ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2017

நம்மால் நன்மை அடைந்தவர்கள் நமக்குத் தீமை செய்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும்...?

நமது வாழ்க்கையில் பிறருடைய தீமைகளைக் கேட்டுணர்ந்து அவர்களுக்கு நாம் நன்மை செய்திருப்போம்.

ஆனால், அவர்கள் நாம் செய்த நன்மையைக்கூட மறந்து நமக்கே தீமை செய்யக்கூடிய நிலைக்கு வருவார்கள்.

அப்பொழுது நாம்.., “இவ்வளவு உதவிகள் செய்தேனே.., என்னை இப்படித் துன்புறுத்துகின்றார்களே.., எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்களே..,” என்ற உணர்வுகளை எண்ணினால் அந்த உணர்வுகள் வளரப்படும் பொழுது அதைப் “பிடிவாதமாகப்..,” பிடித்துக் கொள்வோம்.

அவன் செயலை நமக்குள் உருவாக்கினால் அவன் தீமையின் உணர்வே நமக்குள் வந்து “உடலுக்குள் தீமைகள் விளைந்து விடுகின்றது” என்பதை நாம் மறந்திருக்கின்றோம்.

“அவன் தீமை செய்கின்றான்..,” என்பதை உணர்கின்றோம்.

ஆனால், “இப்படிச் செய்கின்றானே…,” என்று தொடர் வரிசையில் அதைச் செயல்படும் பொழுது அவன் உணர்வுகள் நமக்குள் வந்து தீமையின் அணுக்களை நமக்குள் உருவாக்கி நம் உடலையே நசியச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கம் என்ன?

வியாசக பகவான் காட்டிய நிலைகளில் “அதோ வருகின்றான் நாரதன்..,” என்ற நிலையில் கண்ணன் கூறியடி, கண்கள் கூறிய நிலைகள் கொண்டு “நாம் உற்று நோக்கி..,” வானை நோக்கி நினைவினைச் செலுத்துதல் வேண்டும்.

ரிஷியின் மகன் நாரதன், “நாராயணனின் அபிமானப் புத்திரன்” அவன். அவனிடம் கேட்டால் “பிடிவாதமாக.., நமக்குள் இயக்கும்” நிலைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை விளக்கிச் சொல்வான்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் “ஈஸ்வரா..,” என்று நம் உயிரை வேண்டி இந்த உணர்வை நம் உடலுக்குள் பரப்ப வேண்டும்.

ஏனென்றால், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வலைகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வருவதைத்தான் நாரதனாகக் காட்டினார்கள்.

அவனோ “கலகப்பிரியன்..,” கலகமோ நன்மையில் முடியும். நாம் பிடிவாதமாகப் பிடித்திருக்கும் தீமையின் அணுக்களுக்குள் கலகமாகி அதை நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாக மாற்றும் என்பதை வியாசக பகவான் தெளிவாக உணர்த்தினார்.

ஆகவே, பல கோடிச் சரீரங்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கித் தீமையை அகற்றிடும் சக்தியாக மனித உடலை உருவாக்கிய பின் “மனிதன், நாம் உயிரை மதித்து நடக்கத் தெரிதல் வேண்டும்”.

“உயிரை மதிக்கத் தவறினால்..,” நுகர்ந்த உணர்வு கொண்டு இந்த “உடல் தான் நமக்குச் சொந்தம்” என்றால் எண்ணிய உணர்வுகளை உடலாக்கி அதன் வழியில் வேதனையின் உணர்வாக நமக்குள் நரகலோகத்திற்கே (விஷமான ஜெந்துக்களாக) அழைத்துச் செல்லும்.

உடல் பற்றே மிஞ்சும். இந்த மனித உடலை இழக்கச் செய்யும். அந்த உணர்வுக்கொப்ப உடலையே மாற்றியமைக்கும் நம் உயிர்.

ஆகவே, அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிட ஒளியின் சரீரமாக மாற “நம் உயிரே.., சொர்க்கவாசலாக” அமைகின்றது.

எதனைக் கூர்மையாக எண்ணி வளர்க்கின்றோமோ அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து “சொர்க்கலோகம்” அடைகின்றோம்.

இதையெல்லாம் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரங்கள்.