ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2017

கிரிவலம் வரும் பொழுது எதை நினைக்க வேண்டும்...?

நம்மைப் பண்படுத்தும் ஆலயமாக வைத்த நிலையை எப்படி நேசிக்க வேண்டும் என்று ஞானிகள் முறைப்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

தன் அருகிலே இருப்போரை நல்ல பண்புகள் கொண்டு நல்வழிப்படுத்துவதும், உயர வேண்டும் என்ற பண்பினை வளர்த்துக் கொள்வதற்கும் பகைமை உணர்வுகள் தனக்குள் வளராது அந்த நிலையைச் சீர்படுத்துவதற்குத்தான் ஆலயம்.

எந்த உணர்வுடன் நாம் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்?

நாம் எல்லோரும் ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும். நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெறவேண்டும். அவர்கள் தொழில்கள் அனைத்தும் வளம் பெறவேண்டும் என்ற இந்த உணர்வுடன் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்.

ஒரு நூலால் கடினமான ஒரு பொருளைத் தூக்க முடியவில்லை என்றாலும் பல நூலை ஒன்றாக இணைத்து ஒரு கனமான பொருளைத் தூக்க முடியும்.

இதைப் போல எல்லோரும் எல்லோருக்குள்ளும் உள்ள பகைமை என்ற உணர்வை மறந்துவிட்டு அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் வலு சேர்த்துக் கொள்தல் வேண்டும்.

பின்பு இந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்று “அமைதி கொண்டு.., இந்த உணர்வின் தன்மையை எண்ணியவாறு.., ஆலயத்தை வலம் வந்தால் போதும்”.

“எவ்வளவு தூரம் நடக்கின்றீர்களோ..,” அந்தத் தூரம் வரையிலும் இந்த எண்ணத்தைக் கொண்டு “ஆலயத்தை ஒரு சுற்று சுற்றி வந்து..,” நேராக உங்கள் வீட்டிற்குள் சென்றால் போதும்.

இந்த நல்ல உணர்வு கொண்டு வீட்டிற்குச் செல்லப்படும் பொழுது நீங்கள் எண்ணிய உணர்வுகள் “உங்கள் உயிரிலே (புருவ மத்தியில்) படும் பொழுது.., அங்கே அபிஷேகம் ஆகின்றது”.

அந்த அருள் உணர்வின் அலைகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்களோ அந்த நல்ல குணங்களுக்கெல்லாம் அமுதாகின்றது.

நல்ல குணங்கள் அனைத்திற்கும் அமுதின் தன்மையைப் பெறச் செய்யும் பொழுது அவைகள் நல்ல உற்சாகம் பெறுகின்றது.

அப்பொழுது. தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது.., அதற்கு “ஆகாரம் கொடுக்காது” தடைப்படுத்துகின்றோம். இதைத்தான் “விரதம்” என்பது.

ஆகவே, எல்லோரும் ஒன்று சேர்ந்து அருள் மகரிஷிகளின் உணர்வு பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது பகைமை உணர்வுகளுக்கு ஈர்க்கும் சக்தி குறைந்து விடுகின்றது.

இப்படி அனைவரும் இதைப் போன்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.

இந்தப் பேருண்மைகளை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் “எல்லா ஆலயங்களிலும்..,” ஒவ்வொருவரும் இதைச் செயல்படுத்த வேண்டும்.