ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 23, 2024

உடல் நமக்குச் சொந்தமல்ல… சொந்தமல்ல…! என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

உடல் நமக்குச் சொந்தமல்ல… சொந்தமல்ல…! என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

 

உடலை நாம் சொந்தமாக்கினாலும்… இந்த உடலின் சொந்தத்தை வைத்து… மனித உடலின் தன்மை கொண்டு தான்…
1.இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வந்த இருள்களை நீக்கி
2.உயிர் ஒளியாக இருப்பது போன்று நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றிட முடியும்.

ஆனால்
1.மாற்றத் தவறினாலோ மீண்டும் பிறவிக்கே திரும்பச் செல்கின்றோம்.
2.”பிறப்புக்கு” என்று வந்தாலும் அதிலே மீண்டும் மனிதனாகப் பிறப்பது “எத்தனை கோடி ஜென்மங்களோ…!” என்று சொல்ல முடியாது.

இந்த மனித உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று தான் மனிதக் கருவாக உருவாக முடியும். மனித உடலுக்குள் செல்லாது நாம் வேறு ஒரு உடலுக்குள் சென்று மனிதனாக உருப் பெற முடியாது (இது முக்கியம்).

குடும்பத்தில் நம் குழந்தை மீது அன்பைச் செலுத்துகின்றோம் அல்லது உற்ற நண்பன் மேல் அன்பைச் செலுத்துகின்றோம்… பாசத்தைச் செலுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

தன் குழந்தை மீது அன்பையும் பாசத்தையும் செலுத்தி விட்டால் கடைசியில் உடலை விட்டு நம் உயிரான்மா செல்லும் பொழுது யார் மேல் அன்பையும் பாசத்தையும் வைத்தோமோ “அந்த உணர்வு தான் முன்னணியில் இருக்கும்…. அந்த உடலுக்குள் தான் புகுவோம்…” (நண்பனோ அல்லது நம் குழந்தையோ)

ஆனாலும்
1.உடலை விட்டு ஆன்மா வெளியே செல்லும் பொழுது கடும் நோயுற்றுத் தான் வெளியே செல்கின்றது.
2.அதாவது… உடலின் இயக்கம் சீராகாதபடி உடல் நலிந்து உறுப்புகள் பின்னமாகி
3.அதன் பின் தான் இந்த உயிரான்மா வெளியே செல்கின்றது.

நாம் எந்த நிலையில்… எந்த நோயின் காரணமாக… இந்த உடலை விட்டு வெளியே செல்கிறோமோ பாசமாக இருக்கும் அந்த உடலுக்குள் தான் உயிரான்மா செல்லும்.

அவ்வாறு அந்த உடலுக்குள் உயிரான்மா சென்றால் இந்த உடலிலே எந்தெந்த நோய்கள் உருவாகி அவஸ்தைப்பட்டோமோ… அதே உணர்வை அந்த உடலிலும் செயல்படுத்தும்.

இந்த உடலில் எந்த ஆசைகள் பட்டோமோ… எதை எதையெல்லாம் செயல்பட வேண்டும் என்று எண்ணினோமோ… இதே உணர்வுகள் நமக்குள் வளர்க்கப்பட்டு யார் மேல் பாசமாக இருந்தோமோ… அந்தப் உடலுக்குள் நாம் சென்ற பின் “பேயாகத்தான்” ஆட்டிப் படைப்போம்.

நம் ஆசைகளை நிறைவேற்ற… இந்த உணர்வுகளை இங்கே தூண்ட இந்த ஆசையின் நிமித்தமே நோய் இங்கே (முதலில்) விளைந்தது.

அதே விளைந்த உணர்வின் தன்மை உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிர் தன்னுடன் அதனை அழைத்துச் சென்று… யார் மேல் பாசம் கொண்டோமோ அவர் உடலுக்குள் சென்று… அந்த உடலுக்குள் அதே தீய விளைவை உருவாக்கி… அந்தக் குடும்பத்திலும் கஷ்டத்தை உண்டாக்கி நோயையும் உருவாக்கி… பேயான ஆசைகளைத் தூண்டி… வேதனையான உணர்வுகளை அங்கே அதிகமாக உருவாக்கி… “அந்த உடலையும் வீழ்த்தும்…”

பின் அந்த உடலில் வளர்த்த அந்த உயிரான்மா… அவர் உடலில் என்னென்ன ஆசைகள் வந்ததோ… இதே பேயின் உணர்வு கொண்டு “இன்னொரு உடலுக்குள் சென்று பேயின் தன்மையாக (இப்படி வரிசையாக) இயக்கும்…”

இந்த உடலில் இருந்து ஆன்மா (முதலில் புகுந்தது) வெளிவந்த பின் மனிதனுடைய சிந்தனையே அதற்கு இருக்காது.

காரணம் ஒரு துளி விஷத்தை உட்கொண்டால் நம் நினைவு தடுமாறுகின்றது. கூட ஒரு துளி விஷம் உட் கொண்டு விட்டால் மனிதனுடைய நினைவே இருப்பதில்லை… இழந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.விஷத் தன்மை அதிகமாகி… உயிரான்மா மனிதனுடைய நினைவை இழந்து…
2.எத்தகைய விஷத் தன்மையை வளர்த்துக் கொண்டதோ அந்த விஷத்துடன்
3.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவில் மிதந்து கொண்டே இருக்கும்.

அப்படி மிதந்து கொண்டிருக்கும் பொழுது அதனின் விஷத்தின் அளவுகோலுக்கு ஒப்ப… ஒரு விஷத் தன்மை கொண்ட உடலின் ஈர்ப்புக்குள் செல்லும். மனித உரு பெறும் தகுதி இழக்கப்படுகின்றது.

இதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆகவே வாழக்கூடிய நாள்களில் உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே மகரிஷிகள் உணர்வை உடலில் விளைய வைத்து
1.(நம்மை) உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றச் செய்து
2.யாருடைய ஈர்ப்புக்குள்ளும் சிக்காது நாம் விண் செல்ல வேண்டும்.