ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2024

சாம அதர்வண யஜூர்

சாம அதர்வண யஜூர்

 

ஒரு வேதனைப்படுபவரை சந்தர்ப்பவசத்தில் நாம் பார்க்கின்றோம் அந்த உணர்வின் இசை “சாம…!”
1.வேதனையான உணர்வுகள் வந்தபின் உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்போம்…
2.அவர் அம்மா……! என்று அலறினால் போதும் நாம் ஐயோ…! என்று சொல்வோம்.

ஆக இந்த உணர்வின் தன்மை தனக்குள் ஆகிவிட்டால் நல்ல குணங்களின் இசைகளையே மாற்றி விடுகின்றது… “அதர்வண…” மாறி அதுவே ஒரு வித்தாகி விடுகிறது “யஜூர்…”

வித்தாக ஆன பின் மீண்டும் சாம…
1.அவரைப் பற்றி மீண்டும் மீண்டும் எண்ணப்படும் பொழுது
2.நம்முடைய சோக கீதம் அங்கே வாசிக்கத் தொடங்கி விடுகின்றது… எம்மா… எப்பா… மீண்டும் சாம…!

ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் அருள் மகரிஷிகளின் உணர்வைத் எடுத்து இதை அடக்கிடல் வேண்டும். அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடனுக்குடன் இதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்… “எந்த நோயாளியை நாம் பார்த்தோமோ” மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும்… அவர் நோய் நீங்க வேண்டும்… அவர் அருள் ஞானம் பெற வேண்டும்…! என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வை நினைவுபடுத்தி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறு… உன் உடல் நலம் பெறும்…” என்ற இந்த உணர்வின் வித்தினை விதைத்து விடவேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அது அந்த வேதனையை அடக்குகின்றது.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கும் பொழுது அதனுடைய இசை சாம.
2.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வேதனையை அடக்கப்படும் பொழுது அதர்வண
3.அதே உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுக்கும் பொழுது யஜுர்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வித்தாகி விட்டால்…
1.இந்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது எங்கே செல்கின்றோம்…?
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் செல்கின்றோம்.

ஒரு மனிதன் வேதனைப்படும் குரலை நாம் கேட்டோம் என்றால் சாம… நாமும் அந்த வேதனையைச் சொல்லும் போது “ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று இந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் பொழுது அதர்வண…! நல்ல குணங்களை அடக்கி விடுகின்றது,

மீண்டும் சாம…! அந்த வாசனை கொண்டு “அவர் இப்படி ஆகிவிட்டாரே… இப்படி ஆகிவிட்டாரே…” என்று மீண்டும் அந்த அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர் இறந்து உடலை விட்டு வந்தால்… அவரின் உணர்வு நமக்குள் வளர்ந்திருந்தால் அந்த நோயால் இறந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்து… அதே நோயை இங்கே வளர்க்கத் தொடங்கி விடுகின்றது.

பின் நாமும் மடிகின்றோம்.

இறந்த பின் நம் மீது பற்றுள்ள உடலில்… இதே உணர்வுகள் கலந்து அந்த உடலுக்குள் சென்று நாம் இப்படித் தேய்பிறையாகச் செல்ல வேண்டி வருகின்றது.

இதை மாற்றி அமைப்பதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை நமக்கு ஞானிகள் கொடுத்தார்கள்.

திரும்பத் திரும்ப யாம் (ஞானகுரு) சொல்கிறோம் என்று நினைக்காதீர்கள்
1.ஒவ்வொரு கோணத்திலும் “ஒரு உணர்வின் தன்மை அது எப்படி இயக்குகின்றது…?” என்பதை நீங்கள் அறிந்தாக வேண்டும்.
2.பல முறை நீங்கள் கேட்டறிந்துள்ளீர்கள்… ஆனால் உங்களால் திருப்பிச் சொல்ல முடிகிறதா… என்றால் இல்லை.
3.அதன் வழி நடக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.
4.ஒருவன் கோபித்து விட்டான்… வேதனைப்படுகின்றான் என்றால் அதில் தான் லயித்து விடுகின்றோம்.
5.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் துடைக்கத் தெரியவில்லை.

அதற்காகத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்

உங்களுக்குள் தெளிவான நிலைகளை உருவாக்க வேண்டும் நீங்கள் எம்முடைய அருள் உரையைக் கேட்கக் கேட்க…
1.நீங்கள் சுவாசிப்பது சாம.
2.இந்த உயர்ந்த ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது அதர்வண… உங்கள் கஷ்டங்களை நீக்கும்.
3.கஷ்டங்கள் நீக்கும் அந்த உணர்வின் வித்தாக உருப்பெற்றால் யஜுர்…
4.மீண்டும் சாம… அதை எண்ணத்தால் எண்ணும்போது உங்கள் துன்பத்தையும் கஷ்டத்தையும் அடக்கி… உயிர் நல்லதாக மாற்றுகின்றது.