1. கர்நாடகா மலையில் அனுபவம்
காட்டிற்குள் மிருகங்கள்
அனைத்துமே வாசனையை நுகர்ந்துதான் இரை தேடும். மற்ற உயிரினங்கள் புலியினுடைய வாசனையை
நுகர்ந்தவுடன் ஓடி ஒளிந்து கொள்கின்றது. இதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காக
குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று காட்டினார்.
யாம் கர்நாடகத்தில் மங்களூரில்
இருக்கும் பொழுது, அங்குள்ள ஒரு மலைக்குச் சென்றோம். அந்த மலையில் ஒரு குகை உண்டு.
அங்கு ஒரு சாமியார் இருந்தார். அவரிடம் சில மந்திர வேலைகள் உண்டு.
அவர் அந்தக் குகையில் இருந்த
பொழுது, எம்மை குருநாதர் அங்கே அழைத்துச் சென்று காட்டியிருக்கின்றார். அங்கே சில விஷயங்களைத்
தெரிந்து கொள்வதற்காகச் சென்றோம்.
எம்முடன் கூட சில பேர் வந்தார்கள்.
அங்கு சென்றவுடன், யாம் தியானத்தில் அமர்ந்துவிட்டோம்.
அப்பொழுது ஒரு பாம்பு எங்களை
நோக்கி வந்தது. அந்தக் குகையிலிருந்து நாய் ஒன்று வந்து, பாம்பின் வாலைப் பிடித்து
இழுத்துச் சென்றது. பின்பு, திடீரென்று அந்த நாய் கத்த ஆரம்பித்தது. அது பயந்து நடுங்கி,
எங்களைச் சுற்றி வந்து ஒளிந்து கொண்டது.
என்ன என்று பார்த்தால், அங்கு
ஒரு புலி வந்திருக்கின்றது. அதன் வாசனையை நுகர்ந்துதான் நாய் பயந்தது. அது படும் பாட்டைப்
பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருந்தது.
அந்தச் சாமியார் குகையிலிருந்து
வெளியில் வந்து, “சாமி, புலி வருகிறது, அதனால் ஒரு கம்பி கட்டி வைத்திருக்கின்றேன்,
அதற்குள் சென்று இருந்து கொள்ளலாம்” என்றார்.
சரி, நீங்கள் எல்லோரும் அதற்குள்
இருந்து கொள்ளுங்கள். நான் தியானத்தில் இருந்து கொள்கின்றேன் என்று சொன்னேன்.
சாமி, தியானமெல்லாம் ஒன்றும்
வேலைக்கு ஆகாது, பேசாமல் வந்துவிடுங்கள் என்றார் அந்தச் சாமியார்.
புலி என்னைக் கொன்று சாப்பிடும்
பொழுது, நீ பார்த்துக் கொண்டிரு என்று நான் கூறினேன். எனக்கு குருநாதர் முழு சக்தியைக்
கொடுத்திருந்தார். நான் குருநாதர் சொன்னபடி, புலிக்கு எதிர்மறையான உணர்வுகளைச் செலுத்தியவுடன்
அது பேசாமல் உட்கார்ந்து கொண்டது.
முன்பு ஒரு முறை மூகாம்பிகைக்
காட்டில் தியானத்திலிருந்த பொழுது, அட்டைகள் எம்மைக் கடித்து, உடலிலிருந்து இரத்தம்
வடிந்து கொண்டிருந்தது. அந்த இரத்த வாடையை நுகர்ந்து, புலி என்னைச் சாப்பிட நின்று
கொண்டிருந்தது. கண்களைத் திறந்து குருநாதர் சொல்லிய உணர்வைச் செலுத்தியவுடன் பேசாமல்
போய்விட்டது.
2. மற்றொன்றை அடக்கும் சக்தியை வளர்ப்பதற்குப் பதில் அருளைப்
பெறவேண்டும் – ஈஸ்வராய குருதேவர்
அப்பொழுதெல்லாம் குருநாதர்
முழு சக்தியைக் கொடுத்திருந்தார். இப்பொழுது அந்த அருளை எடுத்து, இப்படி மாற்றிக் கொள்
என்று கூறுகின்றார்.
எனென்றால், அது ஒன்றை அடக்கக்கூடிய சக்தி. அதை எடுத்தால் நீ கடைசியில்
அதற்குத்தான் போவாய் என்று கூறினார்.
யாம் இந்த அனுபவத்தைத் தெரிந்து
கொள்வதற்காக அதைச் செய்யும்படி செய்தார். ஏனென்றால்,
அதை அடக்க வேண்டும் என்று
எண்ணும் பொழுது,
அதனுடைய உணர்வு இங்கே வருகின்றது.
அது நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
நாம் இறந்தால் அதனின் வாசனை
கொண்டு
அங்கே தான் செல்ல முடியும்.
இந்த அனுபவங்களையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகக் காட்டிற்குள்
யாம் சென்றோம்.