ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2020

ஒளியுடன் ஒளி சேரின் ஒளிருமே.. அறு குண நிலையுடன் உயருமாம் ஆன்மா...! - ஈஸ்வரபட்டர்

உயிரணு உதித்து உயிராத்மாவாய் ஆத்ம சக்தியை அவ் உயிரணு சேமிக்கும் நிலையிலேயே உயிரணுவின் ஆரம்ப உறுப்பாய் இக்கவன நரம்பின் செயல்தான் முதலில் தாயின் வயிற்றில் உதிக்கிறது.
 
1.அதுவே... உயிரணுவிற்குச் செயல் கருவியாய்
2.அது ஈர்க்கும் அமில குணமான ஆத்மா என்ற ஆவி அமிலம் திடப்பட்டு
3.அதன் தொடர்ச்சியில் இருந்துதான் ஒவ்வோர் உறுப்புகளும் உருக்கொள்கின்றது.
 
மனித ஆத்மாவுக்குகந்த பன்னிரண்டு வகையான குண அமிலத்தையும் ஈர்க்கவல்ல சக்தியாய் இக்கவன நரம்பு ஆரம்ப கட்டத்திலிருந்தே செயல் கொள்கின்றது.
 
சாதாரண மனித ஆத்மாக்கள் இதன் தொடர்ச்சி வட்டத்தில் எக்குண அமில சகக்தியை அதிகப்படியாக ஈர்த்துப் பழக்கப்படுத்தி வாழ்ந்தனவோ அதே தொடர் நிலையில் வாழ் நாள் முழுவதும் வாழ்கின்றன.
 
வாழ் நாள் முடிந்த பிறகும் ஆவி உலகிலும் மறு ஜென்மத்திலும் இதன் தொடரில் இருந்து மாறுபடுவதில்லை.
 
ஆனால் இப்பன்னிரண்டு வகையான அமில வட்டத்தில் வாழும் மனிதன்... தன் நிலை உணர்ந்து... சம நிலை பெற்று...
1.இங்கே உணர்த்தும் ஞான மார்க்கத்தின் தொடர் நிலை எய்துங்கால்
2.இப்பன்னிரண்டு வகையான குண அமிலத்திற்கும் அப்பாற்பட்ட
3.உயர்ந்த குண அமிலமான ஞான அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால்
4.அதன் தொடரினால் ஒவ்வோர் ஆத்மாவும் இவ்வுலகினில் நம்முள் கலந்துள்ள
5.தீய சக்தி எது...? நற்சக்தி எது...? என்ற பாகுபாட்டை அறியலாம்.
 
ஒருவரைக் காணும் பொழுதே அவரின்ம் குண நிலையையும்... அவர் எவ்வெண்ணமுடன் நம்மை நாடுகிறார்...? என்ற செயலையும் “அவர் சுவாசமுடன் நம் சுவாசம் மோதும் நிலையிலேயே...” அவரது எண்ண நிலையை நாம் அறியலாம்.
 
ஆனாலும் இந்த ஞானத்தொடர் வழி பெற்றுத் தெய்வத்துடன் ஐக்கியமாகி தெய்வமாகிப் பேரானந்தம் அடையலாம்...! என்ற ஆசையில் செயல்பட்டால் அது கொடிய விஷத் தன்மையுடைய நான் என்னும் அகந்தையில் செல்லும் மார்க்கம்.
 
நாம் பிறந்த பூமியில் நம்முடன் கலந்துள்ள ஜீவ ஆத்மாக்களின் நிலையிலிருந்து ஒதுங்கி... “தான் மட்டும்...” ஆண்டவனாகச் செல்லும் ஞான மார்க்கம் உகந்த மார்க்கமல்ல.
 
நம்முடன் கலந்துள்ளவர்களின் விரோதத்தையும் கோபத்தையும் சாடி வாழ்ந்து... பொருளாசையில் தனக்கே சொந்தமாகப் பொருள் பெற்று... “நான் என்ற வட்டத்தில் வாழ்வதினால் நம் ஆத்மாவிற்கு என்ன பயன்...?”
 
1.நம்முடன் கலந்துள்ள ஜீவ ஆத்மாக்களுக்கு அன்பு என்ற கலசத்தை ஏற்றிக் கலந்து வாழ்ந்து...
2.நாம் பிறந்ததின் நலனை உணர்ந்து...
3.நாம் அறிந்த இந்த உண்மையின் ஞானத்தைப் பலருக்குப் போதித்து
4.வாழும் இக்குறுகிய வாழ் நாட்களில் அன்பின் அடிப்படையில் வாழும் பக்குவத்தையும்
5.நம் சக்தியைக் கொண்டு சேமிக்கும் பொருளினால்
6.பல ஜீவன்களையும் வாழ வைக்கும் முறையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.
 
நமக்கு உள்ள பொருளை எடுத்து அடுத்தவர்களுக்குத் தானமளித்து அவர்களைச் சோம்பேறி நிலைப்படுத்திடச் செப்பவில்லை.
 
ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் தனக்குகந்த செயல் புரிந்து தான் ஜீவிதம் கொள்ள வேண்டும். அதன் வழித் தொடருக்குப் பொருளிடுங்கள். அங்கவீனமுற்ற ஆத்மாக்களுக்கு ஜீவிதம் செய்திடப் பொருள் அளித்திடலாம்.
 
பட்சிகளோ மற்ற மிருக இனங்களோ தனக்கு வேண்டிய உணவை எப்படித் தானாகச் சம்பாதித்துக் கொள்கிறதோ அதைப் போன்ற பக்குவ ஆத்மாக்கள் மனித ஆத்மாவில் குறைவு.
 
பன்னிரண்டு வகையான குண அமிலத்தைப் பெற்ற மனித ஆத்மாதான் இன்று தன் நிலை உணராமல் வாழ்கின்றான். மிருக இனங்கள் மனிதனைக் காட்டிலும் இன்று உயர்ந்ததாகிவிட்டது.
 
1.நாம் நம் நிலையை (தன் நிலை) உணரும் பக்குவம் பெற்ற பிறகு
2.ஞானத் தொடரின் ஓளியை ஈர்க்கும் குண நிலை கொண்ட பிறகு
3.ஞானத்தின் வட்டத்திலுள்ள பல ஒளி ஞானிகள் (மகரிஷிகள்) எல்லாம் நமக்கு உதவுவர்.
 
ஆரம்ப நாளிலேயே ஏன் அவர்கள் நம்மை ஏற்கவில்லை...? என்ற வினா எழும்பலாம்.
 
நம் ஆத்மாவைக் கொண்டு நாம் பெறும் சக்தியின் ஞான ஈர்ப்பில் “நம் செயல் சென்ற பிறகுதான்...” அச் செயலின் ஒளியும் நம்முடன் கலக்குமே அன்றி 
1.அவர்கள் சக்தியை எல்லாம் தீய ஆத்மாக்களின் வட்டத்தில் செலுத்தி விட்டால் அவர்கள் பெற்ற சக்தியும் குறைந்துவிடும்.
2.குறைந்துவிடும் என்பது மட்டுமல்ல வீண் விரயப்பட்டுவிடும்...!
 
இதனை உணர்ந்துதான் சில கால கட்டங்களில் இத்தியான மார்க்கத்தை ஈர்த்து ஞானத்தின் வழிபெறும் ஆத்மாக்களின் நிலையுடன் இவ்வுலகிற்குத் தன் ஒளியை எப்படி எப்படி எல்லாம் பரப்பிடலாம்..? என்ற ஆர்வத் துடிப்புடன்... இன்று நாம் எப்படிப் பல சித்தர்களின் நிலையை உணருகின்றோமோ அதைப் போன்று பல காலமாய் இச்செயல் நிலைகள் நடந்து வந்தன.
 
1.தானாக எந்த நிலையும் செயல் கொள்ளாது...!
2.ஒளியுடன் நல்லொளியாய்க் கலக்கத்தான் செய்யுமே ஒழிய வீண் விரயப்படுத்திச் செயல்படாது.