ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2017

ஞானத்தைப் போதிக்கும் சற்குருவிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்?

வைகுண்ட ஏகாதசி அன்று உடலை விட்டுச் செல்லும் பொழுது குருநாதர் எம்மிடம் சொன்ன நிலைகள் இது.

பல அற்புதங்களை நான் செய்து காட்டினேன். அந்த அற்புதங்களிடத்தில் மயங்கியிருந்தோர் உண்டு. அதன் வழியில் என்னை அணுகியவர்கள் பலர்.

என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள எப்படி எல்லாம் வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள் என்றார் குருநாதர். ஆனால், என்னிடம் எதை நாடி வந்தார்கள்?

எனக்குச் சொத்து வேண்டும். சுகம் வேண்டும். உடல் நலம் வேண்டும். இதைத்தான் கேட்டார்கள். அதே சமயத்தில் வருவோரெல்லாம் எனக்கு “அந்த அருள் வேண்டும்.., இந்த அருள் வேண்டும்..,” என்று தான் கேட்டார்கள்.

மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் உலக மக்கள் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.

பிறருடைய குடும்பங்களை நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் பேச்சால் மூச்சால் அனைவரின் துன்பங்கள் அகல வேண்டும். நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலம் பெறவேண்டும் என்று “இதைப் பற்றிக் கேட்பார்.., யாரும் இல்லை”.

அத்தகைய மனம் உள்ளோர் என்னை அணுகி வந்தார்கள்.  “தனக்காகத்தான்.., கேட்டார்களே தவிர.., எல்லோரும் நலம் பெறவேண்டும்..,” என்ற கேள்வியே அங்கே எழவில்லை.

ஆனால், அத்தகைய தன்மை பெற்றோர்களும் மற்ற எல்லோரும் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று நான் எண்ணினேன். நான் அதைப் பெற்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வைகுண்ட ஏகாதசி அன்று நான் உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால், நீ எதை எண்ணப் போகின்றாய்? நீ எதைப் போகின்றாய்? என்று பல வினாக்களை எழுப்பினார். நீ பெறவேண்டிய தகுதிகள் எது? அதைப் பெறுவது எப்படி?

இதையெல்லாம் எமக்குள் தெளிவாக்கிக் காட்டினார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் நீ என்னுடன் இணைந்து வர வேண்டும் என்றால் “நீ எதை எண்ண வேண்டும்..?” என்றும் சொன்னார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குரு பெறவேண்டும். அவர் அழியாத ஒளியின் சரீரம் பெறவேண்டும். அவர் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும். பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அருள் வழி குரு பெறவேண்டும் என்று நீ எண்ணினால் அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார். ஆகவே, நீ எதை எண்ணுகின்றாயோ நீ அவ்வாறு ஆகின்றாய் என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

வைகுண்ட ஏகாதசி அன்று குருநாதர் உடலை விட்டுப் பிரியும் முன் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி எனக்கு உணர்த்திக் காட்டினார்.

அவர் உடலை விட்டுப் பிரிவதற்கு முன் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளையும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறும் தகுதியைப் பெற்றுக் கொள் என்றார்.

அந்த ஆற்றலின் துணை கொண்டு அதன் வழியில் குருவை நீ எவ்வாறு விண் செலுத்த வேண்டும்? எதை நீ குருவாக்க வேண்டும்? என்ற பேருண்மைகளை எல்லாம் உணர்த்திவிட்டுத்தான் வைகுண்ட ஏகாதசி என்று அந்த உடலை விட்டு அவர் ஆன்மா பிரிந்தது.

குருவின் நினைவு கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் நான் கொண்டு வரப்படும் பொழுது அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழிகளிலே சென்று ஒளியின் சரீரம் பெற்றுப் பேரானந்த பெருநிலையாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்.

ஏனென்றால், அதன் வரிசையில் ஒன்றை வைத்துத்தான் ஒருவர் செல்ல முடியும்.

இந்த வழியினை நீ பெறு. இதைப் போல எல்லோரையும் பெறச் செய்வதற்கு வழி காட்டும் பொழுது இந்த நிலை பெறுகின்றாய். அவர்கள் பெறவேண்டும் என்று நீ ஏங்கு. அந்தத் தகுதியை அவர்களைப் பெறச் செய்.

அதன் வழிகளில் அடுத்தவர்களும் இதைப் போல எண்ணும் பொழுது நீயும் எளிதில் அங்கு செல்கின்றாய். மற்றவர்களும் அந்த நிலை பெறுகின்றார்கள்.

இதை நீ வழிப்படுத்து என்றார் நமது குருநாதர்.

உங்களுக்குச் சொல்வது அர்த்தமாகின்றதா..? நீங்கள் இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.