ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2017

புரையேறுதல் - விபத்துகளும் நிகழ்ச்சிகளும் ஏற்படுவதற்குக் காரணம்

இன்று உலகெங்கிலும் விஞ்ஞான அறிவு கொண்டு டி.வி.,க்களில் ஒலி ஒளி பரப்பச் செய்யப்படும் பொழுது அந்த ஒலி ஒளி அலைகளை அதே அலைவரிசையில் வைக்கப்படும் பொழுது அங்கே நடக்கும் காட்சிகளைக் காணுகின்றோம்.

ஒரு பக்கம் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே படமாக்கிப் பதிவாக்குகின்றார்கள். அதை அலை வரிசைகளாக அலைகளாக மாற்றுகின்றார்கள்.

இருக்கும் இடத்திலேயே அந்த உணர்வின் தன்மையை ஒலியைப் பதிவாக்குகின்றார்கள். அந்த உணர்வலைகளை உலகம் முழுவதும் எல்லோருக்கும் பரப்பச் செய்கின்றார்கள்.

உலகம் முழுவதும் பரவச் செய்யும் பொழுது இதன் அலைவரிசையில் இங்கே ஒலிபரப்பு செய்யப்படும் பொழுது அதே அலை வரிசையில் மற்றவர்கள் அவர்கள் இருப்பிடத்திலிருந்தே உற்றுப் பார்க்கும் நிலை வருகின்றது.

இன்றும் பார்க்கலாம். நண்பர்களுக்குள் பதிவாக்கிவிட்டால் நண்பனை எண்ணி அவனை நினைவு கொள்ளும் பொழுது அவனின் உருவ நிலை உங்கள் முன் நிற்பதைக் காணலாம்.

ஆக, இதைப் போல மனித உடலுக்குள் ஒன்றைப் பதிவாக்கிவிட்டால் அவனின்று வெளிப்படும் உணர்வின் அலைகள் இங்கே பதிவாகின்றது. அலைகளாக மாறுகின்றது.

பதிவான உணர்வினை நினைவுகொள்ளும் பொழுது குவித்து அந்த உணர்வின் தன்மைகளை அறிகின்றோம். அவனிடம் எந்த உணர்வுடன் உறவாடினோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் நுகரப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மையால் உடலை இயக்குகின்றது.

பண்பு கொண்டு பரிவு கொண்டான் என்றால் பண்புடன் எனக்கு உதவி செய்தான் உபகாரம் செய்தான் என்ற உணர்வை நுகரும் பொழுது நமக்குள் மகிழ்ச்சியான உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றது.

அப்பொழுது நண்பனின் நினைவாற்றல் நமக்குள் மகிழச் செய்யும் நிலைகளாக வருகின்றது.

ஆனால், பண்புடன் வாழ்ந்து பகைமை உணர்வை எடுத்துத் அவனால் தீமைகள் விளைந்தது என்ற உணர்வுகளை இருவரும் பதிவாக்கிக் கொண்டால் என்ன நடக்கின்றது?

இங்கே தன் வாழ்க்கையில் “சிரமம்..,” என்ற உணர்வுகள் உந்தப்படும் பொழுது “எனக்குத் துரோகம் செய்தான்..,” என்ற உணர்வின் வேகத்தைக் கூட்டும் பொழுது அவனில் உருவான இந்த உணர்வுகள் இவனின் உணர்வுகள் அங்கே பதிவானதால் அந்த உணர்வுகள் இரண்டுக்கும் மோதலாகின்றது.

அப்படி மோதலாகி அங்கே பகைமை உணர்ச்சிகளைத் தூண்டி அவன் உணவாக உட்கொள்ளும் நேரமாக இருந்தால் உள் இழுக்கும் செயல் இழந்துவிடுகின்றது.

அப்பொழுது “புரையோடுகின்றது”. புரையேறும் போது நுரையீரலுக்குள் (சாதம்) ஒரு பருக்கை போனால் மடிந்துவிடுவான்.

அல்லது ஒரு வாகனத்தை ஓட்டிச் செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். கண்ணுற்றுப் பார்த்து வாகனத்தை ஓட்டிச் செல்லும் நிலையில் அங்கிருந்து (அவனின் உணர்வுகள்) கவர்ந்து வாகனத்தைச் சீராக இயக்கவிடாது இடைமறிக்கும்.

வாகனம் ஓட்டும் பொழுது எதிரில் வரும் நிலைகளைக் கவர்ந்து அதற்குத்தக்க இவன் நிலைகள் கொண்டு சீராக இந்த வாகனத்தை ஓட்டினாலும் அவனின் உணர்வுகள் (புரை) இடைமறிக்கும்.

அப்படி இடைமறிக்கும் உணர்வால் அவனை இவன் எண்ணும் பொழுது அவனுக்குள் இருக்கும் உணர்வுகள் இயக்கப்பட்டு எதிர்மறை கொண்டு தாக்கப்படும் பொழுது “ஒரு நொடி..,” அவன் சிந்திக்கும் நிலை இழந்தால் “ஆக்சிடென்ட்”.

இதே போல மனிதனுக்கு மனிதன் வாழும் பொழுது பகைமை உணர்வு கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தில் தொழில் செய்யும் பொழுது இத்தகையை நிலை ஆனால் புரையினால் அவன் மரணமடையும் நிலையும் வருகின்றது.

இதைப் போல ஒரு எலெக்ட்ரிக்கில் வேலை செய்கின்றான் என்றால் இதைப் போல் புரை ஆகி தன்னுடைய வேகத்தின் உணர்வைக் கூட்டினால் சிந்திக்கும் திறன் இழந்துவிடுகின்றான்.

தான் சிந்திக்கும் செயலிழந்து அங்கே மின்சாரம் பாயும் கம்பியில் கையை வைத்து இவன் மடிந்து விடுகின்றான். இதைப் போன்று நாம் பல நிலைகளில் செல்லும் பொழுது “ஒரு நொடி தவறினால்.., மனிதனை வீழ்த்திவிடுகின்றது”.

ஆகவே, “மனிதனுக்கு மனிதன் தொடர்பு இல்லாதவர்.., எவருமே இல்லை”.

பகைமை கொண்டாலும் உணர்வுகள் தொடர்பு உண்டு. மகிழ்ந்தாலும் நமக்குள் தொடர்புண்டு.

மனிதர்கள் எவரும் பிரிந்து வாழ்ந்ததில்லை. பிரிந்து வாழ்கின்றோம் என்று நாம் நினைக்கின்றோம்.

ஆனால், நமக்குள் அங்கே பிரிவின் எண்ணங்கள் நுகரப்படும் பொழுது நம் உடலுக்குள் “அந்தப் பகைமையான உணர்வின் அணுக்களும்.., இந்தப் பண்புடன் வளர்த்த இந்த உடலுக்குள் இருக்கும் அணுக்களும்..,” அதுவும் இதுவும் போர் முறையாக மாறிவிடுகின்றது.

ஒன்றை ஒன்று உணர்ச்சிகளால் தாக்கப்படும் பொழுது நம் உடலில் மேல் வலியும் கை கால் குடைச்சலும் குத்தலும் ஏற்படுகின்றது.

சில பேர் சொல்வார்கள், உடலில் “பளீர்..,” என்று ஊசி குத்துவது போல் இருக்கின்றது என்பார்கள். பகைமை உணர்ச்சிகள் கொண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த உணர்ச்சியின் தன்மை நம் உடலுக்குள் வேதனையைக் கொடுக்கும் நிலையாக வருகின்றது.

இதைப் போன்று நாம் “எங்கேயோ.., பகைமை உணர்வைப் பெற்றோம்…, அவனின்று விடுபட்டிருக்கிறோம்” என்று நினைக்கின்றோம்.

ஆனால், “அவனின்று நுகர்ந்த உணர்வு.., நமக்குள் நின்று அதனின் வீரியத்தை ஊட்டும் பொழுது.., நல் உணர்வை ஊட்டிய அணுக்கள் இங்கே அஞ்சி நடுங்குகின்றது”.

இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இதனால் உடலில் ஏற்பட்ட உணர்வுகள் சிந்திக்கும் திறன் இழக்கின்றது. ஒரு செயலின் தன்மை சீராக நடக்காது குறையப்படும் பொழுது வேதனைப்படுகின்றோம்.

வேதனையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகின்றது.

“நினைத்த காரியம்.., நடக்கவில்லை” என்றால் உணர்வுகள் உந்தப்பட்டு கோபத்தின் உணர்ச்சிகள் ஏறுகின்றது. தன்னையே அழித்திடும் நிலைகள் வருகின்றது.

அல்லது தன்னுடைய சார்புடையோர்கள் இதன் வழி நடக்கவில்லை என்றால் அவர்களைக் கொன்றுவிடும் உணர்ச்சிகளையே தூண்டுகின்றது.

ஆகவே, இத்தகைய உணர்வுகளிலிருந்து நாம் தப்புதல் வேண்டும். நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் பிற துன்ப அலைகள், இவை எல்லாம் விஷம்.

அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு நமக்குள் மெய்ஞானிகளின் அருள் ஒளி இருந்தால்தான் முடியும்

நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து, நீங்கள் இந்த வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி, உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் குடும்பத்தில், யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.

எல்லாம் நல்லதாகவே நடக்கும்.