ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2013

குருநாதர் எம்மை ஆட்கொண்ட முறை - ஞானகுரு

1. எம்மை குருநாதர் எப்படி ஆட்கொண்டார்?
நானும் உங்களைப் போலவே நன்றாகச் சௌகரியமாகச் சாப்பிட்டுக் கொண்டு, வீட்டில் எப்படி இருந்தாலும் ஏமாற்றிக் கொண்டு, காசு வருவதையெல்லாம் செலவழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். தாரளாமாகச் செலவழிப்பது, எந்நேரம் பார்த்தாலும் பொழுதைப் போக்குவது, சாப்பிடுவது, செலவழிப்பது என்றுதான் இருந்தோம்.

ஏனென்றால், மாமனார் வீட்டில் ஒரே பெண். அங்கேயும் செலவிற்குப் பணம் நிறையக் கிடைத்தது. சம்பாதிக்கின்றோம், தாராளமாகத்தான் இருக்கின்றோம் என்ற நிலையில் ஆனந்த நிலையில் இருக்கும் பொழுதுதான், எமது மனைவிக்கு நோய் வந்தது.

அந்த நேரத்தில் நமது குருநாதர் பைத்தியக்காரராகச் சப்தம் போட..,
அவராலே, இப்படி நமக்கு ஒரு சந்தர்ப்பம் வர,
ஏனென்றால், டாக்டரால் முடியாது என்று சொல்ல,.
வீட்டுக்குக் கொண்டு வந்தால், குழந்தைகள் அழுக,
மாமனாரோ, மகளுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று மரணமடைய,
மாமனார் மரணமடைந்தபின் வருபவர்களெல்லாம் அழுக,
இந்த நேரத்தில், குருநாதர் டீ குடிக்க வாடா என்று எம்மைக் கூப்பிட,
நான், மாமனார் இறந்துவிட்டார், மனவிக்கு இப்படி இருக்கின்றது,
டீ குடிக்கக் கூப்பிடுகிறாயா..,? போய்யா.., என்று
நாங்கள் இரண்டு பேரும் சண்டை போட,
இப்படித்தான் அவரிடம் வம்பாக மாட்டி, எப்படியோ கொண்டு போய்,
என்னை இந்தச் சந்தர்ப்பத்தில் சிக்க வைத்து,
விபூதியைக் கொடுத்து, மனைவிக்கு நன்றாகிவிடும் என்று சொல்ல,
அதன் வழி கொண்டு மனைவி நலமானபின்,
என்னை நீ நம்புகின்றாயா என்று குருநாதர் கேட்க,
நான் நம்புகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

அதிலிருந்து பிடியை வைத்துக் கொண்டார் குருநாதர், நான் நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. வாக்கையும் கொடுத்தாகிவிட்டது. வாக்கைக் கொடுத்தபின், எல்லையில்லாத துன்பங்களுக்கும் கஷ்டத்திற்கும் ஆளாக்குகின்றார்.

அந்தத் துன்பத்தின் எல்லை கடந்த நிலைகளில், எத்தனையோ தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உணர்வைத் தூண்டச் செய்தார், குருநாதர். நீ வாழவேண்டும் என்று விரும்புகிறாய். ஆக, இந்த உணர்வின் தன்மை உன்னை எப்படி அசைக்கச் செய்கின்றது?

ஆனால், பல சக்திகளைக் காட்டுகின்றார், பல அற்புதங்களைக் காட்டுகின்றார். அந்த அற்புதங்களையெல்லாம் எம்மை விட்டே செய்ய வைக்கின்றார். இப்படியும் ஆசைகளை ஊட்டுகின்றார்.

அதே சமயம், பல இன்னல்கள் வரப்படும் பொழுது என்ன வாழ்க்கை என்ற உணர்வு தோன்றி, இவ்வளவு பெரிய சக்தி இருந்தாலும் கூட அதை உதறித் தள்ளிவிட்டு, தற்கொலை செய்வதற்கு என்னை இழுத்துச் செல்கின்றது.

பல ஆற்றல்மிக்க சக்திகளைக் கொடுத்து, ஒரு மாடோ, யானையோ வருகிறது என்று சொன்னால், யானையைப் பார்த்து, இன்னதைச் சொல்லி.., நீ பார் என்று சொன்னால் அது அடங்கும், அல்லது கீழே விழும். இதைப் போன்ற சில ஆற்றல்மிக்க நிலைகளையெல்லாம் காட்டுகின்றார்.

காட்டியபின், இவ்வளவு வலு கொடுத்தாலும் அந்த வலுக் கொடுத்தபின், காட்டுக்குள்ளே மிருகம் இருக்கிறது பார்க்கின்றோம். சாப்பாட்டுக்கு வேண்டுமே..,? சாப்பாட்டை நினைத்தால், வீட்டினுடைய ஞாபகம் வருகின்றது.

மனைவி நோயிலிருந்து எழுந்தது. அப்புறம் குழந்தைகள் என்ன செய்கின்றார்கள். அப்பாவைப் பார்க்க ஏங்குகின்றார்கள். வீட்டிலே எம்மைத் திட்டுகின்றார்கள். செலவுக்குப் பணமில்லாமல் அவர்கள் ரொம்பக் கஷ்டப்படுகின்றார்கள், காட்டுக்குள்ளே இதையெல்லாம் ஜோதிடம் பார்க்கிற மாதிரி குருநாதர் காட்டுகின்றார். வீட்டில் நடப்பதையெல்லாம் இங்கேயே காட்டுவார்.

இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது, இப்படி இவரிடம் சிக்கிக் கொண்டோமே, தப்புவதற்கு வேறு வழி இல்லை. இவ்வளவு இம்சைப்பட்டுக் காட்டுக்குள் போவதைக் காட்டிலும், பேசாமல் உயிரை மாய்த்துக் கொண்டு போவது எப்படி என்றெல்லாம் எண்ணம் வருகின்றது. காரணம் என்ன?

இந்த உணர்வேதான் காரணம். இந்த உணர்வின் தன்மையை மாற்றுவதற்கு எனக்குச் சந்தர்ப்பத்தை உருவாக்கினார். ஆனால், வான்மீகி மாமகரிஷி சந்தர்ப்பத்தாலே பறவையை வீழ்த்தும் பொழுது, மெய் ஒளியின் தனமைகளை அவர் உடலிலே உணர்ந்தார்.

வான்மீகிக்கு எப்படி சந்தர்ப்பமோ, அதைப் போல எமக்கு மனைவி மூலமாக ஒரு சந்தர்ப்பம். இதைப் போல, உங்களுக்கு இப்பொழுது சந்தர்ப்பம் என்ன?
2. உங்களுக்கு மெய்ஞானிகளின் ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பம்
நீங்கள் கஷ்டம் என்று இங்கே வருகின்றீர்கள்.
குருநாதர் கொடுத்த ஆற்றலைக் கொண்டு
உங்களுக்குள் அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியைப் பாய்ச்சி,
அந்த வித்தைப் பதிவாக்குகின்றோம்.

பதிவாகிய வித்திற்கு, நீங்கள் தியானம் என்ற நீரை ஊற்றினால், உங்களுக்குள் வரும் தீமைகளை அது மாற்றியமைத்து, உங்களைத் தெளிவாக்குகின்றது. தெளிந்து வாழச் செய்கின்றது.

ஆக, உங்கள் கஷ்டமும் தீருகின்றது. உங்களுக்குள் வரும் இருளையும் நீங்களே நீக்குகின்றீர்கள். சந்தர்ப்பத்தாலே வரக்கூடிய கஷ்டத்தை நிவர்த்தி செய்வதற்கு இதைச் சொல்கின்றோம், அவ்வளவுதான். 
எமது அருளும், குருநாதரின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.