ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2017

“சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” எனும் நிலைக்கு இன்றைய உலகம் அழிவின் நிலைக்கு வந்துவிட்டது

ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்துவிட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில் ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.

ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு நாம் ஆடாகப் பிறக்கின்றோம். இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம், இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.

இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம். ஆகவே, தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படித் அதனைத் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்குமுன் எதிரிகள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

தீமைச் செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர் “சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில் சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால் வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

ஆக, மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை வந்துவிட்டது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும். மீண்டிடும் நிலையாக குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நாம் அந்த அருள் ஞானிகள் கண்ட உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும், துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தி அந்த உணர்வினை ஈர்க்கும்படிச் செய்கின்றோம்.

இன்று நாட்டில் விஞ்ஞானத் தன்மை கொண்டு காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம்.

மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். அதன் தொடர்பு கொண்டு நம் முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

ஏனென்றால், இதற்கு முன் நாம் நமது முன்னோர்களை விண் செலுத்தத் தவறிவிட்டோம். அவர்கள் இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழன்று கொண்டுள்ளார்கள்.

நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

அதன் துணை கொண்டு அந்த அருள் ஒளிகளை நமக்குள் பாய்ச்ச வேண்டும். நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

நாமும் விண்ணின் ஆற்றலைப் பெறும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே சென்றடையலாம். நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

மரணமில்லாப் பெருவாழ்வு என்பதும் பிறவியில்லா நிலை என்பதும் பேரின்பப் பெருவாழ்வு என்பதும் அந்தச் சப்தரிஷி மண்டலமே.

ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் தன்மை பெறுவோம்.