ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 25, 2013

வாசனைகளை நுகர்ந்துதான் உயிரினங்கள் இயங்குகின்றது

புலி தன் இரையைத் தேடிச் செல்கிறது. தனக்கு எதிரியான நிலைகள் பக்கம் போவதில்லை. புலி வலுவானதுதான். ஆனாலும், மலைப்பாம்பு இருக்கும் பக்கம் அது போகாது. ஏனென்றால், மலைப்பாம்பு புலியைக் கொன்று தன் இரைக்காகத் தின்றுவிடும்.

குருநாதர் இதையும் எனக்குக் காட்டினார். ஒரு சமயம் ஆனைமலைக் காட்டிற்குள் என்னைப் போகச் சொன்னார். அங்கிருந்து என்னை ஒரு பொருளை எடுத்து வரச் சொன்னார். போகும் பொழுது என்னை அடிக்க ஒரு புலி பார்க்கின்றது. அதே சமயம் அங்கு செத்தைக்குள் ஒரு மலைப்பாம்பு பதுங்கியிருந்தது. புலி என்னைக் குறி வைத்ததால், அந்த மலைப்பாம்பின் வாசனையை நுகரவில்லை.

புலி என்னைப் பார்த்து ருசி பார்க்கும் ஆவலில் நிலத்தைப் பிரண்டுகின்றது. அப்பொழுது செத்தைக்குள் மறைந்திருந்த மலைப்பாம்பு புலியின் காலைப் பிடித்துக் கொண்டது. காலைப்பிடித்தவுடன், சட்டென்று புலியின் உடலைச் சுற்றிக் கொண்டது.

புலி தப்பித்துக்கொள்ள, “தையா, தக்கா” என்று குதிக்கின்றது. புலி கடித்துப்பார்க்கின்றது. பாம்பு ரப்பர் பந்து போல சுருண்டு கொள்வதால், அதைக் கடிக்க முடியவில்லை. பாம்பு தன் உடலைக் கொண்டு புலியை இறுக்குகின்றது.

இறுக்கியவுடன், புலி எகிறி விழுகின்றது. இறுகியவுடன் புலிக்கு மூச்சு திணறுகின்றது. இதையெல்லாம் நான் வேடிக்கை பார்க்கின்றேன். பாம்பு காலை அகற்றிவிட்டு, வாயைத் தலை மேல் வைக்கின்றது. காலில் தசைகளைக் காணவில்லை. பாம்பின் விஷம் அதைக் கரைத்துவிடுகின்றது.

ஆடு, மாடுகள் தட்டைகளை மிகக் கடினமானவற்றைச் சாப்பிடுகின்றது. அதை மொத்தமாக வைத்து அரைத்துவிடுகின்றது. அதன் வாயிலே ஊறக்கூடிய உமிழ்நீர் அதில் பட்டவுடன் பிஸ்கட் போன்று கரையும். அதைப் போன்று பாம்பின் விஷத்திற்கு எதனையும் கரைக்கும் தன்மை அதிகம்.

ஒரு சமயம் பண்ணாரி காட்டிற்குள் போயிருந்தேன். யானைகள் அங்கு அதிகம். குருநாதர் அங்கே போகச் சொன்னார். மாலை ஆறு மணிக்கெல்லாம் கூட்டமாகத் தண்ணீர் குடிக்க வருகின்றது. மணியைப் பார்க்க வேண்டியதில்லை. யானை வருகின்றதென்றால், மணி 6 ஆகிவிட்டதென்று வைத்துக் கொள்ளலாம்.

அங்கு ஒரு புலையர் வந்தார், நுகர்ந்து பார்த்து யானை வருகின்றது என்று சொன்னார். யானை வருகின்றது. இது யானை, இது புலி, இது நாய், இது நரி, இது பாம்பு என்று அத்தனை வாசனைகளையும் தெரிந்து வைத்துள்ளார்கள். நாமும் பழக்கப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

ஜோதிடம் பார்ப்பவர்கள் நம் மணத்தை நுகர்ந்து பார்த்து வைத்துக் கொள்வார்கள். நாம் என்ன நினைத்துக் கொண்டுள்ளோம் என்று சொல்லிவிடுவார்கள். நம்மிடம் என்னென்ன இருக்கின்றது என்று சொல்லிவிடுவார்கள். இது மனிதன் செயற்கையாக அறிந்து கொள்வது. அதே போல பல மந்திர ஒலிகளின் துணை கொண்டு, சில உணர்வுகளை நுகர்ந்து எடுத்துக் கொண்டு ஜோதிடம் சொல்லுகின்றார்கள்.

மனிதன் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் சக்தி படைத்தவன். இன்று இயந்திரத்தைச் செய்து, இராக்கெட்டை மேலே ஏவி கோள்களுடய வாசனையைக் கண்டுபிடித்து அது என்ன அறிகின்றான்.

ஆனால் பண்டைய காலங்களில் மனிதன் காடுகளில் வாழும் பொழுது, மிருகங்களிடமிருந்தும் விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவைகளுக்கு எதிரான பச்சிலைகளைக் கண்டுணர்ந்தார்கள்.

அவைகளைத் தாங்கள் படுத்திருக்கும் குகைளுக்கு முன் போட்டு, இரவில் படுத்துக் கொண்டார்கள். அந்த வாசனைகளை நுகரும் மிருகங்கள் அந்தப் பக்கம் வருவதில்லை, விலகிச் சென்றுவிடுகின்றது.

இன்று பாம்பு வீட்டிற்குள் வந்தால், வெள்ளைப் பூண்டைத் தட்டிப் போட்டு விட்டால், அந்த வாசனையை நுகர்ந்து தன்னாலேயே போய்விடும்.