ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 26, 2020

ஞானிகளின் வழித் தொடரை நாம் ஒவ்வொருவரும் அவசியம் பெற வேண்டும்

உதாரணமாக ஒரு மனிதன் மிகவும் பயந்த நிலைகள் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.
 
அவனின் உடலில் விளைந்த உணர்வுகள் “ஐயோ... பயமாக இருக்கின்றது... பூதம் வருகின்றது...” என்று நாம் கற்பித்த உணர்வின் தன்மை கொண்டு (விளையாட்டாகப் பேய் பிசாசு ஆவி என்று சொல்கிறோம் அல்லவா...!) அவன் ஏற்றுக் கொண்ட உணர்வுகள் அந்த அலைகளாகப் படர்ந்து அவனுக்குள் விளைந்து விடுகின்றது.
 
தான் கற்பனையாகச் செய்து கொண்ட “பூதகணங்கள்...” இவ்வாறு இருக்கிறது என்ற அச்சத்தால் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மை இவனுக்குள் விளைந்த பின் அவன் வெளியிட்ட இந்த அலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.
 
அதே சமயத்ததில் இவனைப் போலவே இன்னொரு மனிதன் அச்சப்படுவான் என்றால்
1.ஏற்கனவே முதல் மனிதன் பயந்த உணர்வுகள் வெளிப்படுத்தியதை
2.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்த அச்ச அலைகளை இவன் நுகர நேருகின்றது.
 
நுகர்ந்த பின்... “பூதம் வருகின்றது... இதோ பேய் வருகிறது...! என்று சொல்ல ஆரம்பிப்பான். நமக்குத் தெரியாது ஆனால் அவர்களுக்குத் தெரியும்.
 
என்னென்ன உணர்வு கொண்டு அதைப் பிரித்தார்களோ அந்தந்த உணர்வு கொண்டு பூதம் வருகின்றது... ஐயோ... ஐயோ... என்னை நசுக்க வருகின்றது...” என்னைப் பிடிக்க வருகின்றது...! என்று சொல்வதை நாம் கேட்கலாம்.
 
ஒரு மனிதனில் விளைந்த உணர்வுகள்... அவன் எதைக் கொண்டு எதனை அஞ்சிடும் உணர்வு கொண்டு எண்ணினானோ... அவனின் உணர்வுகளுக்குள் விளைந்ததோ அவனில் விளைந்த உணர்வின் அலைகள் வெளியே வரப்படும்போது சூரியனின் காந்த சக்தியால் அது கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.
 
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படித்தான் நாம் நுகரும் ஒவ்வொருவரும் உணர்வும் நம்மை இயக்கிக் கொண்டுள்ளது.
 
இது எல்லாம் ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகள்...!
 
1.நல்லது... கெட்டது... என்ற நிலைகளில் சூட்சும நிலைகளில் உலகில் எது எப்படி இயக்குகின்றது....?
2.நுகர்ந்த அறிவாகத் தனக்குள் வந்தபின் உடலில் அது எவ்வாறு இயக்குகின்றது...? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துள்ளார்கள் மகரிஷிகள்.
 
இயற்கையில் மனிதனாக உருவாவதற்கும் மற்ற உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படி உருவானது...? என்ற நிலையையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்கள் அந்த “மகரிஷிகள்...”
 
மகரிஷிகளிலே அகஸ்தியன் தான் முதன்மை பெற்றவன். அவன் கண்டுணர்ந்த உணர்வு தான் மெய் (ஞான) உலகிற்கு இன்றும் வழி காட்டிக் கொண்டுள்ளது.
 
அவன் வழியினைப் பின்பற்றிய மெய் ஞானிகள் காட்டிய உணர்வுகள் அனைத்தும் மனிதனுக்குள் உணர்வலைகளாகப் படர்ந்து படர்ந்து... அது பரவிக் கிடப்பதைத் தான் எழுத்தறிவு என்று வரப்படும்போது விண்ணுலக ஆற்றலை வான இயல் சாஸ்திரம் என்று கொண்டு வருகின்றார்கள்.
 
இன்னென்ன இடத்தில் சூரியன் இருக்கின்றது... வியாழனும் மற்ற கோள்களும் இருக்கின்றது... என்ற நிலையும் அதனின் திசைகளையும் அதனின் ஓட்ட நிலைகளையும் அதனின் ஓட்டப் பாதைகளையும் அதனுடைய பாதையின் திசைகளையும் அன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியுள்ளான்.
 
அவனில் வெளிப்பட்டதைப் பின் வந்த வியாசகன் தன் உணர்வின் ஆற்றலால் அதைக் கண்டுணர்கின்றான். அகஸ்தியன் கண்டுணர்ந்த கோள்கள் எதுவோ...
1.அவனுக்குள் படமெடுத்த உணர்வுகள் எண்ண அலைகளாகப் பரப்பியதையும்
2.அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளயும் வியாசகனால் அது சந்தர்ப்பத்தால் கண்டுணர முடிகின்றது.
 
ஏனென்றால் இதை எல்லாம் நம் தத்துவ ஞானிகள் சந்தர்ப்பத்தால் இதை பெறுகின்றனர். ஆகவே வியாசகன் அவனுக்குள் எதை விளைய வைத்தானோ அந்த உணர்வின் அணு செல்கள் வரப்படும்போது அது மற்றொரு உடலுக்குள் வரும்போது அதுவே வரும். 

ஆகவே ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால் நம்மையும் அது ஞானியாக மாற்றும். ஞானியாக நீங்கள் மாற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.