ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 24, 2017

பாவ மன்னிப்பு எப்படிக் கேட்க வேண்டும்...?

ஞானிகள் அனைவரும் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் வழி காட்டினார்கள். ஆனால், அரசர்கள் அதைத் தன் சுகபோகங்களுக்காக மாற்றிவிட்டனர்.

அந்த அரசர்களுக்குக் கீழ் வந்த மக்கள் தன்னை அறியாமலே அந்த அரசன் வழியில் சென்று அரசன் வழியிலே தான் இன்று வரையிலும் செயல்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு அரசனுக்கும் அவனுக்கென்று மத குருவை வைத்து அந்த மதத்தைக் காக்க அவன் இடும் சட்டத்தை அதன் கீழ் மக்களை ஒழுங்குபடுத்தச் செய்தனர்.

அந்த மத குரு சொன்ன நிலைதான் அங்கே ஆண்டது. எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் அந்த மத குருவின் தன்மையே வருகின்றது.

இன்று நம் நாட்டிலும் எடுத்துக் கொண்டால் ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மை வரும் பொழுது ஒவ்வொரு நிலைக்கும் மத குருவை உருவாக்குகின்றனர்.

எந்த மதத்தை உருவாக்கி அந்த அரசியல் சட்டத்தை வகுத்தார்களோ அதன்படி மத குரு மக்களுக்கு எடுத்துக் கூறினார்கள். அதன் வழியில் அரசனுக்குக் கீழ் நடக்க வேண்டும் என்று சட்டங்களை இயக்கினார்கள்.

அப்படித்தான் உலகம் முழுவதும் இயங்கி வந்தது.

ஆக, அந்த மத குருக்கள் காட்டும் கடவுள் தான் “கடவுள்”.

ஒரு மதத்தைக் காட்டினாலும் அதில் கடவுள் என்ற நிலையைக் காட்டினாலும் மனிதனுக்கு மனிதன் கொன்று குவிக்கும் தன்மை தான் மனிதனுக்குள் வளர்கின்றது.

ஆனால், மனிதனை உயர்ந்த பண்புள்ளவனாக்கு…, இந்தப் பூமியைப் பண்புள்ள பூமியாக மாற்று..,” என்று தான் ஞானிகள் உணர்த்தினார்கள்.

மனிதர்கள் தங்கள் உடலின் இச்சைக்காக வாழும் உணர்வின் தன்மை பட்டதும் அந்த உணர்வின் தன்மை கொண்டுதான் இந்த உலகம் முழுவதும் இன்று மடிந்து கொண்டுள்ளது.

மனித இனமே மடிந்து சிதைந்து கொண்டுள்ளது. மனித உரு இருப்பினும் மனித உருவையே சீர்குலைக்கும் உணர்வே வளர்ந்து கொண்டுள்ளது.

இத்தகைய நிலையை நம் பூமியில் வாழ்ந்த மகான்கள் இயேசு கிருஸ்துவோ, நபிகள் நாயகமோ சொல்லவில்லை. அதே போல நம் நாட்டில் தோன்றிய அகஸ்தியமாமகரிஷியோ வியாசக பகவானோ சொல்லவில்லை. 

1. உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு தோன்றுகின்றது..?”
2. கவர்ந்த உணர்வுகள் நுகர்ந்தவுடன் எண்ணங்கள் எப்படி உருவாகின்றது?
3. உணர்வின் தன்மை உடலை எப்படி இயக்குகின்றது?
4. நீ எதை நுகர வேண்டும்?
5. நீ எதனைச் செயலாக்க வேண்டும்?
என்று இராமாயணக் காவியம் மூலம் வான்மீகி மகரிஷி தெளிவாக உணர்த்தியுள்ளார்.

ஆனால், தான் செய்யும் பாவச் செயல்களை எல்லாம் செய்துவிட்டு ஞானிகளை எண்ணிவிட்டால் பாவங்களைப் போக்க முடியுமா என்றால் முடியாது.

நான் தவறு செய்துவிட்டேன். ஆகையினால், என்னை மன்னித்துக்கொள்.., என்றால் அவன் மன்னிப்பானா..?” மன்னிக்க மாட்டான்.

ஏனென்றால், தீமை செய்யும் உணர்வினை நாம் நுகர்ந்துவிட்டால் நம் உயிரே அதை உருவாக்குகின்றது. அந்த உணர்வின் தன்மைகளை அணுவாக வளர்த்து உடலுக்குள் விளையச் செய்துவிடுகின்றது.

அவன் எப்படிப் பாவ மன்னிப்புக் கொடுப்பான்?

எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை நீ அனுபவித்துப் பார்..,” என்று தான் நம் உயிர் இயக்கிக் காட்டும்.

இதைத்தான் கீதையிலே “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்” என்று தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

ஆகவே, தீமைகளை மாற்றிட, பகைமைகளை மாற்றிட, நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

மக்கள் அனைவரையும் இணைத்து உணர்வின் தன்மை ஒளி பெறவேண்டும் என்று உணர்த்திய அந்த ஞானிகள் அனைவருமே விண்ணிலே இன்றும் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக.., வாழ்கின்றார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்ல வேண்டும். தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய அருள் உணர்வை எடுத்து பாவம் செய்யும் உணர்வுகளைத் தடுத்துப் பழக வேண்டும்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் புருவ மத்தியில் நம் உயிரில் மோதும் உணர்வுகளை அருள் ஒளியின் சுடராக மாற்றிடல் வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் ஒளியினை உயிர் வழியாகச் சுவாசித்துப் பழக வேண்டும்.

அப்பொழுது, நம் உயிர் “நீ எதை எண்ணுகின்றாயோ.., அதுவாகின்றாய்” என்ற நிலைக்கொப்ப நமக்குள் அருள் ஒளியின் அணுக்களாக வளர்த்து அருள் சக்திகளை நமக்குள் விளையச் செய்யும்.

புருவ மத்தியில் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் மகரிஷிகளின் அருள் ஒளியினை இணைத்தால் தான் நமக்குள் வரும் பாவ நிலையைப் போக்க முடியும்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வை நாம் திரும்பத் திரும்ப நுகர்ந்தோம் என்றால் நம்மை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் பகைமை உணர்வை அகற்றி அருள்ஞானத்தின் தன்மை கொண்டுஇனி பிறவியில்லை..,” என்ற நிலைகள் அடையலாம்.

ஒளியின் சரீரம் அடையலாம். சப்தரிஷி மண்டலத்துடன் இணைவது திண்ணம்.