ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2017

விநாயகர் தத்துவம் - 4

1. பிரணவத்திற்குரியவன் விநாயகன்
ஒரு உயிரணு எந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்ததோ, அதற்கொப்ப அந்த உயிருக்குள் தாவர இனச் சத்து “ஓ..,” என்று பிரணவமாகின்றது. “ம்..,” என்று பிரம்மம் சிருஷ்டியாகின்றது.

ஆக உடலாகும் பொழுது சிவன் இராத்திரி. இந்த உயிரின் நிலைகள் துடிப்பாகும் பொழுது, “மின்மினிப் பூச்சி போல நம் உயிரின் துடிப்புகள் மின்னிக் கொண்டேயிருக்கும்.

ஆனால், அந்த மின்னலின் ஈர்ப்புக்குள் ஒரு செடியின் சத்தை, உதாரணமாக இந்த உயிரணுவிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் தன் அருகிலே இருக்கக்கூடிய கடலைச் செடியின் மணத்தை அது நுகர்ந்து, உயிருக்குள் பட்டவுடனே, அந்த மணத்தை ஜீவன் பெறச் செய்கின்றது. 

இதற்குப் பெயர்தான் “ஓம்..,” பிரணவம்.

கடலைச் செடியின் மணம் இந்த உயிருக்குள் ஈர்க்கப்படும் பொழுது, அந்த உயிர் எப்படித் துடிக்கின்றதோ அதைப் போல் கடலைச் செடியின் மணம் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

 இதுதான் “ஓ…,” அந்த “உணர்வின் சத்து.., இந்த உயிருடன் இணையும் பொழுது இதற்குப் பெயர் “சிவம்.

ஆக, கடலைச் செடியின் மணத்தை இந்த உயிர் சுவாசிக்கும் பொழுது, அது பிரணவம் – “ஜீவனாகின்றது. 

அதனால்தான் பிரணவத்திற்கு உரியவன் விநாயகன் என்பது.
2. சிவனுக்கு முந்தியவன் விநாயகன்
சிவனுக்கு முந்தியவன் விநாயகன் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. கேட்டால் நமக்கு விளக்கம் சொல்லத் தெரியாது. ஞானிகள் உருவாக்கிய சாஸ்திரப்படி அதன் உட்பொருளைப் பார்ப்போம்.

உடலாக உருவாவதற்கு முன் இந்தக் கடலைச் செடியின் சத்துதான் உயிருக்குள் பட்டு அதனால் ஜீவனாகின்றது, ஒரு புழுவாக உருவாகின்றது.

ஆக, அந்த உணர்வின் சத்து இந்த உடலிலே வினையாகச் சேர்க்கப்படும் பொழுது வினைக்கு நாயகனாக “விநாயகா..,” என்று உடலானபின் அந்தக் கடலைச் செடியின் மணம் இந்த புழுவின் உடலிலே எண்ணமாகின்றது.
3. மூஷிகவாகனா
எண்ணத்தின் தன்மை கொண்டு நினைவு கூறும் பொழுது, இந்த உணர்வுகள் இயங்கி மூஷிகவாகனா. 

எந்தக் கடலைச் செடியை நுகர்ந்து உடலானதோ அதைச் சுவாசித்து அந்தக் கடலைச் செடி இருக்கும் பக்கம் அந்த மணத்தை நுகர்ந்து அந்தக் கடலைச் செடியின் மணமே இந்தப் புழுவை வாகனமாக கடலைச் செடி இருக்கும் பக்கம் அழைத்துச் சுமந்து செல்கின்றது.

இதுதான் மூஷிகவாகனா. அதற்குத்தான் எலியை வாகனமாகப் போட்டுள்ளார்கள்.

கடலைச் செடியின் சத்து உடலாகும் பொழுது சிவம். சிவத்திற்குள் விநாயகன். சிவனுக்கு முந்தியது.., இந்த மணம்.

ஆக, இந்த மணம்தான் “சுவாசிக்கும் பொழுது.., (உயிரிலே மோதுவதால்) பிரணவம். பிரணவத்திற்கு உரியவன் விநாயகன்.

எந்தக் கடலைச் செடியின் மணமோ அது உடலாகும் பொழுது இதுதான் வினை. அந்த வினைக்கு நாயகனாக (புழுவாக) உடலாகின்றது.

அந்த உடலான நாயகன் அந்த கடலைச் செடியின் மணத்தை நுகரும் பொழுது “மூஷிகவாகனா, அதைச் சுமந்து செல்கின்றது. நாம் சுவாசிக்கும் மூச்சே நம்மைச் (உடலை) சுமந்து செல்கிறது என்பதை மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

ஏனென்றால், எல்லாமே “காரண காரியங்களுக்காக.., ஞானிகளால் வைக்கப்பட்ட பெயர்கள்.

அந்த ஞானிகளின் அருள் சக்தியை நாம் சுவாசித்தோம் என்றால் மூஷிகவாகனா. அவர்கள் பெற்ற ஞானமும் அவர்கள் விண் சென்ற நிலையையும் எளிதாக அடையலாம்.