நமது வாழ்க்கையில் எப்பொழுது துன்பத்தைக் காணுகின்றோமோ
அந்த உணர்வுகள் நமக்குள் விளையாது அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நான் பெறவேண்டும் எங்கள்
உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல்
வேண்டும்.
ஒருவர் நம்மைத் துன்பப்படுத்தினாலும் எங்கள் பார்வை அவரை
நல்லவராக்க வேண்டும் எங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும்
என்று எண்ண வேண்டும்.
அவர் தீங்கின் உணர்வுகள் நமக்குள் பதிவாகி அவரின் உணர்வு
நமக்குள் வளர்ந்து விட்டால் “நமக்குத் தீமை செய்யவேண்டும்..,” என்று அவர் எண்ணிய உணர்வுகள்
நமக்குள் அவரை எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் நமக்குள்ளே தீமையை விளைய வைக்கும்.
அப்பொழுது அந்தத் தீமை செய்தவன் நம்மைப் பார்த்துச் சொல்வான்.
“பார்.., அவன் செய்த வினைக்குத்தான் அனுபவிக்கின்றான்..,” என்று அவன் அதைக் கண்டு இரசிப்பான்.
அப்படி இரசிக்கப்படும் பொழுது அதே உணர்வின் தன்மை வருகின்றது.
தீமைகள் விளைந்த இவன் இறந்தபின் அவன் உடலுக்குள்ளே சென்று
அந்தத் தீமையை விளைய வைத்து அவனை வீழ்த்திவிடுவான் என்பதை மறந்துவிடுகின்றான்.
இயற்கையின் நியதியாக இவ்வாறு இயக்கும் நிலைகளிலிருந்து
யாரும் இதிலிருந்து தப்ப முடியாது.
நம்மை உருவாக்கிய ஈசனை அவன் துணை கொண்டு ஒளியின் சரீரமான
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி அந்த உணர்வுகளை நம்
உடலுக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.
விநாயகர் தத்துவத்தில் மனிதனின் வாழ்க்கையில் எதைச் சுவாசிக்கின்றோமோ
மூஷிகவாகனா என்று காட்டியுள்ளார்கள்.
அந்தக் கசந்த வாழ்க்கையை நடத்தி அப்படிக் கசந்த வாழ்க்கையே
கணங்களுக்கு அதிபதியானால் இந்த மனிதப் பிறவியில் எதன் நிலைகளை எடுத்தாயோ அதற்குத்தக்கவாறு
பரிணாம வளர்ச்சியில் தேய்பிறையாக கீழே போவாய் என்று காட்டுகின்றார்கள்.
உதாரணமாக பௌர்ணமி இன்று முழு நிலாவாக இருக்கின்றது. ஆனால்
அடுத்த நாள் பார்த்தால் மற்ற கோள்கள் மறைக்கின்றது. சூரியனின் கதிரியக்கங்கள் இதற்கு
வராது தடுக்கப்படும் பொழுது ஒரு பக்கம் இருள் சூழ்ந்த நிலையாக வருகின்றது.
இப்படி நாளுக்கு நாள் இதன் ஒளிக்கதிர்கள் மங்க மங்க சந்திரனே
நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருள் சூழ்ந்த நிலை ஆகிவிடுகின்றது. பின், சூரியனின் ஒளிக்கதிர்களைத்
தான் எடுக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக மீண்டும் ஒளியாகின்றது.
இதைப் போன்று தான் நம் உயிர் மற்றவர்களுடைய துன்பங்களை
எடுக்கபப்படும் பொழுது மனிதனாக வளர்த்த இந்த அணுக்கள் சிறுகச் சிறுக மறைகின்றது.
இந்த உணர்வின் தன்மை வரும் பொழுது நோயாகின்றது. இந்த உடலை
விட்டுச் சென்றபின் மனிதனல்லாத உணர்வின் உருக்களாக அது உருப்பெறச் செய்கின்றது.
இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக அன்று ஞானிகள்
காவியங்களைத் தீட்டியுள்ளார்கள். இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.
மீள வேண்டும் என்றால் அந்த விநாயகர் தத்துவத்தில் காட்டியபடி
நம்முடன் வாழ்ந்த வளர்ந்த முன்னோர்களை விண் செலுத்த வேண்டும்.
எங்கள் குலதெய்வங்களான பாட்டன் பாட்டி உடலை விட்டுப் பிரிந்து
சென்ற உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள்
கரைந்து என்றும் பேரின்பப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று குடும்பத்திலுள்ளோர் அனைவரும்
ஒன்று சேர்ந்து அதிகாலையில் துருவ தியானத்தில் விண் செலுத்த வேண்டும்.
அப்பொழுது உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்கள் துருவ
நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள சப்தரிஷி மண்டலங்களுடன் இணைகின்றது.
மனிதனின் வாழ்க்கையில் தெளிந்திட வேண்டும் என்ற எண்ணத்தின்
ஒளிகள் அங்கே மிஞ்சுகின்றது. அவர்கள் வேகா நிலை அடைகின்றார்கள். பிறவியில்லா பெரு நிலை
அடைகின்றார்கள். மரணமில்லா பெரு வாழ்வு என்ற நிலை அடைகின்றார்கள்.
ஆக, மரணமும் இல்லை, பிறப்பும் இல்லை. கணவனும் மனைவியும்
ஒன்றான நிலைகளை மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்கின்றார்கள், வளர்கின்றார்கள். அவர்கள் விண் சென்றால் அங்கிருந்து நாம் எளிதில்
சக்தி பெற முடியும்.
அதை நாம் பெற்று இந்த வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளிலிருந்து
விடுபட முடியும். உடலை விட்டுச் செல்லும் பொழுது நாமும் அவர்கள் சென்ற எல்லையை எளிதில்
அடைய முடியும்.