வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்… அவற்றிலிருந்து “அமைதியுடன் மீண்டு” ஆத்மீக வழியில் செல்வதுதான் சிறந்தது
ஞான மார்க்கத்திற்கு சென்ற அந்த ஆத்மீக வழியில் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகைகளையும்… சோலைகள் அடர்ந்த காட்டுப்பகுதிகளையும்… இந்தப் பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச்சிகரங்களுக்கும்… சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலை என்ன…?
இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும் இந்த மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும் மற்ற தொழிற்சாலைகள் உள்ள இடங்களிலும்
1.அங்குள்ள காற்று அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளும் இந்தக் காற்றுடனே அந்நிலை கொண்ட அந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளது.
மனித ஆத்மாக்களின் நல் உணர்வும், தீய உணர்வும் கொண்டவரின் சுவாச நிலை பெற்ற காற்று இந்த காற்று மண்டலத்தில் ஒரு நிலை கொண்ட மட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருப்பதனால் அந்த நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது
1.அவர்களின் எண்ணமுடன் இந்த எண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுவதினால்
2.இந்தக் காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்யும் போது
3.அத்தியானத்திற்குப் பல நல் உணர்வுகளும் அவர்களின் ஆத்மாக்களுக்கு நல் பயனும் கிட்டுகின்றன.
இதைப் போன்றே இந்தப் பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் போதும் இந்த அசுத்தக் காற்று அத்தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.
மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் போதும் இந்தப் பூமிக்கடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே.
வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால் இந்நிலைக்குச் சென்று இத் தியானம் பெறுவது எளிது.
ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு நம் வாழ்க்கையையே நாம் வாழும் நிலையையே தியானமாக்கி வாழும் பக்குவ நிலை தான் நமக்கு உகந்த உன்னத நிலை.
உடல் உபாதை வரும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்க… அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமான மருந்தை உட்கொண்டால் தான் அந்த உபாதை மறைகிறது.
அதைப் போல் இவ்வாத்மீக வழியில் நல் உணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திகளுக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்.
பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும்… அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து “எந்தப் பாதை சரியான பாதை…?” என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்று வாழ்க்கையில் வரும் இன்னல்களில் இருந்து நாம் மீண்டு சென்று “ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞானமார்க்கம்…”
இந்த மார்க்கத்தை வெறுப்புடனோ சலிப்புடனோ சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ நம்மைத் தாக்கும் இன்னல்களில் இருந்து பயந்தோ செல்வது முறையல்ல.
1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்… அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு
2.ஆத்மீக வழிக்குச் செல்வதுதான் நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உகந்த நிலை.
இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இந்த உலகம் முழுவதுமே வெளிப்படுத்தி உள்ளார்கள். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்” இன்றைய உலகில் உள்ளனர்.
வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்ந்திடாமல்… வளரும் பக்குவக் குழந்தைகளுக்கு உணர்த்திடும் நிலையும் இன்று இல்லை. ஞான வழியையும் இந்தத் தெய்வீக வழியையுமே
1.இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை என்று உணர்ந்து
2.அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.
உயிரணுவாக மனிதனாக தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவனாக வணங்கிடும் போகரும் முகமது நபியும் ஏசுபிரானும். அல்லா என்ற இறைவனையும் பரம பிதா என்ற தேவனையும் முருகா என்ற சக்தியையும் வணங்குகின்றார்கள்.
இயேசுவுக்கும் முகமது நபிக்கும் முருகர் வெங்கடாஜலபதி இப்படி நாமம் கொண்டவர்களின்… இறைவனாக இருந்து அருள் புரிபவன் சக்திக்கு மேல் உயர்ந்த சக்தி “அச்சக்தியின் சுடர்” ஒன்றை அனைவரும் போற்றி வணங்குகின்றனர்.
அந்தச் சக்தியின் செல்வப் புதல்வர்களான நாம்
1.நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாக
2.ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.