ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2017

சிதம்பர இரகசியம் – திருமூலர் உணர்ந்த மெய் உணர்வுகள்

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் திருமூலர்.

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த வான இயல் தத்துவத்தைக் பின் வந்த திருமூலர் தெளிவாகத் தெரிந்து கொண்டார்.

“தில்லை..,” என்பது ஒரு எல்லை. எல்லை இல்லாத உலகில் தில்லை என்ற உணர்வு வரப்படும் பொழுதுதான் ஒரு கோள் என்ற நிலைகள் வருகின்றது. பரம் என்ற நிலையும் பரம்பொருள் என்ற நிலைகள் உருவாகின்றது.

“தில்லை நடராஜா..,” என்று நம் பூமியின் செயலுக்குக் காரணப் பெயரை வைத்தார். நம் பூமி “நிற்காமல்.., சுழன்று கொண்டேயிருக்கின்றது” என்பதைத் தில்லை நடராஜா என்று பெயரை வைத்தான்.

அது உருவமில்லாத நிலைகள் கொண்டு அருவம் என்ற நிலைகள் உணர்த்தப்படும் பொழுது “திரு ஆவடையச் சுழலச் செய்து..,” மனித உருவைப் போட்டு இவனே சிவன் என்றும் இயக்கத்தின் நிலைகளில் “நடனமாடுகின்றான்..,” என்றும் காட்டினார் திருமூலர்.

அந்த உணர்வின் தன்மை உராயப்படும் பொழுது உணர்வுக்கொப்ப இங்கே உருமாறுவதும் உணர்ச்சிகள் எவ்வாறு வருகின்றது என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார்.

திருமூலர் கூறியது.., “நெருப்பிலிருந்து தான் நீர் தோன்றியது”.

ஆதியிலே ஒன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது அது ஆவியாக மாறி எடையற்றதாக மாறி நாளடைவில் விஷமாக மாறி நெடி கலந்த உணர்வாக மாறி நெடியின் தன்மை வரப்படும் பொழுது புதிதாக உருவாவதை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது “நெருப்பு” உண்டாகின்றது.

நெருப்பாகும் பொழுது உணர்வின் தன்மை தாக்குண்டு நகர்ந்து ஓடும் பொழுது அங்கே ஈர்க்கும் “காந்தம்” வருகின்றது.

ஓடும் நிலைகளில் தாக்கும் நிலையில் வெப்பமாகும் பொழுது பராசக்தி என்றும் தாக்குதலால் நகர்ந்து ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும் தாக்குதலால் இயக்கச் செய்த விஷத்தை ஆதிசக்தி என்றும் கண்டுர்ந்தார் திருமூலர்

“கருமாரி..,” (கருமாரி – உருமாறி) ஒன்றுக்குள் ஒன்று உருவாகி அது மாற்றலான நிலைகளைச் செய்கின்றது என்றும் கருமாரி என்று திருமூலர் பெயர் வைக்கின்றார்.

ஆதி இலட்சுமி பெண்பால் தான். ஆதிபராசக்தி வெப்பம். கருமாரி என்பது ஒரு விஷத்தின் தன்மை ஒன்றுக்குள் சென்றபின் அது “மாற்றமடைந்து.., மாற்றமான” நிலைகளைச் செயல்படுத்தும்.

தாக்குதலால் வெப்பமானது, ஈர்க்கும் காந்தமானது. ஆனால், ஈர்க்கும் காந்தமான பின் அது எதனைக் கவர்கின்றதோ அந்த மணத்தை இந்த “விஷம் இயக்கிக் காட்டும், கருமாரி”.

எதனுள்ளும்.., “ஊடுருவி” அது மாற்றலான உணர்வை அது இயக்கிக் காட்டும் என்பதைக் காரணப் பெயராக வைத்தார் திருமூலர்.

இதைப் போன்று மோதுண்டு மோதுண்டு ஆவியாக மாறி இணைந்து கொண்டு இணைந்து கொண்ட அணுக்களின் உருமாற்றமாகி மோதலில் வெப்பமாகிக் கவர்ந்து கொண்ட உணர்வு ஆவியாகி மேகமாக மாறி மேகக் கூட்டத்திற்குள் அணுக்கள் மோதும் பொழுது நீராகி நீருக்குள் அணுக்கள் சிக்குண்டு ஓர் பரம்பொருளாகி “இப்படித்தான்.., உலகம் பிறந்தது..,” என்று திருமூலர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆனால், திருமூலரின் தத்துவத்தை இன்று அதைத் திருமூல மந்திரம் என்று பறைசாற்றி மாற்றிவிட்டனர்.

திருமூலர் இந்த இயக்கத்தின் உண்மையை உணர்ந்து தில்லை நடராஜா.., தில்லை அம்பலத்தாண்டவா.., என்று பெயர் வைக்கின்றார்.

தில்லை நடராஜா என்பது பூமி. தில்லை அம்பலம் என்பது நம் உடல். ஒரு எல்லையாக வாழ்கின்றது.

இந்த உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்ப இந்த உடலின் அமைப்பும் இந்த உடலுக்கொப்ப மனிதனின் இயக்கமும் இந்த உடலுக்கொப்ப அந்தச் செயலும் இந்த உணர்வுக்கொப்ப செயலும் உணர்வுக்கொப்ப உடலும் என்ற நிலையைத் திருமூலர் “தன் இன மக்கள் அறிய வேண்டும்” என்பதற்காகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதை யாராவது தெரிந்திருக்கின்றோமா..,? உணர்ந்திருக்கின்றோமா..,?” என்றால் தில்லையம்பதியில் வாழ்பவர்களுக்கே தெரியவில்லை.

தில்லை நடராஜா என்று “சூனியப் பிரதேசம்” ஆனாலும், திருமூலர் சமாதி தான் அதை அடக்கமாக வைத்து அங்கே “சிதம்பர இரகசியம்…,” என்று பொருள் பறிக்கின்றனர். உண்மையைப் பெறச் செய்யவில்லை.

பொருளுக்கு இச்சைப்படுகின்றான். இச்சைப்பட்ட பொருளால் இவன் வாழ்கின்றானா என்றால் இல்லை.

ஆனால், மூலத்தைக் கண்ட அந்த மெய்ஞானியின் உணர்வுகள் இங்கே உண்டு. அதை நீங்கள் நுகர்ந்து திருமூலர் கண்டுணர்ந்த அனைத்து நிலைகளையும் காண வேண்டும். உண்மையை உணரவேண்டும்.

அதற்கே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய இயற்கையின் பேருண்மையின் நிலைகளை “எல்லோரும் அறியவேண்டும்.., அறிய முடியும்” என்ற நோக்கில் தான் இதை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே, உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழுங்கள்.