ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2013

குருநாதர் எமக்குக் கொடுத்தது அனுபவப் பாடம் தான் - ஞானகுரு

புத்தகத்தையோ, மற்றவைகளைப் படித்தோ, உலகம் முழுவதும் ஏட்டைப் படித்துச் சுருட்டினாலும், இந்த உணர்வின் தன்மை மெய் ஒளிக்கு வராது. மெய் ஒளியைக் காண்பது என்பது முடியாது.

ஆக, படித்ததைக் கொண்டு நாம் பேசலாம். அந்த உணர்ச்சி கொண்டு பேசலாம். ஆனால், இதைப் போன்று உண்மையின் ஆற்றலைப் பெறச் செய்வதற்கு வராது.

எனக்குச் சந்தர்ப்பத்தையூட்டி, பல துன்பக் கடலிலே விழச் செய்து அந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு பொறியின் தன்மை எப்படி இயக்குகிறது? என்று அந்த மெய்ஞானி நமது குருநாதர் காட்டினார். காட்டிய உணர்வின் அலையைத்தான் யாம் அறிந்துணர முடிந்தது.

அந்த அனுபவத்தின் நிலைதான்
இந்த உணர்வுக்குள் பட்டது.
அதை அறிவதற்காக வேண்டி,
எம்மை எந்தத் துன்பத்தில் ஆழ்த்தி
அதை எடுக்கச் சொன்னாரோ,
அந்த உணர்வின் தொடர் கொண்டுதான்
அவருடன் தொடர்பு கொள்ளும் பொழுது,
அந்த உணர்வின் அலையை ஈர்த்து யாம் பேசும் பொழுது,
உங்கள் செவிகளிலே ஈர்க்கப்பட்டு,
அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஈர்க்கப்படும் நிலைகள்.

இதை எந்த அளவிற்குக் கூர்ந்து பதிவாக்க வேண்டும் என்று எண்ணி ஏங்கி, அந்த உணர்வுகளைப் பெற விரும்புகின்றீர்களோ, அந்த உணர்வுக்கொப்ப நேர்முகமாக அந்த உணர்வுகள் பதிவாகின்றது. இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானியர்கள் அனைவருமே அறிந்துணர்ந்தவர்கள் அல்ல, ஏனென்றால் சந்தர்ப்பம்தான். அதைப் போன்று, என் மனைவியாலே துன்பம் ஏற்பட்ட இந்தச் சந்தர்ப்பம் அந்த மெய்யை நானும் அறிய முடிந்தது.