ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 5, 2013

இன்றைய மனிதனின் சிந்தனைத்திறன் குறையக் காரணம் என்ன?

விரைவில் மனிதர்களுடைய சிந்தனைகள் குறையும். வீடு ஊரெல்லாம் இருக்கும். மனிதர்கள் எல்லோருமே இருப்பார்கள். ஆனால், நீங்கள் யார்? நான் யார்? என்றுதான் தெரிந்து கொள்ள முடியாது.

காட்டுமிருகங்களைப் போன்று இருப்பவர்களுடைய நிலைகள், இன்று விஞ்ஞானத்தில் உருவாக்கப்பட்ட விளக்குகள் (LIGHT) இருந்தாலும், விளக்கு என்ன என்றே தெரிந்து கொள்ளவில்லையென்றால், அந்தக் கருவிகளை எப்படிப் பயன்படுத்த முடியும்? புத்தி பலவீனமானவர்கள் எப்படியோ, அப்படிப்பட்ட இயக்கமாக ஆகிவிடும்.

ரேடியோ, டி.வி. நிலையும், கம்ப்யூட்டர் அலைவரிசை வரப்படும் பொழுது
மனிதருடைய உணர்வு எப்படி இயங்குகின்றதோ, இதைப் போன்று
காற்றுக்குள் மனிதனை இயக்கும் நிலையும்,
மற்ற நிலைகளை இயக்கக்கூடிய அலைகள்
பெரும்பகுதி பரவிவிட்டது.

ஏனென்றால், ரேடியோ, டி.வி. அலைகளைப் பரப்புகின்றனர். அதைப் போன்று செய்தி அறிவிப்புக்கும், இரகசிய தூதுகள் அனுப்புவதற்கும் அலைகளைப் பரப்புகின்றனர். விண்ணின் ஆற்றலைப் பெறுவதற்கு, நச்சுத்தன்மையை இங்கிருந்து அலைவரிசையில் ஏவுகின்றனர். அங்கிருக்கும் நச்சுத்தன்மையை இழுக்கின்றனர்.

இதைப் போல, கதிரியக்கத்தினுடைய நிலைகள் சூரியனுடைய வெப்ப காந்தங்களில் அனுப்பப்பட்டு, இந்த உணர்வின் அலைகள் அனைத்தும் ஆற்றல்மிக்கதாகப் பூமிக்குள் படர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆக, இவையனைத்தும் மனிதன் தனக்குள் எடுக்கும், ஈர்க்கும் ஆற்றல் பெற்றவன். இந்த மனிதனின் உடலுக்குள் வரப்படும் பொழுது, இவன் செய்யும் தவறின் உணர்வுகள் எல்லை கடந்து சென்று, இன்று மனிதனுடைய சிந்தனையே முழுமையாக அழியும் தருணம் வந்துவிட்டது.

இதிலிருந்து மீட்டுக் கொள்வதற்கு, யாம் ஏதோ லேசாகச் சொல்கிறோம் என்று இல்லாதபடி, நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது துருவ தியானத்தை எடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் யாம் கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். வாரத்தில் ஒரு நாள், அவசியம் கூட்டுக் குடும்ப தியானம் செய்யுங்கள்.

ஆக, மெய்ஞானிகளின் அருள் ஒளிகளை ஒவ்வொரு நிமிடமும் நம் உடலில் சேர்க்கும் பொழுது,
விண்ணை நோக்கி எண்ணும் இந்த உணர்வு,
விண்ணை நோக்கி
நாம் செல்லும் தன்மை பெறுகின்றோம்.

தப்பித்தவறி நாம் இங்கே இருந்தாலும், பிற மனிதர்களுடைய நிலைகளை அவர்களைக் காக்கும் உணர்வாக, நம் எண்ணம் அது வளரும். இந்த நிலைகளை நாம் ஒவ்வொருவரும் பெறுவோம். எமது அருளாசிகள்.