ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2024

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி

 

1.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலால் என்ன பயன்…? என்ற வினாவும்
2.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.

ஆனால்... வழக்கமான இந்தச் சுழற்சி வாழ்க்கையினை வாழ்ந்து மட்டும்… “எந்தப் பயனை எந்த ஆத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆன்மா) கண்டது...?”

ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை அடைய… உணர… பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.

தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால் அந்தப் பரம்பொருளின் அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தைச் சேமிக்கலாம்.

1.நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து
2.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
3.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு... நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறைக்குக் கூட்டி
4.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எந்த எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
5.அதே சமயத்தில் அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
6.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
7.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத் தொடரில் ஐக்கியம் கொண்டே
8.அப்படி வாழக்கூடிய பக்குவத்தை நாம் பெறுவது தான் “நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை என்பது...!”

நாகப் பாம்பு விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாக இருப்பதனால் அதன் எண்ண நிலை “எதன் நிலைக்கும்” மாறு கொள்வதில்லை.

விஷ ஜெந்துவாக நாம் காணுகின்றோம். ஆனால் அந்த விஷத்தையே அது உரமாக்கி... வைரமாக்கி... மாணிக்கமாகச் சேமித்து வளர்த்து... “ஒரு நிலையில் வாழ்கிறது...” அந்த நாகப் பாம்பு.

பல பல நினைவலைகள் உள்ளவன் தான் மனிதன். இருந்தாலும் அந்தப் பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைப் பெறுதல் வேண்டும். அதைப் பெற்றுத் “தன் பலம் காணுங்கள்...” என்று உணர்த்துகின்றோம்.

இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் வட்டத்தில் தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்த்து வாழுகின்றன.

ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ்ஜீவ ஜெந்துக்களின் நிலையில் தான் பல மாற்ற குணங்கள் உண்டு.

ஆனால்...
1.தன் நிலையுணர்ந்து மனிதன் வாழ்ந்தால்
2.உலக ஞானத்தையும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும்
3.அந்தப் பரம்பொருளின் உண்மையையும் நிச்சயம் உணர முடியும்...!