ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அதனதன் ஜீவ அமில குணங்கள் உண்டு. அக்குணத்
தொடர்ச்சியில் எவ் அமிலத்தின் விகித நிலை கூடியுள்ளதோ அதன் சக்தித் தொடரில்
அவ்வாத்மாவின் செயல் சென்றிட்டால் அவ்வாத்மாவின் ஒளி பிரகாசிக்கும்.
ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் பன்னிரண்டு வகையான அமில குணங்கள் உண்டு.
1.எதன் தொடரில் உயிரணு உதித்து உயிராத்மாவான மனித உடல் பெறுகின்றோமோ
2.அதிலிருந்தே இந்தப் பன்னிரண்டு வகையான குணங்களில் ஒன்றை ஒவ்வோர்
ஆத்மாவும்
3.அதன் ஈர்ப்பிலேயே வளர்ச்சியை ஈடுபடுத்தி இழுக்கின்றது.
ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இப்பன்னிரண்டு வகையான குண அமிலங்கள் இருந்தாலும்…
1.ஏதாவது ஒன்றின் வளர்ச்சியின் வட்டத் தொடரில்தான் ஒவ்வோர் ஆத்மாவும்
வளர்ந்து கொண்டே செல்கின்றதே ஒழிய
2.தனக்குள்ளுள்ள மற்றக் குண அமிலத்தை எண்ணுவதோ செயல்படுத்துவதோ இல்லை.
மனித ஆத்மாவாய் வரும் காலத்திலேயே இப் பன்னிரண்டு வகை குண அமில சக்தி பெற்ற
பிறகுதான் மனிதனாகவே மனிதக் கருவிற்கு வர முடிகின்றது.
இயற்கையின் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகை நிலை ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பொழுதைய செயற்கையிலேயே எப்படி ஒரு தாவரத்திற்கு அளிக்கும் எருவை (உரம்) மற்றொரு
தாவரம் ஏற்பதில்லையோ அதைப்போல் ஒவ்வோர் இன வளர்ச்சிக்கும் உயிரணுவிலிருந்து அவை
ஈர்க்கும் குண வளர்ச்சியின் தொடர்படுத்தித்தான் இன வளர்ச்சியும் வளர்கின்றது.
இந்தப் பன்னிரண்டு வகை குண அமில வளர்ச்சி பெற்ற பிறகு தான் மனித உருப்
பெறுகின்றது. இம் மனித உருவில் அக் குண வளர்ச்சியின் சக்தியை அதன் வழித்தொடரிலேயே
செயல்படுத்தினால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் தொடர் நிலையினால் ஏழு ஜென்மங்கள்
எடுக்கக்கூடிய அளவிற்கு மனித உருப்பெற்ற காலத்திலேயே சக்தி கூடிவிடுகின்றது. அதன்
தொடரில் ஏழு ஜென்மம் எடுக்கக் கூடிய சக்தி ஆற்றலுண்டு.
1.இச்சக்தியை உபயோகப்படுத்திச் செயல்படும் நல்லாத்மாக்கள்
2.இந்த ஏழு ஜென்மத்திற்குள் இப்பன்னிரண்டு வகையின் குண அமிலத்தை உரமாக்கி
3.சூட்சுமம் கொண்டு என்றென்றும் அழியாத வழித்தொடர் பெற்று விடுகின்றனர்.
இதில் சில ஆத்மாக்கள் இவ் ஏழு ஜென்மத்தின் வழித்தொடர் வந்து “கரை சேராத
நிலையில்…” உலக மாற்றத்தில் சிக்குண்டு மற்றொரு பிரளயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளின்
சுழற்சி வட்டத்திற்குச் செல்கின்றது.
மனித ஆத்மா உடலுடனே மனித வளர்ச்சிக்கு அடுத்த வளர்ச்சியில் அதிவிரைவில்
மனித உடல் பெறும் பக்குவத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றது.
சில ஆத்மாக்களின் நிலையில்… இவ் ஏழு ஜென்மத்திற்குச் செல்லுவதற்குள்ளேயே
1.தான் பெற்ற இப்பொக்கிஷ குண சக்தியை உணராமல்
2.பேராசைக்கும் வெறி உணர்விற்கும் காம இச்சைக்கும் உட்பட்டு
3.அவ்வாத்மா வெறி உணர்வு கொண்ட மிருக வட்டத்திற்குள் சென்று
4.அதன் வழித் தொடர்ச்சியில் மிகவும் அல்லல்பட்டு அடுத்த சுழற்சி
வட்டத்திலும்
5.மனித இனம் பெற வேண்டிய இப்பன்னிரண்டு வகையான குண அமிலம் பெறப் பல நாட்கள்
சென்று விடுகின்றன.
இம் மனித ஆத்மாக்களுக்கு மனிதனாய் வாழக்கூடிய குண அமிலத்தைப் பெற்ற சக்தியை
உணராமல் தன்னைத்தானே சிதறவிட்டு வாழும் நிலையை உணர்ந்தீரா…?
அகண்ட அண்டத்தில் பல கோடி மண்டலங்கள் இருந்தாலும் எல்லா மண்டலத்திலும் மனித
உருப்பெற்ற ஜீவன்கள் இல்லையல்லவா…? ஆக… இன்று இந்த மனித உருப்பெறவே பாக்கியம்
பெற்றிருக்க வேண்டும்.
பல கோடி வகையான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனைப்போல அறிவு வளர்ச்சியுற்ற
செயல் திறன் மற்றவற்றிற்கு இல்லை.
1.நாம் எதனை உணர்ந்தோம்…?
2.இன்றிருக்கும் நிலை நாளையில்லை
3.நேற்று நடந்த நிலை இன்று கனவுதான்.
4.இன்றைய நடைமுறை நாளை கனவு
கனவு என்பதையே மறந்து… நம்முள் ஏற்படும் இச்சைக்கெல்லாம் நம்மை நாமே
அடிமைப்படுத்தி… கால வெள்ளத்தை விரயம் பண்ணி… வீண் சஞ்சலமான வட்டத்திற்குள்
நம்மைச் சிக்க வைத்து வாழும் நிலைதான்… “இன்று நாம் வாழ்ந்திடும் நிலை…”
சில தாவரங்கள் எப்படி அதன் ஈர்ப்பின் தன்மையினால் வைரம் பாய்ந்த மரமாய்
தன்னையே வளர்த்துக் கொண்டுள்ளனவோ அதைப்போல் நம் ஆத்மாவை வைரம் பாய்ந்த ஞான
வட்டத்தின் சுழற்சியாக்கி அச் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தின் வழித்தொடரில் செல்ல
வேண்டும்.
அவ்வளர்ச்சியின் வட்டத்திற்குச் சென்றுவிட்டால் அதன் தொடரில் பல சக்தி
நிலையை நாம் உணரலாம்.
1.அந்த உணர்வின் சக்தியை உண்மையாக்கி
2.தன்னடக்கம் பெறும் பக்குவம் கொண்டு செயல்பட்டால்
3.அதன் தொடர்பில் அடையும் பேரானந்தம் உள்ளதே அவ்வானந்தத்தில்தான் அகிலமே
கலந்துள்ளது.
இந்நிலையில் தான் பெற்ற நிலையை சிதறவிட்ட ஆத்மாக்களும் பல உண்டு… “நான்”
என்ற நிலை ஏற்பட்டதினால்…!
தான் பெற்ற சக்தியை எக்காரணம் கொண்டும் நானாக்கிக் காட்டினால் அச்சக்தி
நிலைத்திடுமா…? ஞானம் பெறவே பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பல காலம் சேமித்த இஞ்ஞான
சக்தியையே நான் என்ற நிலையில் சிதறவிட்ட ஆத்மாக்கள் பலர் உள்ளனர் இன்று நம்முடனே.
சிதறவிட்ட பிறகு அவ்வாத்மாக்கள் அதன் தொடர்ச்சியில் செல்ல முடியாமல் அதன்
கீழ் நிலைக்குத் தான் திரும்பவும் சென்று விடுகின்றன.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.