ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 2, 2020

உடல் என்ற விதிக்கு இனி செல்ல வேண்டாம்...!

ஞானிகள் தெய்வங்களை உருவமாக்கி அதன் மூலம் அருவத்தின் நிலைகளை நாம் எப்படி நுகர்தல் வேண்டும்…? இருளை எப்படி அகற்றுதல் வேண்டும்…? என்று தான் ஆலயங்களை அமைத்தனர்.
 
இந்த உடலின் இச்சைக்குத் தான் அர்ச்சனை அபிஷேகம் இதை எல்லாம் நாம் செய்கின்றோமே தவிர ஞானிகள் சொன்ன வழியை நாம் எடுக்கவில்லை.
 
1.அருள் ஞானத்தை நாம் நுகர்ந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கி அதை அர்ச்சனையாக்கி
3.அந்த ஒளித் தன்மையை நமக்குள் கூட்டி நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
4.மெய்ப் பொருள் காண வேண்டும் என்ற உணர்வை நீங்கள் ஆலயங்களிலே தியானியுங்கள்.
 
இந்த அருள் ஒளியின் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உயிரான ஈசனிடம் படப்படும் பொழுது இருளை அகற்றுகின்றது. மெய்ப் பொருளை உணர்த்துகின்றது. 
 
இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள்.
 
ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதிக்கின்றோம். எவருக்கோ காசைக் கொடுத்து அவர் எல்லாம் செய்து கொடுப்பார்… வாங்கித் தருவார்…! என்ற நிலையில் தான் நம்பிக் கொண்டிருக்கின்றோமே தவிர ஞானத்தின் வழி எட்டிப் பார்க்கும் நிலை இல்லை… அதைப் பெறும் நிலையும் இல்லை…!
 
உயர்ந்த நிலைகளைச் சொன்னால் அதைப் பின்பற்றி அந்த உயர்ந்தது எனக்குள் வளர வேண்டும் என்ற இதைத் தான் நாம் பெறுதல் வேண்டும்.
 
ஒருவன் தீமை என்ற நிலையைச் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அவன் தீமை செய்கின்றான் என்று எண்ணும் போது
1.அதே தீமையை எண்ண எண்ண நமக்குள்ளும் அது வளர்கின்றது.
2.நாமே தீமை செய்வோராக மாறிவிடுகின்றோம்.
 
அதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.
 
ஞானிகள் காட்டிய வழி சென்றால் நாம் தெளிவான வாழ்க்கை வாழ முடியும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும்.
 
கடலிலே நீந்திச் செல்லப்படும் பொழுது எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது. நாம் எந்தக் கரையை எல்லையாக வைத்தோமோ அதை அடைய வேண்டும் என்ற மன உறுதி கொண்டால் நாம் அங்கே செல்கின்றோம்.
 
எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் நம் எல்லை எது…?
 
உயிருடன் ஒன்றி இனி உடல் இல்லை என்ற நிலை கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ஒளியான அந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.
 
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வுடன்
2.ஒவ்வொரு நொடியிலும் இங்கே வரும் துன்பங்களை அந்த அருள் ஞானம் என்ற துடுப்பை வைத்துத் தள்ளிவிட்டு
3.நம் எல்லை அந்தத் துருவ நட்சத்திரம் தான் என்ற நிலை வரும் பொழுது சங்கடங்களோ மற்ற துயரங்களையோ நாம் நீக்க முடியும்.
 
துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பற்றுடன் பற்ற வேண்டும்.
 
இந்த வாழ்க்கையில் பாச அலை வரும்… அன்பு அலைகள் வரும்… சங்கட அலைகள் வரும்… வெறுப்பு அலைகள் வரும்… மற்ற குரோத அலைகள் நம்மை எத்தனையோ மோதிக் கொண்டிருக்கும்.
 
இதில் எதிலே சிக்கினாலும் நாம் மூழ்கிவிடுவோம்.
 
1.ஆக அதிலே சிக்காதபடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் துடுப்பாக வைத்து
2.அந்த எல்லையை நாம் அடைய வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானமே…!
 
அத்தகைய அரும் பெரும் சக்தியை நம் குருநாதர் அருளால் உங்களுக்குள் பதிக்க முடிந்தது. அந்த ஞானத்தை உங்களுக்குள் விதிக்க முடிந்தது. இதைப் பெறவேண்டும் என்ற அந்த மதி கொண்டு தீமைகளை மாற்றிட முடியும்.
 
வாழ்க்கையில் சங்கடம் வேதனை என்று இது அதிகமானால் இந்த விதிப்படி மீண்டும் பிறவிக்குச் செல்கிறது.
1.மதி வழி இனி உடல் வேண்டாம்.
2.மதி என்றாலே ஒளி…! அந்த மதி கொண்டு விதியை வெல்லுங்கள்
3.இனி உடல் என்ற விதிக்குச் செல்ல வேண்டாம்...!
 
 மதி கொண்டு என்றும் நிலையாக இருக்கச் செய்யும் ஒளி என்ற நிலைக்கு வாருங்கள். உங்களால் அதைப் பெற முடியும்.
 
குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். இந்தக் காற்றிலே மகரிஷிகள் உணர்வுகள் உண்டு. அதை நாம் நுகரப் பழக வேண்டும். அந்த வலுவைப் பெறுவோம்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம். அவர்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்வோம். அந்த உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தியைப் பெறுவோம்.

மற்றவர்களின் தீமைகளை நீக்கி அவர்களையும் மெய்ப் பொருளைக் காணச் செய்வோம்…!