ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2013

தீமைகள் விளையாமல் தடுப்பதே "விநாயக சதுர்த்தி" (சதுர்த்தி - நிறுத்துதல்)

வினை என்பது எது?
வினைக்கு நாயகனாக எப்படி உருவானது?
அதை எப்படி நிறுத்துவது? என்பதுதான் விநாயகர் சதுர்த்தி.

ஒரு உயிரணு பிறந்ததிலிருந்து, பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்தபின், நமக்குள் பாசத்தால், அன்பால், பரிவால் பிறருடைய துன்பங்களைக் கேட்டறியும் பொழுது, நமக்குள் வேதனை என்ற தீயவினைகள் சேருகின்றது. அதை நாம் எப்படித் தடுத்து நிறுத்துவது?

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நல்ல குணங்கள் கொண்டு செயல்பட்டாலும், வேதனைப்படும் பொழுது, தீயவினைகள் சேர்க்கப்படுகின்றது. அதையெல்லாம் நாம் துடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நாள்தான் விநாயக சதுர்த்தி. ஒருவர் மேல் உள்ள பகைமைகளை நிறுத்துவதற்குத்தான் விநாயக சதுர்த்தி என்பது.

ஒருவர் என்னை ஏசுகின்றார் என்றால், அந்த ஏசிய உணர்வுகள் எனக்குள் நிலைக்காமல் செய்வதும், அந்த உணர்வு எனக்குள் விளையாமல் தடுப்பதும் “விநாயகர் சதுர்த்தி”.

நமது வாழ்க்கையில் நாம் யார் யார் மீதெல்லாம்
தொழில் முறையிலோ, நண்பர் என்ற முறையிலோ,
கொடுக்கல் வாங்கல் என்ற நிலையிலோ, அல்லது
ரோட்டில் நடக்கும் பொழுது, இடித்துத் தள்ளிவிட்டால்
அவர் மேல் குரோதம் கொண்டோ,
இப்படிப் பல சமயங்களில், பல சந்தர்ப்பங்களில் வேதனையான எண்ணம் சேர்ந்துவிடும்பொழுது, அப்படிச் சேர்ந்த இந்த நிலைகளை நீக்குவதற்குத்தான் விநாயக சதுர்த்தி.

ஒருவருக்கொருவர் பகைமைகளை நீக்கி, நமக்குள் மெய்ஞானிகளின் உணர்வை வினையாகச் சேர்த்து, மனித வாழ்க்கையில் இந்த விநாயக சதுர்த்திக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் பொருளறிந்து செயல்படும் தன்மையைப் பெறவேண்டும்.

ஆக, ஒவ்வொரு நிமிடத்திலும் பொருளை அறியும் பொழுதும், பொருளை அறியாத நிலைகளிலும், அந்த ஞானியரின் அருளை எடுத்து, பொருளை மறைக்கும் உணர்வின் தன்மையைத் துடைப்பதற்கு,
இந்த நாளைத் தேர்ந்தெடுத்து,
வருடத்தில் ஒரு நாள் விநாயகர் சதுர்த்தி என்று வைத்து,
நம்மை இயக்கும் நிலைகளை
அறியும் வண்ணம் ஞானிகள் செய்தார்கள். 
நாம் தீயவினைகளைத் தடுத்து நிறுத்தும் நாளாக, நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அருள் வழிப்படி, மெய்ஞானியான, முதன் முதல் மனிதன் அணுவைக் கண்டறிந்து, அணுவின் ஆற்றலைத் தனக்குள் உணர்ந்தறிந்து, அந்த ஆற்றல்மிக்க நிலையாக அந்த மெய்ஞானி அகஸ்தியன் தனக்குள் தீயவினைகளை அகற்றி, மெய் ஒளி பெற்ற நிலையை நீங்களும் பெறவேண்டும் என்பதற்காக, யாம் உபதேசிக்கின்றோம். எமது அருளாசிகள்.