ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 25, 2024

இலட்சுமணக் கோடு

இலட்சுமணக் கோடு

 

சூது வாது பொய் புரட்டு ஆசை கோபம் குரோதம் வஞ்சனை இது தான் இன்றைய உலகம். தர்மம் நியாயம் என்பதெல்லாம் ஒரு சிலருக்குப் பேச்சளவில்தான்.

தான் வாழ வேண்டும்… தன் குடும்பத்தார் வாழ வேண்டும்… தன் சுற்றத்தார் வாழ வேண்டும்… நான் பெரியவனா…? நீ பெரியவனா…? “பிறருக்கு மேல்… தான் “உயர்ந்த நிலையில்” இருக்க வேண்டும்…”

உயர்ந்த நிலை என்பது
1.இன்றைய மனிதர்களுக்குச் சோம்பேறித்தனமாக
2.எல்லா வசதிகளுடனும்… தானாகக் குவியும் பணத்துடனும்… வேலை வெட்டி ஒன்றும் செய்யாமல்
3.எல்லோரும் பார்த்து “நீ பெரிய பணக்காரன்… எல்லா வசதியும் உள்ளவன்” என்று சொல்வது தான்
4.இன்றைய மனிதர்கள் நினைக்கும் உயர்ந்த நிலை.

அவனது உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும் பிரிந்து சென்ற பின் அவனுடைய ஆத்மாவின் நிலையும் அதே நிலையில் தான் இருக்கின்றது. மறு பிறவியிலும் அதே ஆசையுடன் தான் வந்து பிறக்கின்றான்.

1.உள்ளதை வைத்துத் தர்மம் நியாயம் என்பதைக் கடைப்பிடிப்பவன்
2.ஆயிரத்தில் ஒருவன் கூட இல்லை.

ஒவ்வொருவனும் ஒவ்வொரு குறிக்கோளுடன் தான் அவன் பாதையில் செல்கிறான். அந்தந்தக் குறிக்கோள் அவனுக்கு முடிவு பெறுவது இல்லை. அதனால் தான் அவன் மறு ஜென்மம் எடுக்கின்றான்.

சொல்லிய பாடத்தையே திரும்பவும் ஏன் சொல்கிறேன்…? என்று நினைக்கலாம். உங்கள் பாடத்திற்கு முதல் பாகம் இது தான்.

இராமாவதாரத்தில் வால்மீகி எழுதிய கதையில் - (கதை என்று சொல்லாதே…!) எழுதிய நூலில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தமுடனும் பிற்கால மனிதர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கமாக எழுதி உள்ளார்.

அதைப் படிப்பவர்களும் அந்த நூலின் தத்துவத்தைக் கேட்பவர்களும் அதைக் கதையாகத்தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர… புரிந்து ஏற்பது இல்லை…!

காட்சி:-
சீதை உட்கார்ந்து இருத்தல்… லட்சுமணன் கோடு போட்டுக் கோட்டைத் தாண்ட வேண்டாம்…! என்று சொல்லிச் செல்தல். இரட்டை மாட்டு வண்டியில் மாடு கோட்டைப் பார்த்துவிட்டுத் திரும்பி செல்கிறது.

இதனுடைய அர்த்தம் புரிகின்றதா…?

1.ஒன்று வேண்டாம் என்று சொல்லும் பொழுது
2.சொல்லியும் அதைத் தாண்டிச் செல்லும் பொழுது “படும் இன்னல்” அந்த நூலில் இருக்கின்றது.

ஆறறிவு படைத்த மனிதனுக்குச் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடிவதில்லை. ஐந்தறிவு படைத்த மாடு கோட்டைத் தாண்டாமல் திரும்பிச் செல்கிறது.

ஆறு அறிவு படைத்தவன் புரிந்து கொள்ளாததை எல்லாம்… அதாவது…
1.தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது
2.எல்லா வசதிகளும் கண்டுபிடித்து விட்டோம்
3.இந்த மண்டலத்தில் இருந்து பிற மண்டலத்திற்குக் கூட “செல்லும் வழியைக் கண்டுபிடித்து விட்டோம்…”
4.மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை…! என்று ஒவ்வொருவரும் எண்ணுகின்றனர்.

ஆனால் ஐந்து அறிவுடைய மிருக வர்க்கங்கள் பறவைகள் புழு பூச்சி இவைகளுக்கு இருக்கும் மனச்சாந்தி கூட எந்த மனிதனுக்கும் இல்லை. எனக்கும் தான்…! (குருநாதர்).

எனக்கும் மனிதர்களை நல்ல வழியில் திருப்ப வேண்டும் என்ற ஆசை ஒன்று இருக்கிறது அல்லவா… அதைத்தான் சொல்கின்றேன்.

இந்தக் கால சூழ்நிலையில் தனி ஒரு மனிதனால் எதுவும் செய்ய முடியாது. காலத்துடன் ஒத்துத் தான் செல்ல வேண்டும்.

1.ஆசையை அடக்க ஈஸ்வர தியானத்தில் இருந்து
2.இந்த யுகம் மாறி அடுத்த யுகத்திலாவது மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளாமல்
3.நல்ல நிலையில் இருக்கத்தான் இந்தப் பாடங்கள் எல்லாம்.

பேய் பிசாசு என்பதெல்லாம் உண்மை. பேய் பிடித்து ஆட்டுகிறது என்று சொல்கின்றார்கள். அதுவும் உண்மைதான்…! அவனுடைய மனதே அவனுக்குப் பேய்தான்.

பேயாக இருக்கும் மனதை அடக்கி மனிதனாகி தெய்வமாகலாம். ஒவ்வொரு மனிதரிலும் பேயாகவும் மனிதனாகவும் தெய்வமாகவும் இருக்கின்றார்.

பேயான மனதை அடக்கி மனிதனாகித் தெய்வீக அருள் பெறலாம்.
1.அதற்கு வயது வரம்பு வேண்டாம்.
2.வயதான பிறகு தான் இந்த நிலை என்று எண்ண வேண்டாம்
3.தன்னைத்தானே உணரும் வயது முதற் கொண்டே இந்த நிலைக்கு வரலாம்.