ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2017

தீமைகள் எதன் வழியாக நமக்குள் உட்புகுகின்றது? மீண்டும் மீண்டும் தீமை எப்படி வருகின்றது?

கல்வி கற்கும் ஒரு மாணவன் தன் பாட நிலையைப் பொறுமையாகப் படித்தான் என்றால் அந்த உணர்வின் நினைவாற்றல் அவனுக்குள் பதிவாகின்றது.

பதிவான பின் அதே உணர்வின் சத்தைக் கவரும் ஆற்றல் கொண்ட அணுவாக அவனுக்குள் விளைகின்றது.

அணுவாக விளைந்தாலும் அவன் எண்ணத்தில் அவனுக்குள் விளைய வைத்த உணர்வின் ஞானம் அதனின் உணர்வுகளை இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.

அப்படிப் பரவச் செய்தாலும் தன் இணை சேர்க்கும் உணர்வாகத் அந்தப் பையனின் ஆன்மாவில் இங்கே வந்துவிடும்.

அதே போன்று தான் ஒருவன் வேதனைப்படும் உணர்வின் தன்மையை நுகர்ந்துவிட்டால் அதே வேதனையின் உணர்வுகள் இங்கே ஆன்மாவில் அதிகரிக்கின்றது.

இது அதிகரித்துவிட்டால் அதே வேதனையின் உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு அந்த வேதனைப்படும் நிலையையே உருவாக்குகின்றது.

படிக்கும் அந்த மாணவனின் குடும்பத்தில் தொல்லையோ அல்லது தாய் தந்தையை வெறுப்புடன் பேசியிருந்தாலோ தன் சகோதரன் கோபத்துடன் பேசியிருந்தாலோ அந்த வேதனையின் உணர்வுகள் இவனுக்குள் பட்டுவிட்டால் என்ன ஆகும்?

அடுத்து இவன் பள்ளிக்குச் சென்றாலும் இந்த வேதனையின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அவன் பாட நிலையைச் சிந்தித்தாலும் இந்த வேதனை உணர்வுகள் அது கலக்கப்பட்டு அவனுக்குள் சிந்தனையற்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.

அதனால் அவனுடைய கல்வித்திறன் இழக்கப்படுகின்றது.


ஆனால், சிந்தனையில்லாத நிலையாக அவன் வெளியிட்ட உணர்வுகள் இது அதிகரிக்க அவனைச் சார்ந்தோர்கள் இவன் “இப்படி மக்காக.., இருக்கின்றான்”. சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான் என்பார்கள்.

சரியான பாட நிலை இல்லை என்று அவனின் தாய் தந்தையர்கள் இதைச் சுவாசித்தாலும் அடுத்தவர்கள் இதை உற்றுப் பார்த்து இதனின் உணர்வைச் சுவாசித்தாலும் அடுத்து என்ன ஆகின்றது?

அந்த விஷத்தன்மை (முதலில் அவன் சுவாசித்த வேதனை) இவன் நினைவாற்றலை மாற்றியது போன்று மற்றவர்களும் அதை நுகர்ந்தறிந்து அவனைக் குற்றவாளியாகச் சொல்லத் தொடங்குவார்கள்.

அப்படிச் சொன்னாலும் இது அவர்கள் உடலில் கூடக் கூட கடைசியில் அவர்களைக் குற்றவாளியாக்கிவிடும்.

உதாரணமாக, ஆசிரியர்கள் பள்ளிகளிலே பாடநிலைகளைச் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் கருத்துடன் சொல்வார்கள். தன்னிடம் படிப்பவன் நன்றாகத் தேறவேண்டும் என்று அந்த உணர்வினைப் பாய்ச்சுவார்கள்.

ஆனால், அவன் செய்யும் செயல்களை உற்றுப் பார்த்து “படிக்க வந்தவன் சரியாக வரமாட்டேன் என்கிறான்..,” என்ற உணர்வினைச் சுவாசித்துவிட்டால் சுவாசித்த உணர்வுகள் இவரை அறியாமலே ஞானத்தைப் போதிப்பதற்குப் பதில் அவனை “உதைக்கத் தொடங்கிவிடுவார்கள்”.

இப்படிச் சிந்தனையற்ற உணர்வுகள் வரும் பொழுது இந்த விஷத்தின் தன்மை கொண்டு அந்தப் பையனும் குறும்புத்தனம் செய்யும் நிலையாக வந்துவிடுவான்.

குறும்புத்தனம் செய்வதை ஆசிரியர் பார்த்துவிட்டால் அவனின் உணர்வை இவர் நுகர்ந்து அவனை உதைக்கும் தன்மையே வரும்.

உதைக்கும் தன்மை இங்கே வரும் பொழுது ஆசிரியர் உடலிலுள்ள நல்ல குணங்களையும் அவர் உடலிலுள்ள நல்ல அணுக்களையும் இது மாற்றிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் சந்தர்ப்பத்தால் ஏற்படுகின்றது.  மனிதனின் வாழ்க்கையில் உடலுக்குள் அணுக்களின் மாற்றம் எவ்வாறு அடைகின்றது என்ற நிலையில் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.

நாம் தவறு செய்கின்றோமா..,? அல்லது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சந்தர்ப்பவசத்தால் நம் ஆன்மாவிற்குள் நுழைந்த தீமையான உணர்வலைகளை நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகள் நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி உங்கள் ஆன்மாவில் உள்ள தீமையான உணர்வலைகளை அகற்ற முடியும்.

 அருள் உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் பெருகப் பெருக அதுவே உங்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறும். உங்கள் சொல் செயல் புனிதம் பெறும். உங்கள் பேச்சும் மூச்சும் மற்றவர்களுக்கும் நல்லதாக இருக்கும்.