ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2017

அன்று ஞானிகள் கொடுத்த ஆலயப் பண்புகள் இன்று நடைமுறையில் எப்படி மாறிவிட்டது?

இன்று நாம் ஆலயத்திற்குச் செல்லும் நிலையில் என்ன செய்கின்றோம். பழனியில் முருகன் கோவிலில் பார்க்கலாம்.

உள்ளே வரிசைப்படுத்திச் செல்லும் பொழுது அங்கே மணியடித்துத் தீபாரதனை காட்டினால் போதும். உடனே என்ன நடக்கும்? இவர் அவரைத் தள்ளுவார், அவர் இவரைத் தள்ளுவார்.

அப்படித் தள்ளும்போது, “ஏனய்யா.., எருமை மாதிரி இப்படித் தள்ளுகின்றாய்..?” என்று இந்தப் பக்கம் திரும்புவார்.

உடனே அவர் “நீ ஏனய்யா.., எனக்கு மறைக்கின்றாய்?” என்ற இந்த உணர்வு வரும்.

அதே சமயத்தில் இங்கே மறைக்கப்படும். ஆனால், இந்தப் பக்கம் காசைக் கொடுத்துச் சாமியைத் தரிசனம் செய்ய வருவோரைப் பார்த்தபின் என்ன செய்வார்கள்?

“ஐயா., வாங்க, வாங்க..,” என்று வாட்ச்மேன் இவர்களைக் கூப்பிடுவார். ஏனென்றால், அவர் 50 அல்லது 100ரூபாய் பணம் கொடுக்கின்றார். “ஐயரே…, நீ சீக்கிரம் மணி அடி ஐயா..,” என்று இவர் அவருக்குக் கட்டளை இடுவார்.

கோவிலின் இன்றையப் பண்புகள் இப்படித்தான் இருக்கின்றது.

நான் பழனியில் வாழ்ந்தவன். இதையெல்லாம் அடிக்கடி நான் பார்த்தவன்.

உயர்ந்த பண்பு கொண்டு அன்று போகன் மனிதனுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்றிடும் நிலைக்காக இந்த முருகன் சிலையை அமைத்தான்.

அந்தச் சிலையை உற்றுப் பார்த்து நம் எண்ணத்தால் அந்தச் சக்தியைக் கவரப்படும் பொழுது நம்மையறியாது வந்த தீமைகளை அகற்றும்படிச் செய்தான்.

ஆனால், நாம் யாரும் அதைச் சிந்திக்கவில்லை.

இன்று முருகனைப் பற்றிய பக்திப் பாடல்களும் பல நிலைகள் கொண்டு எங்கிருந்தோ கால்நடையாக நடந்து சென்று அந்த முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்தால் நமக்குப் பண்பு கொண்டு செய்வான். அவன் நமக்கு அருள்பாலிப்பான் என்ற நம்பிக்கையைத்தான் அங்கே காட்டுகின்றார்கள்.

ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டுகின்றார்களே தவிர எதனை ஆசைப்பட வேண்டும்? எதன் மேல் நாம் ஆர்வத்தைக் காட்ட வேண்டும்? என்ற நிலைகள் அங்கே இல்லை.

ஆகவே, இதை போல பண்புகளை மறந்து நல்ல ஒழுக்கங்களை மாற்றிவிட்டு நம்மையறியாமலே நமக்குள் தண்டனை கொடுக்கும் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொண்டுள்ளோம்.

ஒருவர் மேல் பகைமையாகிவிட்டால் அந்தப் பகைமையை ஊட்டும் சக்தியாக எனக்குள் வந்துவிடும். பின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவருக்கு “எதையாவது இடைஞ்சல் செய்யவேண்டும்..,” என்ற எண்ணங்கள் வரும்.

நண்பர்களுக்குள் உண்மையாகப் பகைமை ஆகிவிட்டால் அவர் தொழிலில் முன்னேற்றம் அடைந்து வந்தால் போதும்.

அடுத்து இதைத் தலைகீழாக எப்படி மாற்றிட வேண்டும் என்றும் பகைமை உணர்வு கொண்டு அடுத்து வியாபாரத்திற்குச் சென்றால் அவரைப் பற்றித் தவறாகச் சொல்லி அவரைக் கீழே வீழ்த்திவிடும் உணர்வுகள்தான் அங்கே தோன்றுகின்றது.

அவருக்குக் கெடுதல் செய்துவிட்டால் அவர் வாழ மாட்டார் என்று எண்ணுகின்றோம்.

அதே உணர்வுகள் நமக்குள் வளர்ந்துவிட்டால் நமக்குள் உள்ள நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது என்று எண்ணுவதில்லை.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைப்பதற்குத்தான் பக்தி என்ற பெயரால் உருவங்களை அமைத்து உயர்ந்த குணங்களைக் காவியமாக்கி அந்தக் காவியத்தின் தன்மையை நாம் எண்ணத்தால் எடுத்தோம் என்றால் “அத்வைதம்”.

இந்த உருவத்தைப் பார்க்கும் பொழுது “துவைதம்”. அந்த உயர்ந்த குணங்களை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே பட்டால் “விசிஷ்டாத்வைதம்”. உணர்ச்சிகள் நம்மைத் தூண்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் உணர்வின் அணுவாக மாறும் பொழுது நம் உடலாக மாறுகின்றது, துவைதம்.

இவ்வாறு நம் உடலை ஆக்கவேண்டும் என்று நல்ல பண்பு கொண்டு ஆலயங்களைக் காட்டியுள்ளார்கள். இதை நாம் இப்படி வணங்கி வந்தாலும் அடுத்த கணம் ஒருவர் நம்மிடம் கேட்கின்றார்.

இந்தக் கல்லை வணங்கி உனக்கு என்ன கிடைத்தது என்று கேட்கின்றார். இந்தக் கல் உனக்குத் தருமா..,? என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால், அந்தக் கல்லிலே காட்டப்பட்ட காவியக் கருத்துக்களை நாம் எண்ணத்தால் எடுக்கப்படும் பொழுது இது அத்வைதமாகி நம் உயிரிலே படப்பட்டு அந்த உணர்வின் அணுவாகி அந்த அணுவான பின் அதற்கு இரையாகத் தேவைப்படுகின்றது.

அந்த நல்ல குணங்களைத்தான் அது உணவாக உட்கொள்ளும்.

அந்த நல்ல குணங்களை உணவாக உட்கொள்ளும் அதை ஈர்க்கப்படும் பொழுது நாம் சுவாசித்து நம் உயிரிலே படும் பொழுது அந்த நல்ல செயல்களைச் செயல்படும் நிலைகளும் மகிழ்ச்சி பெறும் நிலைகளும் நமக்குள் உருவாகின்றது.

அதே சமயத்தில் அந்த அணுவின் தன்மை வளர்ச்சி பெற்றால் உடல் ஆரோக்கிய நிலையும் பெறுகின்றது. இதையெல்லாம் தத்துவ ஞானிகள் சாதாரண மக்களும் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள இவ்வழியைக் காட்டினார்கள்.

அந்த அருள்ஞானிகள் காட்டிய அருள் வழியில் உயர்ந்த உணர்வுகளைச் சுவாசித்தால் நாம் தெய்வ குணத்தைப் பெற முடியும். தெய்வீகச் சக்திகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

தெய்வமாக - அதுவாக நீ ஆகு.., தெய்வச் செயலாக நீ செய்..,” என்பதே ஆலயத்தின் தத்துவம். இனியாவது அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்வோம்.