ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2017

விநாயகருக்குப் பக்கம் வேம்பையும் அரசையும் ஏன் வைத்துள்ளார்கள்?

நாம் பிறருடைய கஷ்டங்களைப் பார்த்துவிட்டால் அது நமக்குள் மாறி கணங்களுக்கு அதிபதியாகிவிட்டால் தீய வினைகளே நமக்குள் உருவாகின்றது.

ஏனென்றால், நாம் வாழ்க்கையில் எத்தனையோ கசந்த நிலைகளைப் பார்க்க நேருகின்றது, கேட்க நேருகின்றது, நுகர நேருகின்றது. அதைத்தான் அங்கே “வேம்பாக..,” வைத்துக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் கசந்த நிலைகள் வந்தாலும் அதைத் துடைப்பதற்காக விநாயகருக்கு அந்தப் பக்கம் அரசை வைத்தது. “அரசு..,” என்றால் துருவ நட்சத்திரம்

இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் தீமைகளை அடக்கி ஆட்சி புரிந்து கொண்டிருப்பது துருவ நட்சத்திரம். அதன் வழிகளில் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறவேண்டும்.

எதன் துணை கொண்டு?

ஆறாவது அறிவால் தான் உருவாக்க முடியும். இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.

“நாம் நுகரும் உணர்வுகள்..,” உயிருடன் இணைக்கும் பொழுது அது உருவாக்கும்.

இல்லை என்றால் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் கோபம், வேதனை, ஆத்திரம், பயம் இதைப் போன்ற தீமையான குணங்களை நம் உயிர் நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.

அவை அனைத்தும் கருவாகிவிட்டால் உடலுக்குள் அணுவாக்கிவிடுகின்றது நம் உயிர். இதை மாற்ற வேண்டுமல்லவா.

தீமையான அணுக்கள் நமக்குள் விளையாமல் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

அதிகாலையில் 4 மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வலைகள் பிரபஞ்சத்தில் படர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்திலிருந்து வரும் அந்த உணர்வுகளைத் துருவப் பகுதி வழியாக நம் பூமி கவர்கின்றது.

நம் பூமிக்குள் வருவதற்கு முன் நம் நினைவாற்றலைப் பெருக்கி விண்ணை நோக்கிச் செலுத்துதல் வேண்டும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அதை நாம் கவர்தல் வேண்டும்.

ஏனென்றால், அகஸ்தியன் என்ற நிலைகள் முதலில் வந்ததால் அகஸ்தியனின் ஆற்றலும் துருவ மகரிஷி, துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலம் என்று நான்காகின்றது.

ஆக, அந்த நான்காவது நிலை அடையும் பொழுது ஒளியின் சுடராக பிரம்மமாக்க முடியும். அதைத்தான் பிரம்மனுக்கு நான்கு தலையைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.

அகஸ்தியன் துருவனான், துருவ மகரிஷி ஆனான், துருவ நட்சத்திரமானான். அதனின்று உருவானவர்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலமாக ஆனார்கள்.

ஆகவே, நஞ்சினை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அணுவாக்கிவிட்டால் நமக்குள் அறியாது உட்புகுந்த இருளை மாய்த்துவிடும் என்பதை உணர்த்துவதற்குத்தான் அரச மரத்தை விநாயகருக்குப் பக்கம் வைத்தார்கள்.