ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 22, 2013

மீண்டும் மீண்டும் பூமியில் உடல் பெறுவதே - "சிவ தனுசு"

1. உயிரினங்களின் உடல்கள் எப்படி மாறுகின்றது?
ஒரு புழுவை, இன்னொரு விஷம் கொண்ட புழு தாக்கினால், அந்தச் சாந்தமான புழு இறந்துவிடுகின்றது. விஷமான அந்தப் புழுவின் விஷம் சிவ தனுசு. விஷம் தாக்கியபின், சாந்தமான புழு விஷப்புழுவின் தன்மைகள் போன்று மாறிவிடுகின்றது.

ஒரு பாம்பின் உடலில் ஏற்படும் விஷம், சிவ தனுசு. அந்த விஷத்தை ஒரு மனிதனின் உடலில் பாய்ச்சுகின்றது என்று வைத்துக் கொள்வோம். விஷம் பாய்ந்தபின், மனிதனை உருவாக்கிய உணர்வின் நினைவுகள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

எந்தப் பாம்பு தீண்டியதோ, அந்தப் பாம்பின் நினைவே வருகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றால், பாம்பின் நினைவு கொண்டு பாம்பின் உடலுக்குள் சென்றுவிடுகின்றது நமது உயிர்.
பாம்பின் உடலுக்குள் சென்று
பாம்பின் உணர்வைக் கவர்ந்து, அதன் கருவாகி,
பாம்பாக உருவாக்குகின்றது உயிர்.
அதனால்தான் இதைச் சிவ தனுசு என்பது.

மான் சாந்தமானது, புலி கொடூரமானது. உணவிற்காகப் புலி மானைத் தாக்குகின்றது. அது தாக்குவதற்கு முன், புலியின் உணர்வை மான் நுகருகின்றது. புலியின் உணர்வுகள் அதன் உடலிலிருந்து வருவது சிவ தனுசு.

புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் சென்றபின், மானை உருவாக்கிய அணுக்களைத் தாக்குகின்றது. அதனுடைய உணர்ச்சியில் அச்சப்படும் உணர்வுகள் அதிகமாகி, மானிற்கு புலியின் நினைவே வருகின்றது.

புலியின் உணர்வுகள் சிவ தனுசாக மானின் உடலுக்குள் சென்று, மானை வீழ்த்துகின்றது. மானின் உயிராத்மா உடலை விட்டுச் சென்றபின், புலியின் ஈர்ப்புக்குள் வந்து கருவாகி, புலியாக உருப்பெறுகின்றது.

ஒரு புழுவைக் குளவி எடுத்துக் கொட்டினால், அதுவும் சிவ தனுசு. குளவியின் உணர்வுகள் புழுவின் உடலுக்குள் சேர்ந்தபின், அந்தக் குளவியின் ரூபமாக மாறுகின்றது.

பாமபைக் கருடன் தாக்கினால், அதுவும் சிவ தனுசு. பாம்பின் விஷத்தின் தன்மையை ஒடுக்கி அதன் உணர்வு ஆனபின், அதைத் தன் இனத்திற்கே மாற்றிவிடுகின்றது.

ஒரு குருவி விட்டில் பூச்சியைக் கொத்தி அதைக் கொன்று விழுங்கினால், அந்த விட்டில் பூச்சி அடுத்து குருவியாக வருகின்றது.
2. மனிதனானபின் மற்றொருவரை இரக்கமற்றுத் தாக்கினால் என்ன ஆகும்?
இதைப் போன்றுதான்,
மனிதன் ஒருவனை அடித்துக் கொல்கின்றானென்றால்,
அடித்தவனின் உணர்வுகள்
தாக்கப்பட்டவனின் உடலுக்குள் அதிகமாகச் சேர்கின்றது.

அவன் இறந்தானென்றால், உடலைவிட்டுச் செல்லும் உயிரான்மா எவன் கொல்கின்றானோ, அவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது. இதுவும் சிவ தனுசு.

கொல்லப்பட்டவன் எப்படித் துயரப்பட்டானோ,
அதே உணர்வுகள் இந்த உடலுக்குள் உயிரான்மாவாக வந்தபின்,
இவன் உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
அதே மாதிரி நாளடைவில் நரக வேதனைப்படுத்தி
அவனையும் வீழ்த்துகின்றது.

தாக்கும் உணர்வு கொண்ட உணர்வுகள் இவன் உடலுக்குள் ஆனபின், உடலைவிட்டுச் செல்லும் உயிரான்மா,
தாக்கி உணவாக உட்கொள்ளும் உடல் அமைப்பை
மிருகமாக உருவாக்கிவிடுகின்றது.

தாக்கப்பட்டவனுக்கும் இவனைத் தாக்கினான் என்ற உணர்வு ஏற்படும் பொழுது, அடுத்தவனைத் தாக்கவேண்டும் என்ற உணர்வுகள் வரும். இப்படி மாறி மாறி இந்த உணர்வுகள் சிவ தனுசாகின்றது.
3. மீண்டும் மீண்டும் பூமியில் உடல் பெறுவதே சிவ தனுசு
இப்படி ஒன்றுக்குள் ஒன்றாகி, அந்தச் சிவ தனுசாக மாறி அந்த வலிமை கொண்டு உயிர் அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளை மாற்றி உருவாக்குகின்றது என்பதற்குத்தான் சிவ தனுசு என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள்.
         
இப்படிப் பல கோடி உணர்வுகள் சிவ தனுசாகி, பல கோடிச் சரீரங்களைக் கடந்து, பல கோடித் தீமைகளை நீக்கி, இன்று நம்மை மனிதனாக உருவாக்கியிருக்கின்றது நமது உயிர்.

இப்படி, புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும், சேர்த்துக் கொண்ட உணர்வுகளைத்தான் சிவ தனுசு என்று இராமாயணத்தில் சொல்லியிருக்கின்றார்கள்.
4. உடல் பெறும் நிலையை மாற்றி அமைத்தவன் மெய்ஞானி
மெய்ஞானிகள் விஷ்ணு தனுசை எடுத்து,
உயிரோடு ஒன்றி,
விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து,
உடல் பெறும் உணர்வை மாற்றி,
புவி ஈர்ப்பின் பிடிப்பைவிட்டுக் கடந்து சென்று,
ஓளியின் சரீரம் பெற்று ஒளியாகச் சென்றார்கள்.
நாமும் அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும்.