ஒளியைப் பற்றி நினைத்து வந்தால் ஒலியின் பாடம் என்பது தான் முதல் பாடம். எல்லாம் முதல் பாடம் என்கின்றீர்கள் இரண்டாம் பாடம் இல்லையா…?
1.எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டுமப்பா
2.முதலாவதாகவே இருக்கட்டும்… முடிவு நிலை வேண்டாம்
3.எல்லாத் தன்மையுமே முதல்… முதல் தன்மை தான்.

குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நிலையும் முதல் தான் குழந்தைக்கு. என்றும் முதலாகவே இருந்திடும் நிலையிலேயே பாடங்கள். முதல் பாடம்… முதல் பாடம்…! என்பதன் பொருள் இதுவே தான்.

மூல முதல்வர் என்று சொல்கின்றோம் அது போல மூல இரண்டாமவர் என்று சொல்கின்றோமா…? “எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டும்…”

ஒலியின் தன்மையை உணர்ந்திடுவாய். ஒலிக்கும் இசையில் உணர்ந்திடுவாய். ஒளியை அமைப்பது இந்த ஒலி தான். ஒளிமயமான எதிர்காலம் என்று சொல்கின்றோம். ஒளிமயமான எதிர்காலம் ஒலியில் இருந்து தான் வருகின்றது.

ஒலிக்கும் ஒலியெல்லாம் எதிலிருந்து என்கின்றாய்…? ஒளியின் தன்மை தானே புரிந்திடும். இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா.

நீ ஜெபிக்கும் ஜெபமும் என்னிடம் தான்… நீ துவேஷித்த சொல்லும் என்னிடம் தான். உன் ஜெபம் மட்டும் தான் என்னிடம் அடையும்… துவேஷம் எங்கு செல்கிறது என்று நினைக்கின்றாய்…?

ஜெபம் துவேஷம் காற்றில் தான் கலக்கின்றது புரிந்ததா…? ஒளியின் தன்மை சொன்னேன்… ஒளியின் தன்மை புரிந்ததா…? ஒலியில் தான் ஒளியின் தன்மை இருக்கின்றது.

இதைப் புரிந்து கொண்டால் ஒலியின் தன்மை புரியும். ஒளி எங்கிருந்து வருகின்றது…? ஒலியிலிருந்து தான் ஒளி உள்ளது.

1.சுவாச நிலை என்பதும் இது தான்
2.சுவாச நிலை ஒன்றுபட்டால் ஜெப நிலை கூடிவிடும்
3.ஜெப நிலை கூடிவிட்டால் ஒளியின் தன்மை தெரியும் என்கிறோம்.

சுவாச நிலை என்னும் பொழுதே ஒலியாக ஆகிறது. அந்த ஒலி தான் ஒளியப்பா. விளக்கில் தான் ஒளியுள்ளது. விடியும் விடிவில் தான் ஒளி உள்ளது. சந்திரனும் சூரியனும் தான் ஒளி தருகின்றது.

நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஒலி எல்லாம் ஒளி என்கிறார்கள். அந்த ஒலி ஒளி அல்ல. ஒலிதானப்பா ஒளியே. நம்முடைய சுவாசத்தில் உள்ள ஒலி நல் ஒலியாக உள்ள நேரத்தில் தான் நல்ல பூவும் பூக்கும் நல்ல கனியும் கனியும்.

என் தாயார்… என் தாயாரின் தாயார் சமைத்த ருசி… இப்பொழுது இல்லை என்கிறாய்.
1.காலநிலை மாற மாற மன நிலையும் மாறிவிட்டது.
2.மனிதனும் மூச்சுக் காற்றும் மாறிவிட்டது.
3.அந்நிலையில் இருந்து வரும் தன்மையில் இருந்து தான் விளையும் பயிரின் ருசி எல்லாம்.

தர்மம் நியாயம் எங்கு உள்ளது…? அன்றுள்ள நிலையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

பிறகு எப்படி இருக்கும் நிலை எல்லாம்…? “சுவாச நிலையை மாற்றிக்கொள்” என்பதும் இது தானே. சுவாச நிலையைப் பற்றிச் சாமி விடிய விடியச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டீரா…? இப்பொழுது புரிகின்றதா ஒலியின் தன்மையும் ஒளியின் தன்மையும்.

உன்னுள்ளே ஒளி பிறந்திட “ஒலியை முதலில் கற்றிடு…” குழந்தைக்கும் புரியும்படி இந்தப் பாட நிலை உள்ளது.

ஒளியின் தன்மைக்குப் புதுப் பாடம் வேண்டுமா…? ஒளியைப் பற்றி இன்னும் கேட்டால் நான் ஒலியைப் பற்றி தான் மீண்டும் சொல்வேன்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல… பெரும் மேகங்கள் வந்தால் மறைந்துவிடும். மேகத்தின் தன்மையே மின்னல் வந்தால் மறைத்திடும்.

அது போல
1.நல் உணர்வை எடுத்து நல் மூச்சு விட்டிடுவாய்.
2.நல் மூச்சு விட்டால் ஆயிரம் நஞ்சின் தன்மை இருந்தாலும் “ஒருவரின் நல் மூச்சு அதை மாற்றிவிடும்…”

வைரத்தின் தன்மை வார்த்தையில் வேண்டுமென்றேன் அல்லவா வைரத்தின் தன்மை எல்லாம் அதன் ஜொலிப்பில் தான் உள்ளது அதற்குள்ள மதிப்பை பார்த்தாயா…?

அது போலத் தான் எல்லாமே. நல்லுணவை நான் சமைத்தேன். உனக்குள்ளே ஊட்டி விட்டேன் இந்த நிலையை மாற்றி விடாமல் ஊக்கமுடன் இருந்திடுவாயா…? புது பானையில் விறகு வைத்துச் சமையல் செய்யும் காட்சி…!

1.நான் (ஈஸ்வரபட்டர்) இங்கும் உள்ளேன்… அங்கும் உள்ளேன்…
2.எங்கும் உள்ளேன்… எல்லாமில் எல்லாமாக உள்ளேன்.