ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 16, 2013

எமது ஆசை எது? - ஞானகுரு

1. நமக்குள் பேதங்கள் வரக்கூடாது
நாம் எப்படி வாழ வேண்டும்? மற்றவர்களுக்கு நாம் எப்படி, எதை எல்லாம் உயர்த்திக் காட்ட வேண்டும்?.
உயர் குணங்களை வளர்க்க வேண்டும்.
நமக்குள் பேதங்கள் வரக்கூடாது.

பேதங்கள் நம்மைத் தாக்குகிறது என்றால் அந்த பேதங்களிலிருந்து நாம் விடுபடவேண்டும். இந்த முறைகளைக் கையாளப் பழகவேண்டும்.

பலமுறை சொல்லி உள்ளேன். இன்னும் பேதங்களை உருவாக்கும் நிலைகளும், பேதங்களை வளர்க்கும் நிலைகளும், பேதங்களை செயலாக்கும் நிலைகளும் உருவாக்குவோர் உள்ளார்கள்.

அம்மாதிரி பேதங்களை உருவாக்குபவர்களையும், செயல்படுத்துபவர்களையும் வேறு யாரும் எதுவும் செய்ய வேண்டியது இல்லை.

நீ எதை எணணுகின்றாயோ அதுவாகின்றாய். முதலில் தெரியாது. அந்தத் தீமையின் விளைவுகள் வரும்போது, அது படிப்படியாக உயர்ந்துவிட்டால், அது எல்லை கடந்து சென்றுவிட்டால், மனிதனின் உணர்வையே மாற்றிவிடும். அதிலிருந்தெல்லாம் மீளவேண்டும் என்றுதான் இத்தனை பாடுகிறோம்.
2. எமது ஆசை நீங்கள் அனைவரும் மெய்ஞானிகளாக வேண்டும்
பல அதிசயங்களையும், பல அற்புதங்களையும் யாம் காட்ட முடியும்.
உங்களை ஏமாற்றி, பல அற்புதங்களைக் காட்டி,
பொருளைத் தேட யாம் வரவில்லை.

எமது ஆசை - ஒவ்வொரு மனிதனும், குரு அருளால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும். உங்கள் பார்வை, சொல் பிறரது தீமைகளை அகற்ற வேண்டும். அத்தகைய சக்தியை நீங்கள் எலோரும் பெறவேண்டும் என்பதே எது ஆசை.

இந்த உடலுடன் நீண்ட நாள் வாழ்வோர் எவருமில்லை. இந்த உடல் இருக்கும்போதே நாம் அறிந்து, ஒளியின் தன்மை பெற வேண்டும்.

எல்லோரும் நலம் பெறவேண்டும். அருள் மரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆக, நாம் எண்ணியதை நம் உயிர் நமக்குள் படைக்கின்றது. உணர்வின் ஒளியாக நம்மைச் சேர்க்கின்றது. அதைப் பெறச் செய்வதற்குத்தான், உங்களிடம் உயர்ந்த சக்தியைப் பரப்புகிறேன்.

நீங்கள் இதை எடுத்துக் கொண்டால், நாளை இந்த விஞ்ஞான உலகில் உருவாகும் எந்தப் பேரழிவிலிருந்தும் மீளமுடியும். ஆக, மீள்வது மட்டும் இல்லாமல், என்றும் பிறவி இல்லா நிலையையும் நாம் அடைய முடியும். அதற்கு நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் கூட்டுத் தியானங்களில், அந்தத் துருவ தியானத்தில், அந்த மரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும் என்று உங்களுக்குள் பதிவாக்க வேண்டும்.
3. குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
இந்த வழியில் வந்து விட்டீர்கள் என்றால், நமக்குள் குரு அருள் உண்டு.

குரு அருள் நாங்கள்: பெறவேண்டும் என்று எண்ண வேண்டும். அதை, தினம் துருவ தியானத்தில் எடுத்துப் பழக வேண்டும். குரு காட்டிய வழிகளில், நாம் எப்படிப் பின்பற்ற வேண்டும்? எதன் வழிகளில் நாம் வழி நடத்த வேண்டும் என்ற பேருண்மையை, நாம் அனைவரும் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

எங்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், மெய்ப்பொருள் காணும் திறன் நாங்கள் பெறவேண்டும் என்று இதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களைப் பற்றி மட்டும் எண்ணதீர்கள்.
எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.
அதை வளர்த்துக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.