ஆலயங்களில் சாமி மேல் மலரைப் போடுகின்றார்கள். சாமிக்கு
மேல் அது ஆடையாகின்றது.
நாம் எண்ணும் உணர்வுகள் நம் உடலிலே அந்தக் குணங்களானால்
அந்த மலரைப் போல மணம் பெறும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். நாங்கள் பார்ப்போரெல்லாம்
மலரைப் போல மணம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணினால்
நாம் அனைவரும் அந்த நிலை அடைகின்றோம்.
நாங்கள் பார்க்கும் குடும்பமெல்லாம் மலரைப் போல மணம் பெறவேண்டும்
மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலெல்லாம் மலரைப்
போல மணம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி
பெறவேண்டும்.
இப்படி எண்ணி நமக்குள் இத்தகைய உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.
சேர்த்து நமக்குள் வரும் பகைமை உணர்வுகளை அழித்திடல் வேண்டும்.
நாம் அனைவரும் கல்யாணராமனாக மாற வேண்டும்.
சூரியன் எவ்வாறு பிரபஞ்சத்தில் உருவாகும் “நஞ்சினை அரவணைத்து..,
ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ” இதைப் போல மனிதன் மற்றவர்களுடைய உணர்வுகளை மாற்றித்
தீமைகளயும் பகைமைகளையும் மாற்றி அந்த உணர்வுகளை ஒளியாக்கும் பொழுது அருள் ஒளி பெற்று
“உயிருடன் ஒன்றி.., ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்”.
இது நமது சாஸ்திரங்களில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
நாம் யாரும் இதைச் சிந்திக்கின்றோமா..,?
ஆக, தெய்வத்திற்கு மலர்களையும் மாலைகளையும் அணிவிக்கும்
பொழுது அந்த அருள் உணர்வுகளை நாம் பெறவேண்டும் என்று சாஸ்திரப்படி எண்ணிச் சுவாசிக்கின்றோமா..,?
அன்றைய ஞானிகள் சொன்ன பேருண்மைகளைத்தான் இங்கே சொல்லி வருகின்றோம்.
ஆனால், யாம் இப்பொழுது சொன்னாலும் கேட்பவர்கள், “சாமி..,
அற்புதமாகப் பேசுகின்றார், நம்மால் இது முடியுமா..,?” என்று வினாக்களை எழுப்பிச் சோர்வடையும்
நிலைக்குத்தான் கொண்டு செல்கின்றார்கள்.
“நீங்கள் எல்லோரும் அருள் உணர்வைப் பெறவேண்டும், அருள்
ஞானிகளாக வேண்டும்” என்ற ஆசையில் தான் யாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
“என்னாலே முடியுமா..,?” “நானே..,” (சாமிகள் சொல்வதை) இதைப்
பெறமுடியவில்லை. “ஒன்றும் தெரியாத மற்றவர்கள்..,” எப்படி பெறப் போகின்றார்கள்..,? என்று
தானும் பெறாது மற்றவர்களையும் பெறவிடாதபடி செய்து கொண்டிருப்பார்கள்.
சாமி உயர்ந்த உணர்வுகளைச் சொல்கிறார். அதை “என்னாலேயே..,”
பெற முடியவில்லை. “நீங்கள் எப்படிப் பெறப் போகின்றீர்கள்..,?” என்று சொல்லி இதைப் பெறுபவர்களையும்
கெடுத்துவிடுகின்றார்கள்.
ஏனென்றால், ஒரு சாக்கடைக்குள் நல்ல நீரை ஊற்றினால் உடனே
என்ன ஆகும்..,?
அதுவும் நாற்றமாகும். ஆனால், நல்ல நீர் அதிகரித்துவிட்டால்
அது ஓடிவிடும்.
ஆகவே, இந்த வாழ்க்கையில் அருள் ஒளியை நமக்குள் “கூட்டினால்..,”
நம்மையறியாது இயக்கும் இருளை அகற்றிடும் ஆற்றல் பெறுவோம்.
இதைக் காட்டுவதற்குத்தான்; அந்த அருள் சக்திகளைப் பெறத்தான்;
அனைத்து மக்களும் அந்த அருள் சக்தியைப் பெறுவதற்காகத்தான்; பெற்று மகிழ்ந்து வாழச்
செய்வற்காகத்தான் “ஆலயத்தை” உருவாக்கினார்கள் ஞானிகள்
ஆகவே, நம் உயிரை “ஈசனாகவும்”, கண்கள் “கண்ணனாகவும்”, உடல்
“சிவமாகவும்” நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் வினையாகவும், வினைக்கு நாயகனாக (“விநாயகனாக”)
மனித உடலும் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகள் ஆறாவது அறிவு “முருகு”
மாற்றியமைக்கும் சக்தி பெற்றது என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றது.
இந்த மனித வாழ்க்கையில் “நாம் எதைப் பெறவேண்டும்..,?” என்று
தெளிவாக்கப்பட்டது. ஆக, அன்றைய மெய்ஞானி சாமானிய மனிதனும் அருள் வழியில் நடந்து அருள்ஞானம்
பெறுவதற்குத்தான் ஆலயத்தைக் கட்டினான்.
ஞானிகள் உருவாக்கிய ஆலயங்கள் சாதாரணமானதல்ல. அவை அருள்
ஞானத்தை நமக்குக் கொடுக்கும் ஞானப் பொக்கிஷங்கள்.
இனியாவது ஆலயத்திற்குச் செல்வோர் அந்த “ஞானிகள் சொன்ன முறைப்படி..,”
அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். ஆலயம் வருவோர் அனைவரும் அந்த
தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
மக்கள் அனைவரும் "ஒன்றுபட்டு வாழவேண்டும்..," என்று தவமிருங்கள்.