1. நமக்குள் பிரம்மமாக
சிருஷ்டிக்கும் சக்தி - உயிர்
எண்ணத்தின் செயலை,
நமக்குள் ஆண்டு கொண்டிருப்பது நமது உயிரான ஈசன் என்பதை மறந்துவிடாதீர்கள். நாம்
சுவாசிக்கும் உணர்வுகள் உயிருக்குள் பட்டவுடனே, அது பிரம்மமாகின்றது. இந்த பிரம்மத்தின் நிலைகள் கொண்டுதான்
நமக்குள் சிருஷ்டித்து, அதனின் செயலாக்கமாக வருகின்றது.
இன்று நான் உங்களை
ஏமாற்றலாம். நான் எந்தக் கடின உணர்வு கொண்டு, “ஒருவனை உதைக்கிறேன் பார், எனக்கு எவ்வளவு சக்தியிருக்கிறது,
நான் அழித்துக் காட்டுகிறேன்” என்ற உணர்வை நான்
சுவாசித்துவிட்டால், அந்தச் சுவாசத்தின் உணர்வு என் உயிருக்குள் பட்டவுடனே அதை
பிரம்மமாக்குகின்றான், அதை பிரம்மாவாக எனக்குள் சிருஷ்டித்துவிடுகின்றான்.
அந்த சிருஷ்டித்த
சக்தியின் நிலைகள் கொண்டு, எனக்குள் சிவத்துக்குள் சக்தியாக வளர்கின்றது. ஆக,
மீண்டும் தப்புவதற்கு வழியில்லை.
எடுத்துக் கொண்ட
உணர்வுகளை இங்கே விளையச் செய்து,
எனக்குள் இருக்கச்
செய்து,
“நீ செய்ததை நீ பெறு” என்று
நான் எதை
எண்ணுகின்றேனோ
எனக்குள் நின்று
என்னை ஆட்சிபுரியும் ஈசன்
அதைச் சிருஷ்டித்தே விடுகின்றான்.
நான் இன்று
ஒருவனை, உன் காலை வெட்டுகிறேன் என்று சொன்னால் அடுத்த நிமிடம் அந்த உணர்வுகள்
எனக்குள் சுவாசிக்கப்பட்டு, அது எனக்குள் விளைந்து, உயிருக்குள் இருந்து காலில்லாத
ஜீவனாக நிச்சயம் நான் பிறப்பேன். ஆக, நான் எடுத்துக் கொண்டது எதுவாக இருந்தாலும்
அதிலிருந்து தப்ப முடியாது.
2. நாம் சுவாசித்தது உயிரிலே
பட்டால்தான், அது இயக்கத்துக்கு வரும்
நாம் சமையல்
செய்யும் பொழுது, அதற்குள் எப்பொருள்
தவறி விழுந்தாலும் அதற்குள் பட்டு அது வேகத்தான் செய்யும். அதை உட்கொள்வோர் அதனின் சுவையை அனுபவித்தேதான்
தீர வேண்டும். அதைப் போல,
நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை
நம்மை ஆண்டு கொண்டிருக்கும்
உயிரான ஈசனிடத்தில் சேர்க்கப்படும் போது,
நிச்சயம்
அனுபவித்தேதான் ஆகவேண்டும்.
மனிதனானவன் இதை மாற்றியமைக்கும்
திறன் பெற்றவன். ஆனால், வாழ்க்கை என்ற நிலைகளில் தவறை உணராதபடி நாம் மகிழமுடியாது.
தவறு என்று சுவாசித்த பின் தான், அந்த உணர்வுகள் எனக்குள் பட்டு, தவறு என்று உணர
முடிகின்றது.
அதே சமயம், ஒரு
உயிரணு பரிணாம வளர்ச்சியில் தவறைக் கண்டு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வை
வளர்த்துக் கொண்டது. இப்படித் தற்காத்துக் கொள்ளும் உணர்வை எடுத்து வளர்த்துத்தான்,
நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.
மனிதனாக
வளர்ந்தபின், நாம் இந்தத் தவறென்ற நிலையை அறிய முடிகின்றது. ஆனால், அறிந்தாலும்
அதை நீக்கும் தன்மை மனிதனுக்குண்டு.
ஆனால், நீக்கும்
ஆற்றல் கொண்டு நமது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு செயல்படவில்லை என்றால்,
நமக்குள் ஆளும்
ஈசன் கொடுப்பதைச் சமைத்து,
பரிணாம
வளர்ச்சியில் நாம் எங்கிருந்து எப்படி வந்தோமோ
அங்கேயே திருப்பி
அனுப்புகின்றான்.
புழுவிலிருந்து
மனிதனாக வளர்ச்சியில் வந்தாலும், மனிதனிலிருந்து மீண்டும் புழுவாகத் தேயும்
நிலைகள் கொண்டு சந்தர்ப்பத்திலே மாறும் தன்மை வருகின்றது.
3. மனித வாழ்க்கையில் வேதனையைச்
சுவாசிக்காதவர் எவருமில்லை
நம்மை ஒரு தேள்
கொட்டிவிட்டால் நிலைகுலைந்துவிடுகின்றோம். ஒரு விஷம் தாக்கிவிட்டால், நம் சிந்தனை
குலைந்துவிடுகின்றது. விஷத்தை உட்கொண்டாலோ,
மனித நிலையை நாம் இழந்து விடுகின்றோம்.
இதைப் போன்று, மனித வாழ்க்கையிலே வேதனை,
வேதனை, வேதனை, வேதனை என்று நாம் சுவாசித்தே தீருகின்றோம்.
அந்த விஷமான
தன்மைகளை நாம் நீக்கவில்லையென்றால், விஷத்தைத் தன் உடலாக மிருகங்கள் எடுத்துக்
கொண்டதோ, அந்த நிலைக்கே நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஈசன் பிரம்மமாக இருந்து
சிருஷ்டித்துவிடுவான்.
4. வேதனையை மாற்றும் உயிர் வழி சுவாசம்
- துருவ தியானம்
இதைப் போன்ற
நிலைகளிலிருந்து மாறி நாம் உயர்ந்த நிலைகளாக்க வேண்டும். அதற்கே இதை
உபதேசிக்கின்றேன். அந்த மெய்ஞானியின் அருள் ஒளியை குரு காட்டிய அருள்வழியில்
உங்களுக்குள் பாய்ச்சுகின்றேன்.
ஒவ்வொருவரும்
உங்களை நீங்கள் நம்புங்கள். நீங்கள் தவறு செய்யாமலேயே உங்களுக்குள் அசுத்தத்தை
ஏற்படுத்தும் நிலைகளைத் துடைப்பதற்கு, மெய்ஞானிகளின் அருள் வழிப்படி இந்தத்
தியானத்தை மேற்கொள்ளுங்கள்.
அதிகாலையில்,
நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பத்து நிமிடமாவது உயிர்
வழியாக, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து, துருவ
தியானம் செய்யுங்கள். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக
மாற்றுங்கள். எமது அருளாசிகள்.