நமது ஆலயப் பண்புகள் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு நோடியிலேயும்
தீமைகளை அகற்றும் சக்தியாகவும் நமக்குள் ஒருவருக்கொருவர் இணைக்கும் சக்தியாகவும் தான்
ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
உண்மையான விரதம் எது?
விடிய விடிய நாம் விரதம் இருக்கின்றோம்.
சாப்பாடு சாப்பிடுவதில்லை. நான் அரிசி சாதம் சாப்பிடுவதில்லை, அதனால் கோதுமை சாதம்
சாப்பிடுகின்றேன்.
இல்லையென்றால் அடுத்து வாழைப்பழத்தை
மட்டும் சாப்பிடுகின்றேன். ஏனென்றால், இரண்டாவது தரம் அரிசி சாதம் சாப்பிட்டால் “விரதத்திற்கு
அர்த்தமில்லை..,’ என்றும் சொல்வார்கள்.
ஆனால், சாஸ்திரம் எதைக் காட்டுகின்றது?
நீ வழக்கமாகக் கெட்டதை எண்ணுகின்றாய்.
அதைச் சாப்பிடுவதில்லை. அருள் ஞானிகளின் உணர்வைச் சாப்பிடுகின்றேன் என்றால் சரி ஆகும்.
ஆகவே, உண்ணாமல் இருப்பது விரதம் இல்லை.
கெட்டதை எண்ணாமல் இருப்பதே விரதம். தீமை செய்யும் உணர்வுகளை உட்புகாது அருள் ஞானிகளின்
உணர்வை உட்கொள்வதே ஞானிகள் காட்டியது.
நீங்கள் நலமாக இருக்க வேண்டும் உங்கள்
குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதுதான் உண்மையான
விரதம்.
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல்
திறக்கும் நாளில் விடிய விடிய முழித்துக் கொண்டிருப்பார்கள். “முழித்திருக்க வேண்டும்..,”
என்ற நிலையில் எதை எதையோ பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
இதுவெல்லாம் சாங்கிய சாஸ்திரம். ஆனால்,
நாம் எதை நினைக்கவேண்டும்?
“துன்பங்களை அகற்றும்.., துன்பங்களை
அகற்றிய அந்த அருள் ஞானிகளின் அருள் சக்திகளைத்” தொடர்ந்து சுவாசிக்க வேண்டும். இந்த
உணர்வுகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடலிலுள்ள
ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி
உலக மக்கள் அனைவரது உடலிலும் படரவேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் மகரிஷிகளின் அருள்
சக்தி கலந்து அவர்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தியானிக்க
வேண்டும்.
இத்தகைய நிலைகளை நாம் எண்ணி விடிய விடிய
இதே எண்ணம் கொண்டு இருத்தல் வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தியை நாமும் பெற்று
மகரிஷிகளின் அருள் சக்தியால் அனைவரும் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்ற உணர்வுகளைப்
பாய்ச்சுதல் வேண்டும்.
“என்னைப் போலவே.., பிறரை எண்ணுகின்றேன்”.
பிறர் “துன்பமில்லாத நிலைகளில் வாழவேண்டும்” என்று எண்ணுகின்றேன். அப்பொழுது, “துன்பமில்லாத
வாழ்க்கை வாழும் அந்த அணுவின் தன்மை” எனக்குள் விளைகின்றது.
இத்தகையை நிலைகளை எவர் எண்ணுகின்றார்களோ
அதுவே தான் உண்மையான விரதம் ஆகின்றது.