ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2024

மகரிஷிகள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்

மகரிஷிகள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்

 

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லப்படும் பொழுது சந்தர்ப்பத்தில் விபத்துகளைப் பார்க்க நேர்கின்றது. அங்கே சிதறிக் கிடக்கும் உறுப்புகளை உற்றுப் பார்த்த பின் நம்மை அறியாமல் அச்சமும் பதட்டமும் பயமும் வருகின்றது.

சிதறுண்ட அந்த உணர்வலைகளை நாம் எடுக்கப்படும் பொழுது நமக்குள்ளும் அது உருவாகி சிந்திக்கும் செயல் இழக்கச் செய்து எதற்கெடுத்தாலும் பதறும் நிலை வருகின்றது.

1.சிதைந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
2.நாம் உற்று நோக்கும் போது அதனின் வித்தாக நமக்குள் பதிவாகின்றது.
3.பதிவான பின் அந்த உடலில் விளைந்த “உறுப்புகள் சிதைந்த உணர்வுகள்” நமக்குள் வந்துவிட்டால்
4.நம்மை அறியாமலே நம் உடல் கூறுகள் சிதைந்து கொண்டே வரும்.

இதைத் தீய வினை என்று சொல்வார்கள்.

நாம் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் அதை உற்று நோக்குகின்றோம் அறிகின்றோம். இருந்தாலும் உற்று நோக்கிய தீமையை விளைவிக்கும் அந்த உணர்வுகள் வித்தாக உடலில் விளைகின்றது.

ஒரு டேப்பில் இனிமையான பாடலைப் பதிவு செய்கின்றோம். மீண்டும் அதைச் சுழல விட்டால் அதைக் கேட்கப்படும் பொழுது உடல் அசைகின்றது… இனிமையாக இருப்பதால் முகமும் மலர்கின்றது… நமக்கு மகிழ்ச்சி மேலோங்குகின்றது.

ஆனால் ஒரு வேதனை கொண்ட பாடலை இசைத்தாலோ நம்மை அறியாமலே நம் உணர்வுகள் சோர்வடைகின்றது.

ஒரு வீணையை வாசிக்கிறார்கள். சீராக இசைக்கப்படும் போது மகிழ்ச்சி வருகிறது. ஆனால் அதிலே நாதத்தை எழுப்பும் ஒரு சுருதி மாறி விட்டால் நினைவுகள் உடனே சிதறி… மனதில் இருக்கும் மகிழ்ச்சி அப்பொழுதே குறைந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் முதலிலே சொன்ன மாதிரி ஒரு மனித உடல் விபத்தில் சிதைந்த நிலைகளை நாம் உற்றுப் பார்த்த பின்… அவன் எப்படிக் கடைசி நேரத்தில் வேதனைப் பட்டானோ அதைக் கவர்ந்து கொண்டால் அந்த உணர்வின் சக்தியே நம்மை இயக்குகின்றது.

ஏனென்றால் எதை உற்றுப் பார்த்தாலும்… கண் நம் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுன்றது. மீண்டும் அதனை நினைவு கொள்ளும் போது… திரும்பத் திரும்ப எண்ணிய பின் அது விதியாக மாறி விடுகின்றது.

விதி முளைத்து விட்டால் ஒரு தடவை அச்சமடைந்ததைப் பார்த்த அந்த உணர்வுகள் விதியாக மாறி விட்டால் அந்த கதியின் தன்மையாக நாம் அடிக்கடி பயமடைவதும் என்ன ஆகுமோ என்று அந்த பயத்தின் கதியிலேயே நம்மை இயக்கும்.

இதைப் போன்று நம்முடைய வாழ்க்கையில்
1.நாம் உற்று நோக்கிப் பதிவாக்கியதை மீண்டும் எண்ணும் பொழுது விதியாக மாறி
2.விதியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் மணங்கள் “கதியாக” நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் கதியிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் எதைக் கொண்டு…? மதி கொண்டு தான் அந்த இருளை நீக்க முடியும்.

1.அதற்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை ஊழ்வினையாக நாம் பதிவு செய்ய வேண்டும்
2.பின் அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து விதியாக நாம் மாற்ற வேண்டும்.

ஏனென்றால் மனிதனின் விதியை மதி கொண்டு மாற்ற வேண்டும். மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை எல்லாம் ஒடுக்கி அதை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணிலே “அதனின் கதியில் அழியாத நிலை கொண்டு சுழன்று கொண்டுள்ளார்கள்…”

1.தன் மதியால் விதியை மாற்றி ஒளியின் சிகரமாக எத்தகைய தீமையும் தனக்குள் அணுகிடாது
2.அந்த கதியிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
3.அதை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீய வினைகளை “அந்த விதியை மாற்றி
4.அவர்கள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்.